சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட் 19 தடுப்பூசி பயன்பாடு குறைந்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை

Posted On: 20 MAY 2022 2:52PM by PIB Chennai

நாடு முழுவதிலுமுள்ள ஒருசில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உந்துதல் தேவை என்று எடுத்துரைத்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜுன், ஜுலை மாதங்களில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மாநில சுகாதாரத்துறை முன்னெடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடு, வீடாக சென்று அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று ராஜேஷ் பூஷன் வலியுறுத்தினார்.

தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை என்பதையும், தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தினார்.

***************


(Release ID: 1826968) Visitor Counter : 201