பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குஜராத்தின் சோம்நாத்தின் புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் திறந்து வைத்தார்


“சோம்நாத் கோயில் இடிக்கப்பட்ட சூழல் மற்றும் இந்த கோயில் சர்தார் பட்டேலின் முயற்சிகளால் புனரமைக்கப்பட்ட சூழல் ஆகிய இரண்டிலும் பெரும் தகவல் அடங்கியுள்ளது”

“தற்போது, சுற்றுலா மையங்களின் மேம்பாடு அரசுத் திட்டங்கால் மட்டுமின்றி, பொதுமக்கள் பங்கேற்பு இயக்கத்தின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் பாரம்பரிய இடங்கள் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியமிக்க இடங்களின் மேம்பாடு இதற்கு சிறந்த உதாரணமாகும்”

“சுற்றுலாவை முழுமையான வகையில் நாடு எதிர்பார்க்கிறது. தூய்மை, அடிப்படை வசதிகள், நேரம் மற்றும் சிந்தனை போன்ற அம்சங்கள் சுற்றுலா திட்டமிடலுக்கு அவசியம்”

“நமது சிந்தனை புதுமையானதாகவும், நவீனமானதாகவும் இருப்பது அவசியம். அதே நேரத்தில் நமது பண்டைக்கால பாரம்பரியத்தால் நாம் எவ்வாறு பெருமிதம் அடைகிறோம் என்பதையும் இது பெருமளவு சித்தரிக்கிறது”

