பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை செய்தி

Posted On: 02 MAY 2022 8:15PM by PIB Chennai

பிரதமர் ஸ்கால்ஸ் அவர்களே,

நண்பர்களே,

குடன் டாக், நமஸ்காரம்!

 எனக்கும், எனது தூதுக் குழுவினருக்கும் அன்பான வரவேற்பளித்த பிரதமர் ஸ்கால்ஸ்-க்கு முதற்கண் எனது இதயப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்த ஆண்டின் எனது முதல் வெளிநாட்டுப் பயணம், ஜெர்மனியில் இருந்து தான் தொடங்குகிறது.   இந்த ஆண்டில் வெளிநாட்டுத் தலைவருடனான எனது முதல் தொலைபேசி உரையாடலும் பிரதமர் ஸ்கால்ஸ் உடன் தான் நடைபெற்றது.   இதுபோன்ற அனைத்து முதல் நடவடிக்கைகளும், இந்தியாவும் ஜெர்மனியும், முக்கியமான இந்த நட்புறவுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதையே எடுத்துக் காட்டுகிறது.   ஜனநாயக நாடுகள் என்ற முறையில், இந்தியாவும் ஜெர்மனியும், பல்வேறு பொதுவான நற்பண்புகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன.  இந்த நற்பண்புகள் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன் அடிப்படையில்,  கடந்த பல ஆண்டுகளில் நம்மிடையேயான இருதரப்பு நட்புறவு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. 

நம்மிடையேயான, அரசாங்க அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம், கடைசியாக 2019-ல் நடைபெற்றது.   அதிலிருந்து, உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  கோவிட்-19 பெருந்தொற்று, சர்வதேச பொருளாதாரத்தை பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்திய புவிஅரசியல் நிகழ்வுகளும், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மை எந்தளவு சீர்குலைந்துள்ளது என்பதையும், அனைத்து நாடுகளும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன என்பதையும் எடுத்துரைக்கிறது.   உக்ரைன் பிரச்சினையின் தொடக்கத்திலிருந்தே, அங்கு உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும்,  பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.   இந்தப் போரில் எத்தரப்புக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை, அனைவருக்கும் பாதிப்பு தான் ஏற்படும்.  எனவே தான் நாங்கள் அமைதியை வலியுறுத்தி வருகிறோம்.  உக்ரைன் மோதலால் எண்ணெய் விலை வாண் அளவிற்கு அதிகரித்துள்ளது; உலகெங்கும் உணவு தான்யங்கள் மற்றும் உரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இது, உலகிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் சுமையை ஏற்படுத்தியுள்ளது, ஆனால், வளரும் மற்றும் ஏழை நாடுகள் மீதான இதன் தாக்கம், மிக மோசமானதாக இருக்கும்.  இந்த மோதலால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான விளைவுகளால் இந்தியா மிகுந்த கவலை அடைந்துள்ளது.   உக்ரைன் நாட்டிற்கு நாங்களும் மனிதாபிமான உதவிகளை வழங்கியிருக்கிறோம்.   பிற நட்பு நாடுகளுக்கும்,  உணவுப்பொருள் ஏற்றுமதி, எண்ணெய் வினியோகம் மற்றும் பொருளாதார உதவிகள் வாயிலாக உதவவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.  

அரசுகளுக்கிடையிலான ஆறாவது ஒருங்கிணைப்புக் கூட்டம் வாயிலாக, இந்தியா – ஜெர்மணி நட்புறவு தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில், நமது ஒத்துழைப்பிற்கு இந்தக் கூட்டம், முக்கியமான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.  இன்று நாம் மேற்கொண்டுள்ள முடிவுகள், நமது பிராந்தியம் மற்றும் உலகின் எதிர்காலம் மீது ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.   கிளாஸ்கோ மாநாட்டில் எழுப்பப்பட்ட பருவநிலை குறிக்கோள் மூலம், பசுமை மற்றும நீடித்த வளர்ச்சி என்பதை இந்தியா உலகிற்கு உணர்த்தியுள்ளது.  இந்த புதிய ஒத்துழைப்பின் மூலம், இந்தியாவின் பசுமை வளர்ச்சித் திட்டங்களுக்கு, 2030-க்குள் கூடுதலாக 10 பில்லியன் யூரோ நிதியுதவி வழங்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.  இதற்காக, ஜெர்மன் பிரதமர் ஸ்கால்ஸ்-க்கு நான் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

நமது வலிமைகளைக் கருத்திற்கொண்டு, பசுமை ஹைட்ரஜன் நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க நாம் முடிவு செய்திருக்கிறோம்.    

நண்பர்களே,

கோவிட்டிற்கு பிந்தைய உலகில், மற்ற வளரும் பொருளாதார நாடுகளுன் ஒப்பிடுகையில், இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.   உலகளாவிய மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா முக்கியத் தூணாக திகழ்கிறது.  அண்மையில், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஆஸ்திரேலியாவுடன், குறுகிய காலத்தில் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.  ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நாங்கள் தடையற்ற வர்த்தக வர்த்தக ஒப்பந்தம்  தொடர்பாக விரைவில் முன்னேற்றத்தை எட்ட உறுதி பூண்டுள்ளோம்.  இந்தியாவின் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் மற்றும் வல்லுநர்கள், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றியுள்ளனர்.   இந்தியா – ஜெர்மனி  இடையிலான விரிவான புலம்பெயர்தல் மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான செயல்பாடுகளுக்கு வகை செய்யும் என நான் நம்புகிறேன்.  

இந்த மாநாடு மற்றும் உங்களது முன்முயற்சிகளுக்காக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

*****(Release ID: 1822312) Visitor Counter : 145