உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
யுக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இன்று 3000 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்
Posted On:
05 MAR 2022 5:52PM by PIB Chennai
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இன்று 15 சிறப்பு விமானங்கள் யுக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 3000 இந்தியர்களை அழைத்து வந்துள்ளன. இவற்றில் 12 சிவில் விமானங்கள், 3 சி-17 இந்திய விமானப்படை விமானங்களாகும். பிப்ரவரி 22-ம் தேதி துவங்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில், இதுவரை, 13700 பேருக்கும் அதிகமானோர் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுவரை 11728 இந்தியர்கள், 55 சிறப்பு சிவில் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். விமானப்படையைச் சேர்ந்த 10 விமானங்கள் இதுவரை 2056 பயணிகளை அழைத்து வந்துள்ளன. மேலும், 26 டன் நிவாரணப் பொருட்களையும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் அவை ஏற்றி கொண்டு சென்றன .
ஹிண்டான் விமான தளத்திலிருந்து நேற்று புறப்பட்ட இந்திய விமானப்படையின் சி-17 ரக கனரக விமானங்கள் மூன்று , இன்று காலை மீண்டும் அங்கு திரும்பின. இந்த விமானங்கள் ருமேனியா, சுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளில் இருந்து 629 பேரை மீட்டு வந்துள்ளன. இந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து 16.5 டன் நிவாரணப் பொருட்களை அந்நாடுகளுக்கு கொண்டு சென்றன. ஒரு விமானத்தை தவிர, அனைத்து சிவில் விமானங்களும், இன்று காலை வந்துள்ளன. புடாபெஸ்டிலிருந்து 5 விமானங்களும், சுசிவாவில் இருந்து 4 விமானங்களும், செஸோவிலிருந்து 2 விமானங்களும், கோசிஸிலிருந்து ஒரு விமானமும் இன்று வந்துள்ளன. கோசிசியில் இருந்து புதுதில்லிக்கு ஒரு விமானம் பின்னர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை 11 சிறப்பு சிவில் விமானங்கள், 2,200-க்கு மேற்பட்ட இந்தியர்களை புடாபெஸ்ட், சோசிஸ், செஸ்ஸோவ், புகாரெஸ்ட் ஆகிய நகரங்களில் இருந்து அழைத்துவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
************
(Release ID: 1803215)
Visitor Counter : 222