பிரதமர் அலுவலகம்

பிரதமர் வீட்டுவசதி திட்ட பயனாளிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்; உறுதியான வீடு சிறப்பான எதிர்காலத்திற்கான அடித்தளம் என பெருமிதம்


“பயனாளிகள் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள், தொடர்ந்து இடையறாது உழைக்கவும், நாட்டுக்கு இடைவெளியின்றி சேவை புரியவும் ஊக்கத்தையும், ஆற்றலையும் வழங்குகிறது”

Posted On: 12 APR 2022 10:53AM by PIB Chennai

“வீடு என்பது  வெறும் செங்கற்களாலும், சிமெண்டாலும் கட்டப்பட்ட ஒரு கட்டுமானம் மட்டுமல்ல, அது நமது உணர்வுகள் மற்றும் விருப்பங்களுடன் பின்னிப் பிணைந்ததாகும். வீட்டின் சுற்றுச்சுவர்கள் நமக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், நம்பிக்கையையும் சிறப்பான எதிர்காலத்தையும் ஏற்படுத்துகிறது”. இதுதான் பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர்குமார் ஜெயின் என்பவருக்கு, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து  எழுதிய கடிதத்தில்  இடம் பெற்றுள்ள வாசகமாகும். உங்களுக்கென அமைந்த வீடும், சொந்த கூரையும் அளிக்கும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சுதிருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களது சொந்த வீட்டுக்கனவு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் நனவாகியுள்ளது. இந்த சாதனைக்கு பின்னர் ஏற்பட்டுள்ள உங்களது மனநிறைவை  உங்கள் கடிதத்தில் வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருந்ததை எளிதாக உணர முடிகிறது. இந்த வீடு உங்களது குடும்பத்தின் வாழ்க்கைக்கும், உங்களது இரண்டு குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கும் ஒரு கண்ணியமான புதிய அடித்தளமாக அமைந்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை கோடிக்கணக்கான  பயனாளிகள் தங்களது வீடுகளை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தேவையான ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவது என்ற  இலக்கை நோக்கி அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு பொது நலத்திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவர அரசு உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 சுதிருக்கு எழுதிய கடிதத்தில், அவரைப் போன்ற பயனாளிகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இத்தகைய மறக்க முடியாத தருணங்கள் தமக்கு தொடர்ந்து இடையறாது உழைக்கவும், நாட்டுக்கு இடைவெளியின்றி சேவை புரியவும் ஊக்கத்தையும், ஆற்றலையும் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அண்மையில் சுதிர் தனது உறுதியான வீட்டை பெற்றிருந்தார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதினார். பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டம், வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சுதிர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு வாடகை வீட்டில் தான் வசித்து வந்ததாகவும், ஆறு, ஏழு முறை வீட்டை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.  அடிக்கடி வீடு மாற்றுவதால் ஏற்படும் வேதனையை அவர் தனது கடிதத்தில் பகிர்ந்திருந்தார்.

***************



(Release ID: 1815977) Visitor Counter : 364