பிரதமர் அலுவலகம்

காந்திநகரில் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்


பொது சுகாதாரத்தில் புதுமை ஆற்றலை பயன்படுத்தியதற்காக பிரதமருக்கும், இந்திய அரசுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் பாராட்டு

“உங்களது தலைமை பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும்”. பிரதமருக்கு தலைமை இயக்குனர் பாராட்டு

“டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசசுக்கு ‘துளசி பாய்’ என்ற குஜராத்தி பெயரை பிரதமர் வழங்கினார்”

“ஆயுஷ் துறையில் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் எல்லையற்ற அளவில் உள்ளன”

“2014-ல் 3 பில்லியன் டாலரை விட குறைவாக இருந்த ஆயுஷ் துறை 18 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது”

“இந்தியா மூலிகை தாவரங்களின் கருவூலமாக உள்ளது. ஒருவகையில் அது ‘பசுமைத் தங்கம்’ ஆகும்”

“கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுடன்
50-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. நமது ஆயுஷ் நிபுணர்கள் இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் சேர்ந்து ஐஎஸ்ஓ தரத்தை உருவாக்கி வருகின்றனர். இது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுஷூக்கு மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையை உருவாக்கும்”

“எஃப்எஸ்எஸ்ஏஐ-ன் ஆயுஷ் ஆகார் மூலிகை ஊட்டச்சத்து உற்ப

Posted On: 20 APR 2022 1:24PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகர் மகாத்மா மந்திரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உலகளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ்  கெப்ரியேசஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு.சர்பானந்த சோனோவால், திரு.முஞ்சப்பாரா மகேந்திரபாய் ஆகிய மத்திய அமைச்சர்கள் குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேல் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த 3 நாள் உச்சி மாநாட்டில் 5 முழு அமர்வுகள், 8 வட்டமேஜை கூட்டங்கள், 6 பயிலரங்குகள், 2 கருத்தரங்குகள் ஆகியவை நடைபெறும். இதில் சுமார் 90 பிரபலமான பேச்சாளர்கள் பங்கேற்பார்கள். 100 கண்காட்சி நிறுவனங்கள் இடம்பெறும். முதலீட்டு ஆதாரத்தை கண்டறியவும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஸ்டார்ட் அப் சூழல், தொழில் நலன்களை மேம்படுத்தவும் இந்த உச்சிமாநாடு உதவும். தொழில் துறை முன்னணி நிறுவனங்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரை ஒன்றுபடுத்தி எதிர்கால ஒத்துழைப்புக்கு இது உதவும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், உலகின் பெருமையாக கருதப்படும் மகாத்மா காந்தியின் சொந்த மாநிலம் மற்றும் நாட்டுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார். இந்தியாவின் வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவம் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை ஜாம்நகரில் நேற்று தொடங்குவதற்கு உந்து சக்தியாக திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்த மையம் உருவாக்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறிய அவர், இதுவொரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்றார். பாரம்பரிய மருத்துவத்தை பெருமளவுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட உள்ளது. பொது சுகாதாரத்தில் புதுமை ஆற்றலை பயன்படுத்தியதற்காக பிரதமருக்கும், இந்திய அரசுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் பாராட்டு தெரிவித்தார். இந்திய மருத்துவமனைகளில் தரவுகள் மற்றும் ஒருங்கிணைந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதை அவர் புகழ்ந்துரைத்தார். பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கான தரவுகளை சேகரிக்க ஆயுஷ் அமைச்சகம் ஊக்கமளித்து வருவதையும் அவர் பாராட்டினார். ஆயுஷ் பொருட்களில் முதலீடு செய்வதில் உலகளவில் ஆர்வம் அதிகரித்து வருவது பற்றி குறிப்பிட்ட தலைமை இயக்குனர், உலகம் முழுவதும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இந்தியா உலகம் முழுவதற்கும் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். பொதுவாக சுகாதார சூழல்,  குறிப்பாக பாரம்பரிய மருந்துகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நீண்ட கால முதலீடு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த பாரம்பரிய மருந்துகளை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் அறிவுசார் சொத்துரிமையை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறிய அவர், பிரதமருக்கு நன்றி கூறி தமது உரையை நிறைவு செய்தார். உங்களது தலைமை பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும் என்று பிரதமருக்கு தலைமை இயக்குனர் பாராட்டுத் தெரிவித்தார். பாரம்பரிய மருத்துவத்தின் ஈடுபாடு கொண்ட மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவிந்த் குமார் ஜூக்நாத்தையும் அவர் பாராட்டினார். விடுதலையின் அமிர்த பெருவிழாவும், உலக சுகாதார அமைப்பின் 75 ஆண்டுகளும் ஒன்றுபடுவதை அவர் சுட்டிக்காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

