பிரதமர் அலுவலகம்

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டில் பிரதமரின் உரை

Posted On: 29 APR 2022 1:50PM by PIB Chennai

மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி திரு என்.வி ரமணா அவர்களே, நீதிபதி திரு யு.யு. லலித் அவர்களே, மத்திய சட்ட அமைச்சர் திரு ரிஜிஜு அவர்களே, இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் அவர்களே, அனைத்து மாநிலங்களின் மதிப்பிற்குரிய முதலமைச்சர்கள் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களே, இந்திய உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகளே, உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளே, இதர விருந்தினர்களே!

மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் இந்தக் கூட்டு மாநாடு நமது அற்புதமான அரசியலமைப்பின் பிரதிபலிப்பாகும்.  நமது நாட்டில் நீதித் துறை, அரசியலமைப்பின் பாதுகாவலனாக செயல்படுகையில், சட்டமன்றங்கள், குடிமக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கின்றன. அரசியலமைப்பின் இந்த இரு பிரிவுகளின் சங்கமமும் சமன்பாடும், நாட்டில் தரமான மற்றும் உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று, விடுதலையின் அமிர்த பெருவிழாவின் போது, புதிய உறுதிமொழிகளையும், புதிய கனவுகளையும் நாடு கொண்டுள்ள வேளையில், எதிர்காலத்தை நோக்கி நாமும் முன்னேற வேண்டும். 2047-இல் நாடு தனது சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, எத்தகைய நீதி அமைப்புமுறை இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம்? 2047-இல் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நமது நீதி அமைப்புமுறையை எவ்வாறு செயல்படுத்துவது? இதுதான் இன்று நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். அணுகக்கூடிய,  விரைவான மற்றும் அனைவருக்குமான நீதி என்பதே அமிர்த காலத்தில் நமது நீதி அமைப்புமுறையின் தொலை நோக்குப் பார்வையாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

காலதாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. நீதித்துறைக்கு மேலும் வலு சேர்க்கவும், துறைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வழக்கு மேலாண்மைக்காக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உயர்நீதிமன்றங்கள் வரை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கும் இதில் மிகப்பெரும் பங்குண்டு. 

நண்பர்களே,

இன்று, தொழில்நுட்பம் என்பது மக்கள் உரிமைக்கான முக்கிய சாதனமாக மாறியுள்ளது. நீதித்துறையில், டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் அடிப்படை அங்கமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்திய அரசும் முயற்சி மேற்கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நீதித்துறையில் மின்னணுமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. சிறப்பு முன்னுரிமை அளித்து, இதனை முன்னெடுத்துச் செல்லுமாறு அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை வலியுறுத்துகிறேன். டிஜிட்டல் இந்தியாவுடன் நீதித்துறையை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மின்னணு பரிமாற்றம் என்பது நடக்க முடியாத விஷயமாக இருந்தது. ஆனால், இன்று, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் கூட மின்னணு பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மின்னணு பரிமாற்றங்களுள் 40% இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

நண்பர்களே,

தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத்திற்கான அணுகுமுறை பற்றி நாம் பேசுகையில் மனித வளத்திற்கு ஏதுவான தொழில்நுட்பம் என்பதும் முக்கியம் அம்சமாகும். பிளாக்செயின், மின்னணு ஆராய்ச்சி, சைபர் பாதுகாப்பு, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி நெறிமுறைகள் முதலியவை பல்வேறு நாடுகளின் சட்ட பல்கலைக்கழகங்களில் கற்றுத்தரப்படுகின்றன. நமது நாட்டிலும் இது போன்ற சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக சட்டக் கல்வி அமைய வேண்டும்.

நண்பர்களே,

எந்த ஒரு நாட்டிலும் நீதிதான் அடிப்படை ஆளுகையாக உள்ளது. எனவே, நீதி, மக்களுடன் இணைந்ததாக இருக்க வேண்டும், மக்கள் மொழியாக இருக்க வேண்டும். வரும் நாட்களில், நம் நாட்டில் உள்ள சட்டங்களுக்கு முழுமையான ‘சட்ட சொற்கள்' மட்டுமின்றி, சாமானியர்களும் புரிந்து கொள்ளும் மொழியில் அதே சட்டங்களின் எளிமையான பதிப்பும் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம்.

நண்பர்களே,

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் நீதித்துறை மீது சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சாதாரண மனிதருக்கு சட்டத்தை புரிய வைப்பதும் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. 2015-ஆம் ஆண்டு, சம்பந்தமில்லாத சுமார் 1800 சட்டங்களை நாம் கொண்டிருந்தோம். இவற்றில் மத்திய அரசின் சட்டங்களில் 1450 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும் மாநிலங்களால் 75 சட்டங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. அனைத்து முதலமைச்சர்களும் இங்கு இருப்பதால், உங்கள் மாநில மக்களின் உரிமைகளுக்காக, அவர்களின் வாழ்க்கை வசதிக்காக, அதுபோன்ற சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

மனித உணர்வுகளுக்கும் நாம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் கைதிகள் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற வழக்குகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், இது போன்ற கைதிகளை பிணையில் விடுவிக்கலாம். மனிதாபிமான அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் இது போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு முதல்வர்களையும், நீதிபதிகளையும் கேட்டுக்கொள்கிறேன். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தம் முக்கியமான வழியாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் அரசு நாடாளுமன்றத்தில் மத்தியஸ்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும் புதிய யோசனைகள் புதிய இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றும் ஊடகமாக செயல்படும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி!

           ***************

(Release ID: 1821534)



(Release ID: 1821997) Visitor Counter : 133