சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முதன்மை நாடாக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய அமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்
Posted On:
25 FEB 2022 12:52PM by PIB Chennai
நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முதன்மை நாடாக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய நகல் தரவு மையம் மற்றும் இணையக் கொள்கை குறித்து சென்னையில் இன்று நடைபெற்ற தொழில் துறையினர் கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு கூறினார்.
தரவு மையம் மற்றும் இணையக் கொள்கை செயல்பாட்டில் உள்நாட்டுத் தளங்கள் / தீர்வுகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவது தேசிய தரவு மையம், இணையக் கொள்கையின் நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார். எரிசக்தி திறன், நீடித்த மற்றும் பசுமை தரவு மையங்களை அமைப்பது இந்தக் கொள்கையின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்
தேசிய தரவு மையத்தின் தேவைக்கு அப்பால் இந்தியாவை மையப்படுத்திய தரவுகள் சேகரிப்புக்கான இடமும் நமக்கு தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள அரசு தொழில்துறையினரிடமிருந்து ஆலோசனைகள் கேட்க திறந்த மனதுடன் இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்காக மாற்றங்களை செய்ய தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2027-க்குள் 2000 மெகாவாட் கூடுதல் திறனுடன் நாட்டின் தரவு மையத் திறனை அதிகப்படுத்துவது தேசிய தரவு மைய நகல் கொள்கையின் நோக்கமாகும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் இணைச் செயலாளர் திரு.அமிதேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார்
இந்தியாவில் தற்போது நிறுவப்பட்ட மின் திறன் சுமார் 499 மெகா வாட்டாக உள்ளது. இதனை 2023 வாக்கில் 1007 மெகா வாட்டுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
5 மெகாவாட் தரவு மையம் (ஐடி மற்றும் ஐடி அல்லாத) அமைப்பதற்கான கருவிகள் வாரியான செலவு, கட்டுமானத்திற்கு முன், கட்டுமானத்தின் போது, கட்டுமானத்திற்குப் பின் என்ற கட்டங்களில் தரவு மையங்கள் அமைப்பதற்கு தேவையான திட்டத்துடன் பொதுவான ஒப்புதல்களின் பட்டியல் ஆகியவைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
உள்நாட்டு மதிப்புக் கூடுதலுக்கு ஊக்கத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் மீதும் விவாதம் நடத்தப்பட்டது. நேரடியாகவும், இணையவழியாகவும் சுமார் 300 தொழில் துறை பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.



****
(Release ID: 1801018)