தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு

Posted On: 12 MAY 2022 4:55PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கு தேர்தல் ஆணையம்  ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில், அண்மையில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். தேர்தல் திட்டமிடல், செலவுக் கண்காணிப்பு, வாக்காளர் பட்டியல், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, தரவு மேலாண்மை, விவிஎம்  / விவிபாட், உரிய நேரத்தில் குறை தீர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

இந்த மாநாட்டில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அடிப்படைகளை கற்றுக் கொள்வதற்கும் இத்தகைய மாநாடுகள் சிறந்த தளமாக உள்ளன என்று கூறினார்.  கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே ஐந்து மாநில தேர்தல்களை  சிறப்பாக  நடத்தி முடித்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.   தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும் மேம்படுத்த  வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநிலத்தில், தேர்தல் ஆணையத்தின்  முகங்களாக  திகழ்வதாகக் கூறிய அவர்,  எளிதில் அணுகும் வகையில் அவர்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள திரு ராஜீவ் குமாருக்கு பாராட்டுத் தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர், அவரது தலைமையின் கீழ், தேர்தல் ஆணையம் மிகப் பெரிய உச்சங்களைத் தொடவேண்டும் என்று வாழ்த்தினார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள திரு ராஜீவ் குமார், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பெருந்தொற்றுக்கிடையே, பீகாரில் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்திய தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.  தேர்தல் நடைமுறைகளை மேலும் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டேயும்,  மாநாட்டில் உரையாற்றினார். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824768

***************(Release ID: 1824802) Visitor Counter : 53