மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

தில்லி ஐஐடி மாணவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில் முனைவோர் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் “கோ கஷ்ட்” எந்திரத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்

Posted On: 06 MAY 2022 12:28PM by PIB Chennai

தில்லி ஐஐடி மாணவர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் தொழில் முனைவோர் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் “கோ கஷ்ட்” என்னும் மாட்டுச் சாணத்தை விறகுகள் போல் வடிவமைக்கும் எந்திரத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு புருஷோத்தம் ரூபாலா இன்று வழங்கினார்

மாட்டுச் சாணத்தையும், உலர்ந்த வைக்கோல், தட்டை போன்ற கால்நடைக் கழிவுகளையும் இந்த எந்திரத்திற்குள் இட்டு கலந்து விறகுகள் போல் நீள வடிவில்,  எரிபொருளாக மாற்ற முடியும். இவை பின்னர் வெயிலில் உலர்த்தப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு நாளும், இந்த எந்திரத்தின் மூலம் 3,000 கிலோ கிராம் மாட்டுச் சாணத்தை எரிபொருளாக மாற்ற முடியும். இந்த எந்திரத்தில் தயாரிக்கப்படும் விறகு போன்ற பொருள்களைக் கொண்டு 5 முதல் 7 உடல்கள் வரை  தகனம் செய்யமுடியும்.  இதனால் தகனத்திற்காக வெட்டப்படும் 2 மரங்கள் பாதுகாக்கப்படும். மேலும் மாதம் ஒன்றுக்கு சுமார் 1,50,000 முதல்  1,70,000 கிலோ கிராம் வரையிலான மாட்டுச் சாணத்தை பசுப் பாதுகாப்பு  இடங்களை தூய்மைப்படுத்த இந்த எந்திரம் உதவும்.

மாட்டுச் சாணம் அடிப்படையிலான விறகுகள் தயாரிக்கும் எந்திரம் பசுப் பாதுகாப்பு இடங்களின் கழிவு மேலாண்மை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதோடு அங்குள்ள ஊழியர்களுக்கும் அருகில் உள்ள கிராமங்களுக்கும் கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்கும்; வனங்கள் அழிக்கப்படுவதைக் குறைப்பதிலும் பங்களிப்பு செய்யும்.

பால் தராத பசுமாடுகளைப் பொருளாதார செயல்பாட்டில், ஈடுபடுத்த இது உதவுவதோடு பசுப் பாதுகாப்பு இடங்களில் உள்ள அனைத்து பசுக்களுக்கும் நிதி உருவாக்கவும் உதவும்.

-----



(Release ID: 1823242) Visitor Counter : 153