Posted On: 21 JAN 2022 12:48PM by PIB Chennai

குஜராத்தின் சோம்நாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திரபாய் பட்டேல், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சோம்நாத் சுற்றுலா மாளிகை திறக்கப்பட்டிருப்பதற்கு, குஜராத் அரசு, சோம்நாத் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். நாசக் காலங்களிலும் பெருமிதத்துடன் எழுந்து நின்ற இந்தியாவின் மனஉறுதியை, கோயிலின் கோபுரத்தின் மூலம் பக்தர்கள் உணர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான ஆண்டு அடிமையாக இருந்த காலகட்டங்கள் மற்றும் இந்திய நாகரீக பயணத்தில் எழுந்த சவால்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சோம்நாத் கோயில் இடிக்கப்பட்ட சூழல் மற்றும் இந்த கோயில் சர்தார் பட்டேலின் முயற்சிகளால் புனரமைக்கப்பட்ட சூழல் ஆகிய இரண்டிலும் பெரும் தகவல் அடங்கியுள்ளது என்றார். “தற்போது, சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், நமது கடந்த கால அனுபவங்கள், கலாச்சார பெருமைமிக்க இடங்கள் மற்றும் சோம்நாத் போன்ற நம்பிக்கைக்குரிய இடங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை சுற்றுலா பெரும் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். “அனைத்து மாநிலங்களிலும், அனைத்துத் துறைகளிலும் இது போன்ற எல்லையற்ற வாய்ப்புகளை நாம் பெற்றுள்ளோம்என்று அவர் குறிப்பிட்டார்.  ஆன்மீக தலங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் மெய்நிகர் பாரத் தர்ஷன் பற்றி விளக்கிய பிரதமர், சோம்நாத், துவாரகா, கட்ச் வளைகுடா, குஜராத்தின் ஒற்றுமைச் சிலை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி, மதுரா, காசி, பிரயாக், குஷிநகர்; தேவபூமியான உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத்; இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஜூவாலாதேவி, நயினா தேவி: பக்தி மற்றும் இயற்கை எழில் மிகுந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், ஒடிசாவில் உள்ள பூரி; ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதி பாலாஜி, மகாராஷ்டிராவின் சித்தி விநாயகர், கேரளாவின் சபரிமலை போன்ற புனிதத் தலங்களை பட்டியலிட்டார். “இந்த இடங்கள் நமது தேச ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட பாரதம் வலிமையான பாரதம் என்பதை பிரதிபலிக்கின்றன. தற்போது இந்த இடங்களை வளமைக்கான வலிமையான ஆதாரமாக நாடு பார்க்கிறது. இவற்றை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை நாம் பெருமளவிற்கு ஊக்குவிக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் சுற்றுலாவின் முழுத்திறனையும் பயன்படுத்த அயராது பணியாற்றி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். “தற்போது, சுற்றுலா மையங்களின் மேம்பாடு அரசுத் திட்டங்கால் மட்டுமின்றி, பொதுமக்கள் பங்கேற்பு இயக்கத்தின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் பாரம்பரிய இடங்கள் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியமிக்க இடங்களின் மேம்பாடு இதற்கு சிறந்த உதாரணமாகும்”. மையக்கரு சார்ந்த 15 சுற்றுலா சுற்றுத்தடம் அவர் பட்டியலிட்டார். உதாரணமாக, ராமாயண சுற்றுப்பாதையில் பகவான் ராமருடன் தொடர்புடைய இடங்களைக் காணலாம். இதற்காக சிறப்பு ரயிலும் விடப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து திவ்யகாசி யாத்திரைக்கான இந்த சிறப்பு ரயில் நாளை புறப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அதே போன்று புத்தர் சுற்றுத்தடம், புத்தபிரானுடன் தொடர்புடைய இடங்களுக்குச் செல்வதை எளிதாக்குகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பதுடன் தடுப்பூசி இயக்கத்தில் சுற்றுலா தலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சுற்றுலாவை முழுமையான வகையில் காண்பதை நாடு தற்போது எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முதலில் தூய்மை – முன்பு நமது சுற்றுலா தலங்கள், புனித யாத்திரை தலங்கள், சுகாதாரமற்றவையாக இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டம் இந்த நிலையை மாற்றியமைத்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிப்பதில் மற்றொரு முக்கிய அம்சம் பயண வசதிகள்தான். ஆனால் இந்த வசதிக்கான வாய்ப்புகளை சுற்றுலா தலங்களோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. போக்குவரத்து, இணையதள வசதி. சரியான தகவல், மருத்துவ ஏற்பாடு போன்ற அனைத்து வசதிகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இந்த வகையில் நாட்டில் அனைத்து வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாவை அதிகரிப்பதில் மூன்றாவது முக்கிய அம்சம் நேரம் ஆகும். தற்போதைய யுகத்தில், குறைந்த காலத்திற்குள் அதிக இடங்களுக்குச் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நான்காவது மற்றும் மிக முக்கிய அம்சம் நமது சிந்தனைதான். நமது சிந்தனை புதுமையானதாகவும், நவீனமானதாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் நமது பண்டைக்கால பாரம்பரியம் குறித்து நாம் எவ்வாறு பெருமிதம் அடைகிறோம் என்பதும் மிக முக்கியமானதாகும்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு தில்லியில் உள்ள சில குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் தற்போது நாடு அத்தகைய குறுகிய சிந்தனையை புறந்தள்ளி, பெருமிதத்திற்கான புதிய இடங்களை உருவாக்கி அவற்றுக்கு மேன்மை சேர்த்து வருகிறது. “எங்களது அரசுதான் தில்லியில் பாபா சாகேப் நினைவிடத்தையும். ராமேஸ்வரத்தில் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவிடத்தையும் கட்டியது. அதே போன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஷியாம் ஜி கிருஷ்ண வர்மா ஆகியோருடன் தொடர்டைய இடங்களுக்கும் உரிய  அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நமது பழங்குடியின சமுதாயத்தின் பெருமிகு வரலாற்றை பறைச்சாற்ற நாடு முழுவதும் ஆதிவாதி அருங்காட்சியகங்களும் கட்டப்படுகிறது” என்று பிரதமர் தெரிவித்தார். புதிதாக உருவாக்கப்படும் இடங்களின் சிறப்புகளை விவரித்த பிரதமர், பெருந்தொற்று காலத்திலும் 75 லட்சம் மக்கள் ஒற்றுமைச் சிலையை காண வந்துள்ளதாக தெரிவித்தார். இது போன்ற இடங்கள் நமது அடையாளத்தையும், சுற்றுலாவையும் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற தமது அழைப்பை குறுகிய நோக்கமுடையதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இந்த அழைப்பு உள்ளூர் சுற்றுலாவையும் உள்ளடக்கியதுதான் என்றார். வெளிநாட்டு சுற்றுலாவை மேற்கொள்வதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள 15 – 20 இடங்களுக்காவது செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

***************(Release ID: 1791492) Visitor Counter : 195