பாரம்பரிய மருத்துவத்தின் பங்களிப்புக்காக இந்தியாவையும், குஜராத்தையும் திரு.பிரவிந்த் குமார் ஜூக்நாத் பாராட்டினார். தமது நாட்டில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் ஆதரவை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுடன் நீண்ட உறவு கொண்டுள்ள மொரீஷியசில் ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறிய அவர், தமது நாட்டில் ஆயுர்வேத மருத்துவமனையை உருவாக்கியதற்காகவும், முதல் பொது முடக்கத்தின்போது பாரம்பரிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியதற்காகவும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார். இந்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கும் தாங்கள் நன்றிக்கடன்பட்டிருப்பதாக திரு.பிரவிந்த் குமார் ஜூக்நாத் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் வலுசேர்த்ததை உணர்ந்து இந்த உச்சிமாநாடு குறித்த சிந்தனை தமக்கு வந்ததாக குறிப்பிட்டார். ஆயுஷ் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பும், தேவையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். பெருந்தொற்றை சமாளிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், நவீன மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வத்தையும், அக்கறையையும் பாராட்டினார். உரிய நேரத்தில் முதலீடு கிடைக்கும்போது, கொரோனா தடுப்பூசியை வெகு விரைவில் உருவாக்க நம்மால் முடிந்தது என்று தெரிவித்தார். ஆயுஷ் துறையின் சாதனைகளை விளக்கிய பிரதமர், “ஆயுஷ் மருந்துகள், துணை மருந்துகள், வாசனை திரவியங்கள் உற்பத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை நாம் கண்டு வருகிறோம். 2014-ல் 3 பில்லியன் டாலரை விட குறைவாக இருந்த ஆயுஷ் துறை 18 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது” என்று கூறினார். பாரம்பரிய மருத்துவத்தில் ஸ்டார்ட் அப் கலாசாரத்தை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் வழிகாட்டுதல் மையத்தை உருவாக்கியதை திரு.மோடி சுட்டிக்காட்டினார். தற்போதைய காலம் யுனிகார்ன் நிறுவனங்களின் யுகமாக மாறியுள்ளதாக தெரிவித்த பிரதமர், 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியாவை சேர்ந்த 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் கிளப்பில் சேர்ந்துள்ளன. “நமது ஆயுஷ் ஸ்டார்ட் அப்-களும் வெகு விரைவில் யுனிகார்ன்களாக மாறுவது நிச்சயம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மருத்துவ தாவரங்களை உருவாக்குவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிப்பதுடன் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்புகளும் இதில் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் சந்தையை தங்கள் உற்பத்திப் பொருட்களுக்காக அணுகுவது எளிதாகும் என்றும் அவர் கூறினார். இதற்காக அரசு ஆயுஷ் இ-சந்தையை விரிவாக்கி நவீனமயமாக்க உத்தேசித்துள்ளதாக  கூறிய அவர், “இந்தியா மூலிகை தாவரங்களின் கருவூலமாக உள்ளது. ஒருவகையில் அது ‘பசுமைத் தங்கம் ஆகும்” என்றார்.

ஆயுஷ் பொருட்களை ஏற்றுமதி செய்ய கடந்த காலங்களில் அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், மற்ற நாடுகளுடன் ஆயுஷ் மருந்துகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளில் இதற்காக 50-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டதாக கூறிய அவர், “நமது ஆயுஷ் நிபுணர்கள் இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் சேர்ந்து ஐஎஸ்ஓ தரத்தை உருவாக்கி வருகின்றனர்இது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுஷூக்கு மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையை உருவாக்கும் என்றார்.

