பிரதமர் அலுவலகம்

வெப்ப அலை மேலாண்மை மற்றும் பருவமழை தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்


வெப்ப அலை அல்லது தீ விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்: பிரதமர்

நாட்டில் உள்ள காடுகளில் தீ விபத்து பாதிப்புகளைக் குறைப்பதற்கு முழுமையான முயற்சிகள் தேவை: பிரதமர்

‘வெள்ள முன்னெச்சரிக்கை திட்டங்களைத்’ தயார் செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

வெள்ள பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆயத்தநிலை திட்டங்களை வகுக்கும்

கடலோரப் பகுதிகளில் வானிலை எச்சரிக்கை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் அளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சமூக ஊடகங்களை தீவிரமாகப் பயன்படுத்துங்கள்: பிரதமர்

Posted On: 05 MAY 2022 7:54PM by PIB Chennai

வெப்ப அலை மேலாண்மை மற்றும் பருவமழை தயார்நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் 2022 மார்ச்- மே மாதங்களில்  வெப்பநிலை மிக அதிகமாக இருப்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கூட்டத்தின்போது எடுத்துரைத்தன. மாநில, மாவட்ட மற்றும் நகர அளவுகளில் வெப்ப செயல் திட்டங்களை தயார் செய்யுமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன. தென்மேற்கு பருவமழைக்குத் தயாராகும் வகையில் ‘வெள்ள முன்னெச்சரிக்கைத் திட்டங்களைத்' தயார் செய்யுமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. வெள்ள பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் ஆயத்தநிலை திட்டங்களை வகுக்குமாறு தேசிய பேரிடர் மீட்புப் படை கேட்டுக்கொள்ளப்பட்டது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சமூக ஊடகங்கள் தீவிரமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வெப்ப அலை அல்லது தீ விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இது போன்ற சம்பவங்களின் போது மீட்பு நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

வெப்பநிலை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு  மருத்துவமனைகளில் முறையான தீ விபத்து பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டில் உள்ள வனப்பகுதிகளில் தீ விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தீ விபத்தை உரிய நேரத்தில் முன்கூட்டியே கண்டறிவதற்கும் தீயை அணைப்பதற்கும் வன அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் திறனை மேம்படுத்த வேண்டும் மற்றும் தீ விபத்துக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் பருவமழையைக்  கருத்தில் கொண்டு மாசு ஏற்படுவதைத் தடுக்கவும், அதன் விளைவாக நீர் மூலம் பரவும் நோய்கள் பரவுவதைத் தவிர்க்கவும், குடிநீரின் தரத்தைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

வெப்ப அலை மற்றும் வரவிருக்கும் பருவமழையின் போது ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயாராகும் வகையில் மத்திய மற்றும் மாநில முகமைகள் இடையே சிறந்த ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

பிரதமரின் முதன்மை செயலாளர், பிரதமரின் ஆலோசகர்கள், அமைச்சரவை செயலாளர், உள்துறை, சுகாதாரம், ஜல் சக்தி அமைச்சகங்களின் செயலாளர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***************



(Release ID: 1823179) Visitor Counter : 194