பிரதமர் அலுவலகம்

‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை “இந்தியா தற்போது ‘வாய்ப்புகள் மற்றும் சாத்தியம்’ என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”


“நாடு தற்போது திறமை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கிறது”

“தற்சார்பு இந்தியா நாம் பின்பற்ற வேண்டிய பாதை மட்டுமின்றி நமது உறுதிப்பாடு ஆகும்”

“EARTH- சுற்றுச்சூழல், வேளாண்மை, மறுசுழற்சி, தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரசேவை-க்காக பாடுபடுங்கள்”

Posted On: 06 MAY 2022 12:34PM by PIB Chennai

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.05.2022) காணொலி வாயிலாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்ச்சியின் மையக்கருத்தான ‘அனைவரும் முயற்சிப்போம்’ என்ற உணர்வை சுட்டிக்காட்டியதுடன், இலக்குகளை அடைவதற்கான வளர்ச்சி குறித்த இந்தியாவின் உறுதிப்பாடுகளை உலகமே உற்று நோக்குவதாகக் கூறினார்.  சர்வதேச அமைதி, சர்வதேச வளம், சர்வதேச சவால்களுக்கான தீர்வு அல்லது  சர்வதேச விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது என, எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த உலகமும் பெரும் நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. “‘அமிர்தகாலம்’ தொடர்பான  இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இப்போதுதான் நாடு திரும்பியிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், பிரச்சனைக்குரிய துறையாக இருந்தாலும், மக்கள் கருத்தில் எத்தகைய வித்தியாசம் இருந்தாலும், புதிய இந்தியாவின் எழுச்சியால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக  பிரதமர் தெரிவித்தார். நாடு தற்போது, வாய்ப்புகள் மற்றும் சாத்தியம் என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக அனைவரும்  கருதுகின்றனர்.  தூய்மையான எண்ணம், தூய்மையான நோக்கம், மற்றும் சாதகமான கொள்கைகள் என்ற தமது முந்தைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், நாடு தற்போது, திறமை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை  இயன்றவரை ஊக்குவிக்கிறது என்றார்.  நாட்டில் தற்போது தினந்தோறும் ஏராளமான ஸ்டார்டப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு வாரமும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

 அரசு மின்னணு சந்தை (GeM) இணையதளம் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து, அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும், அனைவரது முன்னிலையிலும் ஒரே தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். தற்போது தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களும், சிறுவணிகர்கள் மற்றும் சுயஉதவிக் குழுவினரும் தங்களது உற்பத்தி பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் GeM இணையதளத்தில் இணைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

வெளிப்படையான ‘முக அறிமுகமற்ற’ வரி மதிப்பீடு, ஒரே நாடு- ஒரே வரி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்திற்கான நமது பாதையும், இலக்கும் தெளிவாக உள்ளன என்றும் பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியா, நாம் பின்பற்ற வேண்டிய பாதை மட்டுமின்றி நமது உறுதிப்பாடு ஆகும். பல ஆண்டுகளாகவே இதற்குத் தேவையான அனைத்து சூழலையும் உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் EARTH-ஐ பாதுகாக்க பணியாற்றுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். இதில் உள்ள
E’-என்பது சுற்றுச்சூழல் வளம் ஆகும் என்று அவர் விவரித்தார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த ஏரிகளை உருவாக்க எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

A’ – என்பது விவசாயத்தை மேலும் லாபகரமானதாக்கி, இயற்கை விவசாயத்தில் மேலும் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும்.

R’ – என்பதன் பொருள், மறுசுழற்சி மற்றும் சுற்றுப் பொருளாதாரம், மறுபயன்பாட்டிற்காக பாடுபடுவது, குறைத்தல் மற்றும் மறுசுழற்சியை வலியுறுத்துகிறது.

T’ – என்பது, தொழில்நுட்பத்தை இயன்றளவு அதிக மக்களிடம் கொண்டுசெல்லுதல் என்று பொருள்படும். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பெருமளவுக்கு கிடைக்கச்செய்யலாம் என்பது பற்றி பரிசீலிக்குமாறு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

H’ – என்பது சுகாதார சேவை என்று பொருள்படும் என குறிப்பிட்ட அவர், தற்போது சுகாதாரசேவை மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு பெருமளவு பாடுபட்டு வருவதாக கூறினார்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், அவர்களது அமைப்பு இதனை எந்தளவிற்கு ஊக்குவிக்கிறது என்பது பற்றி சிந்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

***************



(Release ID: 1823243) Visitor Counter : 151