பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 24 MAY 2022 2:23PM by PIB Chennai

டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர். பைடனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  இந்த சந்திப்பு இருதரப்பு கூட்டாண்மைக்கு வலுவான உத்வேகத்தை கணிசமான அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது. 
2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனிலும், அதன் பின்னர் ஜி-20, சிஓபி 26 உச்சிமாநாடுகளிலும் இருதலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. மிக அண்மையில் கடந்த மாதம் 11-ந் தேதி இரு தலைவர்களும் மெய்நிகர் வடிவில் கலந்துரையாடினர்.
இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையானது ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு வகைசெய்கிறது. இருதரப்பு விஷயத்தில்  பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தியாவில் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைத்துறைகளில் தொடர்ந்து முதலீட்டு ஆதரவை வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதிக்கழகம் உதவும் வகையிலான முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதை இருதலைவர்களும் வரவேற்றனர். 
இந்தியா- அமெரிக்கா இடையே  பயன் சார்ந்த ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முன்முயற்சியை (ஐசிஇடி) இருதரப்பும் தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இணை தலைமையில், செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டிங், 5ஜி/6ஜி, பயோடெக், விண்வெளி மற்றும் செமிகண்டக்டர்கள் போன்றவற்றை, இரு நாடுகளின் அரசு, கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பயன்படுத்த ஐசிஇடி நெருக்கமான தொடர்பை உருவாக்கும்.
 பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவில் முக்கிய தூண் என்று குறிப்பிட்டு, இரு தரப்பினரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்தச் சூழலில், மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா அல்லது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் தன்னிறைவு இந்தியா திட்டங்களின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் கூட்டு சேருமாறு அமெரிக்க தொழில்துறைக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
சுகாதாரத் துறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல, தடுப்பூசிகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை உருவாக்க வகைசெய்யும் கூட்டு உயிரி மருத்துவ ஆராய்ச்சியைத் தொடரும்வகையில், இந்தியாவும் அமெரிக்காவும் நீண்டகால தடுப்பூசி செயல் திட்டத்தை (விஏபி) 2027 வரை நீட்டித்துள்ளன. 
இரு நாடுகளுக்கிடையேயான மக்களிடம் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு, பரஸ்பர நன்மை பயக்கும் உயர்கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் அழைப்பு விடுத்தார்.
தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர், சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட பார்வையை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
முன்னேற்றத்திற்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) தொடக்கத்தை வரவேற்ற பிரதமர், அந்தந்த தேசிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மற்றும் உள்ளடக்கிய ஐபிஇஎஃப்-ஐ வடிவமைக்க அனைத்து கூட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தலைவர்கள் தங்களின் பயனுள்ள உரையாடலைத் தொடரவும், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை உயர்மட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்கான தங்களது தொலைநோக்கை தொடரவும் ஒப்புக்கொண்டனர்.
                                                  ***************(Release ID: 1827981) Visitor Counter : 102