சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்: தீவிர தடுப்பூசி இயக்கம் 4.0-வை டாக்டர். மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்
Posted On:
07 FEB 2022 1:19PM by PIB Chennai
தீவிரத் தடுப்பூசி இயக்கம் 4.0-வை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா, காணொலி வாயிலாக இன்று (7.2.2022) தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 3 கோடிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 2.6கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருவதன் மூலம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
நெருக்கடியான காலகட்டத்தில், கடினமான பருவநிலையையும் பொருட்படுத்தாது, தொலைதூர மற்றும் மலைப் பாங்கான பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்துவதன் வாயிலாக, சுகாதார சேவைப் பணியாளர்கள், நாட்டிற்கு பெரும் சேவை ஆற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய தடுப்பூசி இலக்கை அடைய, அனைவரும் இணைந்து முயற்சிப்பதுடன், பொதுமக்கள் பங்கேற்பு அவசியம் என்றும் அவர் கூறினார். அவர்களது அர்ப்பணிப்பு தம்மை மிகவும் ஈர்த்துள்ளதாகவும், தேச நிர்மாணத்திற்காக மற்றவர்களும் இதுபோன்ற பங்களிப்பை வழங்கத் தூண்டுவதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கையில், அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளித்து வருவது தெரியவந்துள்ளது என்றும் திரு.மன்சுக் மாண்டவியா கூறினார். “பச்சிளம்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்களது இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தடுப்பூசி ஒன்று தான் சக்திவாய்ந்த, குறைந்த செலவிலான, பாதுகாப்பன வழிமுறை“ என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதிய அளவு தடுப்பூசி செலுத்தப்படாத அல்லது முற்றிலும் தடுப்பூசி செலுத்தாத பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, முழுமையான தடுப்பூசி செலுத்தும் நோக்கில், பிரதமர் திரு.நரேந்திரமோடி, டிசம்பர் 2014-ல் இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிவைத்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கிராம சுயராஜ்யத் திட்டம் (541 மாவட்டங்களுக்குட்பட்ட16,850 கிராமங்கள்) மற்றும் விரிவாக்கப்பட்ட கிராம சுயராஜ்யத் திட்டம் (முன்னேற்றத்தை விரும்பும் 112 மாவட்டங்களுக்குட்பட்ட 48,929 கிராமங்கள்) ஆகியவை, இந்திரதனுஷ் இயக்கத்தின் முன்னோடித் திட்டங்களாக அடையாளங்காணப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, வழக்கமான தடுப்பூசித் திட்டத்தின் வேகம் குறைந்தபோதிலும், அந்த இடைவெளியை ஈடுகட்ட, இந்திரதனுஷ் இயக்கம் 4.0-ன்கீழ் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
நாடுதழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின்குழ், இதுவரை 170 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
*******
(Release ID: 1796099)
(Release ID: 1796146)
Visitor Counter : 503