சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவின் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையை டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்
Posted On:
16 JAN 2022 5:53PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மத்திய தொடர்புத்துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவாக்சின் ஊசியுடன், சுகாதார பணியாளர் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதைப் போன்று அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்களப் பணியாளர்கள், விஞ்ஞான சமுகத்தினரின் அற்புதமான பணியை அஞ்சல் தலை சித்தரிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று கூறினார். கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கியது. இந்த ஓராண்டு காலத்தில் 156 கோடிக்கும் அதிகமாக டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக சமுதாயத்திற்கு நமது தடுப்பூசி இயக்கம் முன்மாதிரியாக திகழ்கிறது. இந்தியாவின் மக்களால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், கொரோனாவை எதிர்த்து போராடுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரையும் பாராட்டினார்.
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் நாட்டின் இணையற்ற பயணத்தின் வெற்றிக் கதை என்று அவர் கூறினார். பிரதமரின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டின் வழிகாட்டுதலில் இந்த அசாதாரணமான சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790343
**
(Release ID: 1790360)
Visitor Counter : 331