பிரதமர் அலுவலகம்

கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

Posted On: 01 MAY 2022 9:49PM by PIB Chennai

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் மற்றும் குஜராத் தின நாள் நல்வாழ்த்துகள்! இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய மாண்புகளை கனடாவில் உயிர்ப்பித்து இருக்கச் செய்வதில் ஒன்டாரியோவில் செயல்படும் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தின் பங்களிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த முன்முயற்சியை மேற்கொண்ட சனாதன் மந்திர் கலாச்சார மையம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சனாதன் ஆலயத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த சிலை, நமது கலாச்சார மாண்புகளை வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சின்னமாகவும் திகழும்.

நண்பர்களே,

இந்தியர் ஒருவர் உலகில் எங்கு வசித்தாலும், எத்தனை தலைமுறைகள் அவர் வாழ்ந்திருந்தாலும், இந்தியர் என்ற அவரது உணர்வு, இந்தியா மீதான அவரது பற்றும் சிறிதளவும் குறையாது. இந்தியாவிலிருந்து அவரது மூதாதையர்கள் எடுத்துச்சென்ற ஜனநாயக மாண்புகள், கடமை உணர்வு முதலியவை அவரது மனதில் என்றும் நிலைத்திருக்கிறது.

‘வசுதைவ குடும்பகம்' பற்றி பேசும் உயரிய சிந்தனையை இந்தியா பெற்றுள்ளது. பிறரது வீழ்ச்சியில் தனது வளர்ச்சி பற்றி இந்தியா கனவு காணாது. ஒட்டுமொத்த மனித சமூகம் மற்றும் உலக நாடுகளின் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது.

எனவே, இந்திய சுதந்திரத்தின் அமிர்த மகோத்சவத்தை நீங்கள் கனடாவில் கொண்டாடினால், ஜனநாயகத்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட பாரம்பரியத்தின் கொண்டாட்டமும் உள்ளது. இந்திய சுதந்திரத்தின் அமிர்த மகோத்சவத்தின் இந்த கொண்டாட்டம், இந்தியா பற்றி கனடா மக்கள் மேலும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கும்.

நண்பர்களே,

அமிர்த மகோத்சவத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சி, சனாதன் மந்திர் கலாச்சார மையத்தின் வளாகம் மற்றும் சர்தார் படேலின் சிலை ஆகியவையே இந்தியா பற்றிய மிகப்பெரிய முன்னுதாரணமாகும். நவீன, முன்னேறும் இந்தியா,  தனது சிந்தனை தத்துவங்கள், எண்ணங்களால், வேர்களுடன் இணைக்கப்பட்ட நாடாகவும் விளங்குகிறது. அதனால் தான் சுதந்திரத்திற்கு பிறகு புதிய கட்டத்தில் இருந்த இந்தியாவிற்கு ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் சோம்நாத் ஆலயத்தை சர்தார் அவர்கள் மீட்டெடுத்தார்.

எனவே விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் போது இது போன்ற புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதி ஏற்றுள்ளோம்.  இதில் ‘ஒற்றுமை சிலை’, நாட்டிற்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது.

நண்பர்களே,

இந்தியாவின் அமிர்த உறுதிமொழிகள் என்பது இந்தியாவின் எல்லைகளுக்கு மட்டுமானது அல்ல என்பதை இன்றைய நிகழ்வு எடுத்துரைக்கிறது. இந்த உறுதிமொழிகள் ஒட்டுமொத்த உலகையும் இணைக்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் பரவுகின்றன. தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை நாம் முன்னெடுத்துச் செல்லும் வேளையில், உலகின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் பற்றியும் நாம் பேசுகிறோம்.

பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் இந்தியா குரல் கொடுக்கிறது. இந்தியாவின் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தருணம், இது. நமது கடின உழைப்பு நமக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமானது என்பதையும், இந்திய வளர்ச்சியுடன் அது இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இதில் மிகப்பெரும் பங்குண்டு.

இந்தியாவின் முயற்சிகள், எண்ணங்களை உலகிற்கு உணர்த்தும் ஊடகமாக அமிர்த மகோத்சவத்தின் இது போன்ற நிகழ்ச்சிகள் செயல்பட வேண்டும், இதுவே நமது முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி!

குறிப்பு: இது, பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் நிகழ்த்தியிருந்தார்.

***************

 

(Release ID: 1821893)



(Release ID: 1821964) Visitor Counter : 161