பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திறந்து வைத்தார்


சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளையும் வழங்கினார்

Posted On: 23 JAN 2022 8:06PM by PIB Chennai

நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜியின் உருவச்சிலைப் பணிகள் நிறைவடையும் வரை மின்னொளி வடிவிலான இந்தச் சிலை இங்கு வைக்கப்பட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளையொட்டி ஓராண்டு நடைபெற உள்ள நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிலை நிறுவும் இந்த விழாவின் போது 2019,2020,2021,2022 ஆகிய ஆண்டுகளுக்கான சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளையும் பிரதமர் வழங்கினார். பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் மதிப்புமிக்க பங்களிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் விதமாக இந்த விருது மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது.

அன்னை இந்தியாவின் வீரம்மிக்க புதல்வர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார். கூடியிருந்தோரிடையே உரையாற்றிய அவர், இந்திய மண்ணில் முதன்முறையாக சுதந்திர அரசை நிறுவியவரும், இறையாண்மை மிக்க வலுவான இந்தியாவை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு அளித்தவருமான நேதாஜியின் பிரம்மாண்ட உருவச்சிலை டிஜிட்டல் வடிவில் இந்தியாவின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மின்னொளி வடிவிலான இந்தச் சிலை பளிங்கு கல்லால் மாற்றியமைக்கப்படும். இந்த மகத்தான தேசத்தின் விடுதலைப் போராட்ட வீரருக்கு செலுத்தும் அஞ்சலியாக இந்தச் சிலை இருக்கிறது என்றும், இது தேசத்திற்கான கடமை குறித்த பாடத்தை நமது நிர்வாக அமைப்புகளுக்கும், தலைமுறைகளுக்கும் நினைவூட்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் பேரிடர் மேலாண்மைக் குறித்த பார்வையின் வரலாற்று பின்னணியை விவரித்த பிரதமர் தொடக்கத்தில் பேரிடர் மேலாண்மை என்பது வேளாண் துறையில் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் 2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இதற்கான அர்த்தத்தை மாற்றியது. “நிலநடுக்கத்திலிருந்து மீட்பு மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கு அனைத்துத் துறைகளும், அமைச்சகங்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்த அனுபவத்தின் அடிப்படையில் 2003-ல் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது. பேரிடரைக் கையாள்வதற்கு சட்டம் ஒன்றை இயற்றிய முதலாவது மாநிலமாக குஜராத் மாறியது. பின்னர் குஜராத்தின் சட்டங்களிலிருந்து படிப்பினையை எடுத்துக் கொண்ட மத்திய அரசு இதே போன்று ஒட்டு மொத்த நாட்டிற்குமான பேரிடர் நிர்வாகச் சட்டத்தை 2005-ல் நிறைவேற்றியது” என்று பிரதமர் திரு.மோடி கூறினார்.

“சுதந்திரமான இந்தியா என்ற கனவின் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்தியாவை அசைப்பதற்கு உலகில் எந்த சக்தியும் இல்லை” என்று நேதாஜி கூறியதை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர், இன்று நாம் சுதந்திர இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றும் இலக்கைக் கொண்டிருக்கிறோம் என்றார். சுதந்திரத்தின் நூற்றாண்டு வருவதற்கு முன் புதிய இந்தியாவை கட்டமைக்கும் இலக்கு நம்முடையது என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பராக்கிரம தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள நேதாஜியின் பூர்வீக இல்லத்திற்குப் பயணம் செய்ததை உணர்ச்சிப் பெருக்கோடு பிரதமர் நினைவு கூர்ந்தார். ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை 2018 அக்டோபர் 21 அன்று கொண்டாடியதையும் தம்மால் மறக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார். “செங்கோட்டையில் நடைபெற்ற சிறப்பான விழாவில் ஆசாத் ஹிந்த் ராணுவத்தின் தொப்பி பொறித்த மூவண்ணக் கொடியை நான் ஏற்றினேன். அந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியானது, மறக்க முடியாதது” என்று அவர் கூறினார்.

நேதாஜி சுபாஷ் ஏதாவது செய்ய தீர்மானித்திருந்தால் எந்த சக்தியாலும் அதைத் தடுத்திருக்க முடியாது என்று பிரதமர் கூறினார். நேதாஜி சுபாஷிடமிருந்து நாம் ஊக்கத்தைப் பெற்று ‘செய்ய முடியும், செய்வோம்’ என்ற உணர்வுடன் நாம் முன்னேற வேண்டியுள்ளது.

***************


(Release ID: 1792093) Visitor Counter : 222