குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பொறுப்பான ஊடக செய்திப்பதிவுக்குக் குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
27 APR 2022 12:29PM by PIB Chennai
நெறிமுறை சார்ந்த பத்திரிகை துறை மாண்புகளை பின்பற்றுமாறும், தங்களின் செய்திப்பதிவுகளில் பொறுப்புடன் இருக்குமாறும் ஊடகங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லூரில் இன்று அகில இந்திய வானொலியின் பண்பலை வரிசை நிலையத்தை தொடங்கிவைத்தார். அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வருகை தந்த பின் நேரலை மூலம் சிறப்புரை ஆற்றிய திரு நாயுடு நெல்லூர் மக்களுக்கு பண்பலை வரிசை கோபுரத்தை அர்ப்பணித்தார். தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த போது தம்மால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிலையம் இன்று செயல்பாட்டிற்கு வந்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய திரு நாயுடு, மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிமயமான செய்திகள் குறித்து கவலை தெரிவித்தார். தவறான தகவல் அளிப்பது சில நேரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் உணர்ச்சியை தூண்டுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
டிஜிட்டல் யுகத்தில் ஊடகத்தின் வீச்சு மிகவும் விரிவடைந்துள்ளது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர் சமூகத்தின் எதார்த்தங்களை ஊடகம் பிரதிபலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஊடகங்கள் தாங்களாகவே முறைப்படுத்தி கொள்வது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் நேர்மையையும், நெறிமுறையையும் பின்பற்றுகின்ற ஊடக நிறுவனங்களை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
தொலைக்காட்சி விவாதங்களின் தரம் வீழ்ச்சியடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, கூடுதலான அர்த்தமுள்ள, மதிப்புமிக்க, முக்கியமான தேசிய விஷயங்களில் விவாதங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப்பி்ரதேச வேளாண்துறை அமைச்சர் திரு கக்கானி கோவர்த்தன் ரெட்டி, பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சசி சேகர் வெம்பட்டி அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குனர் திரு என் வேணுதார் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***************
(Release ID: 1820487)