தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் - கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு
Posted On:
23 MAY 2022 6:07PM by PIB Chennai
வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்புவிடுத்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா அரங்கில் (பெவிலியனில்) இன்று நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான திரைப்பட பார்வையாளர்களின் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றும் முருகன் தெரிவித்தார்.
அரசின் சாதனைகள் குறித்துப் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து திரைத்துறையினரின் நலனுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.
குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அரசு அளித்துள்ள ஊக்குவிப்புகளைக் குறிப்பிட்ட அவர், திரைப்படத் தயாரிப்புத் துறையில் இருந்து திறமையான இந்திய ஸ்டார்ட்அப்களை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் எண்ணற்ற இந்திய திரைப்படத்துறையினர் பங்கேற்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது என்றார்.
வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களை இணைத்து திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்தும், இந்தியாவில் வெளிநாட்டுப் படங்களின் படப்பிடிப்புக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகளையும் அமைச்சர் முருகன் அப்போது எடுத்துரைத்தார். கதை சொல்லும் பாரம்பரியம் மற்றும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் பாரம்பரியத்துடன், இந்தியா இப்போது மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "திரைப்படத் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான அலுவலகத்தை விரிவுபடுத்தி, ஒற்றைச் சாளரத்தின் கீழ் பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறையை தடையின்றி செயல்படுத்துகின்றன" என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்றையச் சூழலில் பார்வையாளர்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லை என்றும், இந்தியாவில் இருந்து வரும் பிராந்தியத் திரைப்படங்கள் இப்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் டாக்டர் முருகன் தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்றுள்ள வெளிநாட்டுத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரையும் “இந்தியாவில் படமெடுக்க வாருங்கள்” என்றும் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் முருகன் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்வீடன், ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படத்துரையினர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
***************
(Release ID: 1827724)
Visitor Counter : 233