இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பயிற்சியாளராக டான் கிம் ஹெர் மீண்டும் நியமனம்: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Posted On: 25 FEB 2022 3:54PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுகள் 2026 வரை, இந்தியாவின் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பயிற்சியாளராக மலேசியாவைச் சேர்ந்த முதல் தர பயிற்சியாளர் டான் கிம் ஹெர்-ஐ நியமனம் செய்ய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 50 வயதான டான் கிம், இந்தியா திரும்பி வருவது, நாட்டில் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு அணிகளை வலுப்படுத்தும்.

இந்த நியமனத்தை , உலக தரவரிசையில் 8ம் இடத்தில் இருக்கும் இந்திய பாட்மின்டன் வீரர் சிராக் ஷெட்டியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இவருடன் இணைந்து விளையாடும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.  இது குறித்து சிராக் ஷெட்டி கூறுகையில், பயிற்சியாளராக டான் திரும்பி வருவது சாத்விக் மற்றம் எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் நாங்கள் ஜோடி சேர முதலில் தயங்கியபோது, டான் கிம்தான் ஊக்கம் அளித்தார். அவரின் நம்பிக்கைதான் நாங்கள் இந்த அளவுக்கு முன்னேற உதவியது. அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமித்ததற்காக இந்திய பாட்மின்டன் சங்கத்துக்கு நன்றி ’’ என்றார்.

இந்திய பாட்மின்டன் சங்க பொதுச் செயலாளர் அஜய் கே.சிங்கானியா கூறுகையில், ‘‘ இந்திய பாட்மின்டன் சூழலை நன்கு அறிந்தவர் டான் கிம். அவரை மீண்டும் சேர்த்தது இந்திய பாட்மின்டன் இரட்டையர் அணிகளை வலுப்படுத்தும்.  அவரது நியமனத்தை  இந்திய பாட்மின்டன் சங்கமும், இந்திய விளையாட்டு ஆணையமும் செயல்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது நமது முன்னணி இரட்டையர் பிரிவு வீரர்களான சிராக் மற்றும் சாத்விக் ஆகியோருக்கு உதவுவது மட்டும் அல்லாமல், இரட்டையர் அணிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் உதவும்’’ என்றார்.

இதற்கு முன் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் இரட்டையர் பிரிவு பயிற்சியாளராக டான் இருந்தார். பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஷிக்கி ரெட்டி ஆகியோர் தரவரிசை பட்டியலில் 20ம் இடத்துக்கு வரவும் இவரது பயிற்சி உதவியது. அதோடு, 6 ஜோடிகள், தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் வந்தனர்.

2021 உலக சாம்பியன்ஷிப் போட்டியில்ஜாப்பானின் ஆண்கள் இரட்டையர் அணி வெற்றி பெறவும், கலப்பு இரட்டையர் அணி வெள்ளி பதக்கம் பெறவும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெறவும்  பயிற்சியளித்தவர் டான் கிம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆண்டுக்கு 4 பயிலரங்குகள் நடத்துவதன் மூலம் இவர் இந்திய பயிற்சியாளர்களின் திறனை மேம்படுத்தவும் உதவுவார். இவரது நியமனம்  நாட்டில் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பயிற்சியாளர்கள் எண்ணிக்கையும், திறமையும் அதிகரிப்பதையும் மற்றும் எதிர்காலத்தில் இந்திய அணிகள் உச்சத்துக்கு செல்வதையும் உறுதி செய்யும். 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801083

                           *************************


(Release ID: 1801218) Visitor Counter : 179