பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரத் துறையில் மத்திய பட்ஜெட்டின் நேர்மறையான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 26 FEB 2022 2:06PM by PIB Chennai

எனது அமைச்சரவை தோழர்களே, சுகாதார சேவையில் தொடர்புடைய பொதுத்துறை மற்றும் தனியார்துறை வல்லுநர்களே, துணை மருத்துவத் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவினரே, செவிலியர், சுகாதார மேலாண்மை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி நிபுணர்களே, அனைவருக்கும் வணக்கம்!

நண்பர்களே, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் சுகாதாரத் துறையினருக்குப் பாராட்டுக்கள். இந்த இயக்கம் இந்தியாவின் சுகாதார சேவை முறை பற்றிய திறன் மற்றும் இயக்க ரீதியான தன்மையை நிலைநாட்டியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது சுகாதாரத்தில் மட்டுமின்றி, அதற்கு சமமாக நல வாழ்விலும் கவனம் செலுத்தப்படுகிறது.

அனைவருக்குமான, முழுமையான சுகாதாரத்துறையை ஏற்படுத்துவதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, நவீன அறிவியல் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளங்களை  விரிவுபடுத்துவது. இரண்டாவதாக, ஆயுஷ் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தி, அவற்றை சுகாதார முறையில் தீவிரமாக ஈடுபடுத்துவது. மூன்றாவதாக, நவீன மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் மூலமாக, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது.  முக்கிய மருத்துவ வசதிகள், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், கிராமங்களின் அருகிலேயே கிடைக்கச் செய்வது எங்களது முயற்சியாகும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவ்வப்போது, மேம்படுத்தப்பட்டு, பரமரிக்கப்படுவது அவசியமாகும். இதற்கு, தனியார் துறைகளும், இதர துறைகளும், மேலும் ஆற்றலுடன் முன்வரவேண்டும்.

ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த, 1.5 லட்சம் சுகாதார, நலவாழ்வு மையங்களை அமைக்கும் பணி முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதுவரை, 85,000-க்கும் அதிகமான  மையங்கள், வழக்கமான பரிசோதனைகள், தடுப்பூசிகள், சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பட்ஜெட்டில், மனநல சுகாதார வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

நண்பர்களே, சுகாதாரச் சேவைகளின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் திறனை உருவாக்கவும் நாங்கள் முயன்று வருகிறோம். எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மருத்துவக் கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான சேவைகளுக்கு பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்லும் பணிகளை ஒரு கால வரையறையை நிர்ணயித்து, சுகாதார சமுதாயத்தினர் பணியாற்ற வேண்டும். இந்தப் பணி, தரமான மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதாகவும், அனைவருக்கும் குறைந்த செலவில் அது கிடைப்பதை நோக்கமாக கொண்டும் இருக்க வேண்டும்.

நண்பர்களே, கோவின் போன்ற தளங்கள் உலக அளவில் இந்தியாவின் மதிப்பை, டிஜிடல் மருத்துவ தீர்வுகளுடன் உயர்த்தியுள்ளன. இதேபோல, ஆயுஷ்மான் பாரத் டிஜிடல் சுகாதார இயக்கம், நுகர்வோருக்கும், சுகாதார சேவை வழங்குவோருக்கும் இடையே ஒரு சுலபமான இணைப்பை வழங்குகிறது. இத்துடன், இருதரப்புக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாட்டில் மருத்துவ சிகிச்சை மிகவும் எளிதாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தியத் தரத்துக்கு உலக அங்கீகாரம்  கிடைக்கச் செய்துள்ளதுடன், குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் வகை செய்துள்ளது.

நண்பர்களே, பெருந்தொற்று காலத்தில் தொலை மருத்துவம் மற்றும் தொலை தூர மருத்துவ வசதியின் ஆக்கபூர்வமான பங்காற்றியுள்ளது. நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையிலான சுகாதார அணுக்க பாகுபாட்டை இந்த தொழில்நுட்பங்கள் குறைக்க வேண்டும்.  ஒவ்வொரு கிராமத்துக்கும், 5ஜி கட்டமைப்பு மற்றும் கண்ணாடி இழை கட்டமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தனியார் துறையினர் தங்களது பங்களிப்பை அதிகரிக்க முன்வர வேண்டும். மருத்துவ நோக்கங்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது அவசியமாகும்.

நண்பர்களே, ஆயுஷ் மருத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு, இந்தியப் பாரம்பரிய மருத்துவத்துக்கான ஒரே உலக மையத்தைத் தொடங்கவுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.’ஆயுஷ் மருத்துவத்தின் சிறந்த தீர்வுகளை, நமக்காகவும், உலகத்துக்காகவும் எவ்வாறு உருவாக்குவது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

பொறுப்பு துறப்பு ; இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது. 

 

****


(Release ID: 1801572) Visitor Counter : 226