பிரதமர் அலுவலகம்

கருடா ஏர்ஸ்பேஸ் நிறுவனத்தால் 100 கிசான் ட்ரோன்கள் பறப்பதைப் பார்த்தபோது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 FEB 2022 11:54AM by PIB Chennai

வணக்கம்,

கொள்கைகள் சரியாக இருந்தால் ஒரு நாடு மகத்தான உச்சங்களைத் தொடுவதற்கு இயலும். இந்த கோட்பாட்டிற்கு இன்றைய தினம் மிகப் பெரிய உதாரணமாகும். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை ட்ரோன் என்பது ராணுவத்தோடு தொடர்புடைய அல்லது எதிரிகளை முறியடிப்பதற்கு பயன்படுத்துகின்ற ஒரு தொழில்நுட்பமாக கருதப்பட்டது. குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே என நமது எண்ணங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று மனேசரியில் கிசான் ட்ரோன் வசதிகளை நாம் தொடங்கி வைக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டின் நவீன வேளாண் முறையில் இதுவொரு புதிய அத்தியாயமாகும். இந்தத் தொடக்கம் ட்ரோன் துறை வளர்ச்சியின் மைல் கல் என்பதை மட்டும் நிரூபிக்கவில்லை. சாத்தியங்களின் எண்ணற்ற கதவுகளையும் திறப்பதாக நான் நம்புகிறேன். அடுத்த 2 ஆண்டுகளில் ‘இந்தியாவின் தயாரிப்பில் கருடா ஏர்ஸ்பேஸ் ஒரு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது ஏராளமான இளைஞர்களுக்குப் புதிய வேலைகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த வெற்றிக்காக கருடா ஏர்ஸ்பேஸ் அணியையும் எனது இளம் நண்பர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இந்த நாட்டிற்கு இது ‘சுதந்திரத்தின் 75-வது பெருவிழா காலமாகும். இந்தக் காலம் இளைய இந்தியாவிற்கு உரியது; இந்தியாவின் இளைஞர்களுக்குரியது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இளைஞர்களின் பலத்தையும், தனியார் துறையின் பலத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ட்ரோன்கள் பற்றிய அச்சங்களால் இந்தியா நேரத்தை வீணாக்கியதில்லை. இளம் திறமையாளர்களிடம் நாங்கள் நம்பிக்கை வைத்து புதிய சிந்தனையை நோக்கி சென்றோம்.

இந்த பட்ஜெட்டில் மற்ற கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டதை போல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதையும் நாடு வெளிப்படையாக தெரிவித்தது. அதன் பயன்கள் இன்று நம் முன்னால் இருக்கின்றன. தற்போதைய காலத்தில் ட்ரோன்களின் பல வகை பயன்பாடுகளை நாம் காண்கிறோம். படைவீடு திரும்பும் நிகழ்வின் போது ஒட்டு மொத்த தேசமும் ஆயிரம் ட்ரோன்களின் கண்கொள்ளா காட்சியைக் கண்டது.

இன்று, ஸ்வமிதா திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் மூலம் கிராமங்களின் நிலம் மற்றும் வீடுகளின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. ட்ரோன்கள் மூலம் மருந்துகள் அனுப்பப்படுகின்றன. தொலை தூரப் பகுதிகளுக்கு தடுப்பூசிகள் சென்று சேருகின்றன. பல பகுதிகளில் வயல்களில் பூச்சிமருந்து தெளிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் திசையில் இப்போதைய கிசான் ட்ரோன் புதுயுகப் புரட்சியின் தொடக்கமாகும். உதாரணமாக வரும் காலங்களில் ட்ரோன்களின் உயர்ந்த திறனின் உதவியால் விவசாயிகள் புத்தம் புதிய காய்கறிகளையும், பழங்களையும், மலர்களையும் தங்களின் வயல்களிலிருந்து சந்தைகளுக்கு அனுப்ப முடியும். மீன் வளர்ப்போடு தொடர்புடையவர்கள் குளங்கள், ஆறுகள், கடல் ஆகியவற்றில் பிடித்த மீன்களை நேரடியாக சந்தைக்கு அனுப்ப முடியும். குறைந்தபட்ச சேதத்துடன் சாத்தியமான குறுகிய காலத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பொருட்கள் சந்தையை சென்றடையும். இதன் தொடர்ச்சியாக நமது விவசாயிகள் மற்றும் மீனவ சகோதர, சகோதரிகளின் வருவாயும் அதிகரிக்கும். இது போன்ற ஏராளமான வாய்ப்புகள் நமது கதவுகளைத் தட்டுகின்றன.

இந்தத் திசையில் நாட்டில் உள்ள மேலும் பல நிறுவனங்கள் விரைவாக முன்னேறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் ட்ரோன் தயாரிக்கும் புதிய தொழில்கள் உருவாகும் புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 200-க்கும் அதிகமான ட்ரோன் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. வெகு விரைவில் இந்த எண்ணிக்கை ஆயிரங்களை எட்டும். இது லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தியாவின் திறமை வளர்ச்சி புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஒட்டு மொத்த உலகத்தின் முன்னால் ட்ரோன்கள் துறையில் இந்தியா வெகு விரைவில் திறமையை வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இத்துடன் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இளைஞர்களின் திறனுக்கு எனது நல்வாழ்த்துக்கள். துணிச்சலோடும், தைரியத்தோடும் புதிய தொழில்களை தொடங்க முன்வருகின்ற இன்றைய இளைஞர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு அளிக்கவும் கொள்கைகள் வழியாக உங்களுடன் தோளோடு தோள் சேர்த்து நடக்கவும் இந்திய அரசு உறுதி அளிக்கிறது. உங்கள் வழியில் எந்தத் தடை ஏற்படவும் அது அனுமதிக்காது. நீங்கள் சிறப்படைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.

***



(Release ID: 1799638) Visitor Counter : 244