எஃப்எஸ்எஸ்ஏஐ கடந்த வாரம் தனது விதிமுறைகளுக்கு ஆயுஷ் ஆகார் என புதிய பெயரில் அறிவித்துள்ளதாக திரு.மோடி தெரிவித்தார். இது மூலிகை ஊட்டச்சத்து உற்பத்தியாளர்களுக்கு பெருமளவிற்கு உதவும் என்று அவர் கூறினார். இதே போல இந்தியா சிறப்பு ஆயுஷ் முத்திரையை உருவாக்க உள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் உயர்தரமான ஆயுஷ் பொருட்களுக்கு வழங்கப்படும். இந்த ஆயுஷ் முத்திரை நவீன தொழில்நுட்பத்துடன் அளிக்கப்படும். இது உலகம் முழுவதும் ஆயுஷ் பொருட்களின் தரத்திற்கு நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

நாடு முழுவதும் ஆயுஷ் பொருட்களை உற்பத்தி செய்வதுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க ஆயுஷ் பூங்காக்கள் கட்டமைப்பை அரசு உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். இந்த ஆயுஷ் பூங்காக்கள் இந்தியாவில் ஆயுஷ் உற்பத்திக்கு புதிய வழிகாட்டுதலை வழங்கும் என்றார் அவர்.

பாரம்பரிய மருந்து ஆதார வளம் குறித்து பேசிய பிரதமர்,  பாரம்பரிய மருத்துவத்தின் பங்கு காரணமாக கேரளாவில் சுற்றுலா அதிகரித்து வருவதாக தெரிவித்தார். “இந்த வளம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. இந்தியாவின் குணமடைதல், இந்த 10 ஆண்டில் மிகப் பெரிய வணிக முத்திரையாக இருக்கக் கூடும்” என்று அவர் கூறினார். ஆயுர்வேதம், யுனானி, சித்தா சார்ந்த நலவாழ்வு மையங்கள் மிகவும் பெயர் பெற்றவையாக விளங்கக் கூடுமென அவர் தெரிவித்தார். இதனை மேலும் ஊக்குவிக்க அரசு ஆயுஷ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை புரியும் வெளிநாட்டவர்களுக்காக மற்றொரு முன்முயற்சியை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். “வெகு விரைவில் ஆயுஷ் சிகிச்சைக்காக இந்தியா வருவோருக்கு சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது. இது ஆயுஷ் சிகிச்சைக்காக இந்தியா வருவோருக்கு பெருமளவு உதவும்” என்று பிரதமர் கூறினார்.

கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவின் கண்பார்வையை ஆயுஷ் சிகிச்சை மீட்டு கொடுத்த ஆயுர்வேதத்தின் வெற்றிக்கதையை பிரதமர் விளக்கினார். ரோஸ்மேரி ஒடிங்காவை மேடைக்கு அழைத்து பிரதமர் அறிமுகம் செய்தபோது, கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. இந்தியா 21 ஆம் நூற்றாண்டில் தனது அனுபவங்களையும், ஞானத்தையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார். நமது பாரம்பரியம் மனிதகுலம் முழுவதற்கும் ஒரு மரபாக திகழ்கிறது என்று அவர் கூறினார். ஆயுர்வேதத்தின் முன்னேற்றத்திற்கு அதன் வெளிப்படையான ஆதார மாதிரியே முக்கிய காரணமாகும் என்று கூறிய அவர், தகவல் தொழில்நுட்பத் துறையை இதனுடன் ஒப்பிட்டார். ஆயுர்வேத பாரம்பரியம், ஞானத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் மேலும் வலிமையடையும் என்று கூறிய பிரதமர், நமது மூதாதையர்களிடமிருந்து இதற்கான ஊக்கத்தை பெற்று பாடுபட வேண்டுமென்று வலியுறுத்தினார். அடுத்த 25 ஆண்டு அமிர்த காலம் பாரம்பரிய மருந்துகளின் பொற்காலமாக திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் நமது உரையை சுவையூட்டும் வகையில் நிறைவு செய்தார். டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசசின் இந்தியா மீதான அன்பை விளக்கிய திரு.மோடி, தமது இந்திய ஆசிரியர்கள், குஜராத் மீதான தமது பரிவு ஆகியவற்றை விளக்கி அவருக்கு குஜராத்தி பெயரான துளசி பாய் என்ற பெயரை வழங்கினார். இந்தியப் பாரம்பரியத்தில் துளசியின் மகிமையை அவர் விளக்கினார். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதற்காக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் மற்றும் மொரீஷியஸ் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 ***************



(Release ID: 1818401) Visitor Counter : 212