வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஓமனை சேர்ந்த உயர்மட்ட பல்துறைக் குழு மே 10 முதல் 14 வரை இந்தியாவில் பயணம்

Posted On: 10 MAY 2022 11:30AM by PIB Chennai

ஓமன் சுல்தானகத்தின் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுக்கான அமைச்சர் திரு கைஸ் பின் முகமது அல் யூசப் தலைமையிலான உயர்மட்ட பல்துறை பிரதிநிதிகள் குழு 2022 மே 10 முதல் 14 வரை இந்தியாவிற்கு வருகை தருகிறது. 48 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் உள்ளனர்.  மருந்துகள், சுரங்கம், சுற்றுலா, தொலைத்தொடர்பு, எரிசக்தி, கப்பல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் இதில் அடங்கும்.

இந்தப் பயணத்தின் போது, ​​இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள், மே 11, 2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் இந்தியா-ஓமன் கூட்டு ஆணையக் கூட்டத்தின் (ஜேசிஎம்) 10-வது அமர்வில் பங்கேற்பார்கள். இந்திய அரசின் வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஓமன் சுல்தானகத்தின் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுக்கான அமைச்சர் திரு கைஸ் பின் முகமது அல் யூசப் தலைமையில் இது நடைபெறும்.

2021-2022 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 82% வளர்ச்சியடைந்து 9.94 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள முக்கிய தருணத்தில் ஓமன் குழுவின் வருகை அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள நெருக்கமான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதார உறவுகளை புதுப்பிக்கவும், மேலும் வலுப்படுத்தவும் இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

மே 12, 2022 அன்று நடைபெறவுள்ள இந்தியா-ஓமன் கூட்டு வணிகக் குழுவின் கூட்டத்திற்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஓமன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. இரு தரப்பிலிருந்தும் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுவதோடு இந்தியா மற்றும் ஓமன் வணிக சமூகங்களுடன் தொடர்புகொள்வார்கள்.

புதுதில்லி மற்றும் மும்பையில் வர்த்தக நிகழ்வுகள், தொழில் தொடர்புகள், முதலீட்டாளர் சந்திப்புகள் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் இந்தியாவில் பயணம் செய்யவிருக்கும் ஓமன் பிரதிநிதிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824066

***************



(Release ID: 1824114) Visitor Counter : 129