தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமர்நாத் யாத்திரை 2022-ஐ விளம்பரப்படுத்துவது குறித்து தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 11 APR 2022 4:48PM by PIB Chennai

30, ஜூன் 2022 தொடங்கி 43 நாட்கள் நடைபெறவுள்ள அமர்நாத் புனித யாத்திரை குறித்து, விரிவாக விளம்பரப்படுத்துவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு.அபூர்வ சந்திரா ஸ்ரீநகரில் இன்று (11.04.2022) ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் அரசின் தலைமை செயலாளர் திரு.அருண் குமார் மேத்தா, அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.நிதிஷ்வர் குமார், ஜம்மு-காஷ்மீர் அரசின் முதன்மை செயலாளர் திரு.ரோஹித் கன்சால், மத்திய அரசின் உயரதிகாரிகளான தகவல் ஒலிபரப்பு அமைச்சக இணை செயலாளர் திரு.விக்ரம் சகாய், அகில இந்திய வானொலியின் முதன்மை தலைமை இயக்குனர் (செய்தி) திரு.என்.வி.ரெட்டி, தூர்தர்ஷன் தலைமை இயக்குனர் திரு.மயங்க் அகர்வால், ஸ்ரீநகர் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு.ராஜீந்தர் சௌத்ரி மற்றும் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திரு.அபூர்வ சந்திரா, யாத்திரை காலம் முழுவதும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப் பிரிவுகளும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு விளம்பர நடவடிக்கைகளை திட்டமிடும் என்றார். அமர்நாத் யாத்திரை குறித்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பகுதியின் சுற்றுலா நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து, மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் பல்வேறு சாதனைகளை விளம்பரப்படுத்துவது அவசியம். இந்தப் பிராந்தியத்தின் வெற்றிக் கதைகளை நாடு முழுவதும் தெரிவிக்க வேண்டும்என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு சுமார் 6 முதல் 8 லட்சம் யாத்திரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு.அபூர்வ சந்திரா தெரிவித்தார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு.விக்ரம் சகாய் பேசுகையில், யாத்திரைக்கான பதிவு தொடக்கம் முதல் யாத்திரை நிறைவடையும் வரையிலான நடைமுறைகள் குறித்து விரிவாக விளம்பரப்படுத்துமாறு ஊடகப் பிரிவுகளை அறிவுறுத்தினார். யாத்திரீகர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விதமாக, ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சாதகமான சூழல்களை எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய நடவடிக்கைகள், இந்த யாத்திரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பெருமளவில் பங்கேற்க வகை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815667

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1815701) வருகையாளர் எண்ணிக்கை : 239
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia