பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

‘‘கடின உழைப்புதான் நமது ஒரே பாதை மற்றும் வெற்றிதான் நமது ஒரே வாய்ப்பு’’

‘‘மத்திய மற்றும் மாநில அரசுகள் பின்பற்றிய முன்கூட்டிய, செயல்திறனுடன் கூடிய மற்றும் கூட்டு அணுகுமுறை வழிதான், இந்த முறையும் வெற்றிக்கான மந்திரம்’’

‘‘ நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதம் பேருக்கு இந்தியா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது. சுமார் 70 சதவீதம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது’’

‘‘ பொருளாதாரத்தின் வேகம் பராமரிக்கப்பட வேண்டும். அதனால், உள்ளூர் அளவிலான கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது’’

‘‘மாறுபட்ட கொரோனா வகை ஏற்பட்டாலும், பெருந்தொற்றை சமாளிப்பதில் தடுப்பூசிதான் சிறந்த வழி’’

‘‘கொரோனாவை முறியடிக்க, ஒவ்வொரு மாறுபட்ட கொரோனா வகைக்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒமிக்ரானை சமாளிப்பதோடு, எதிர்காலத்தில் புதிய வகை தொற்று ஏற்பட்டாலும், அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்’’

கொவிட்-19 தொடர்ச்சியான அலைகளில், பிரதமரின் தலைமைக்கு முதல்வர்கள் நன்றி

Posted On: 13 JAN 2022 7:17PM by PIB Chennai

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை  மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.  மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் உடன் இருந்தனர். பெருந்தொற்றின் சமீபத்திய நிலவரம் குறித்து, இந்த கூட்டத்தில்  அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் 3வது ஆண்டில் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டார்.  ‘‘கடின உழைப்புதான் நமது ஒரே பாதை மற்றும் வெற்றிதான் நமது ஒரே வாய்ப்பு. நமது முயற்சிகளுடன், இந்தியாவின் 130 கோடி மக்களும், கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீள்வது நிச்சயம்’’ என அவர் கூறினார்.

 

ஒமிக்ரான் குறித்த முந்தைய குழப்பம், தற்போது தெளிவாகிவிட்டதாக பிரதமர் கூறினார்.  ஒமிக்ரான் வகை தொற்று, முந்தைய வகைகளை விட பொதுமக்களை வேகமாக பாதித்து வருகிறது. ‘‘நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும், பீதியான சூழ்நிலை இல்லை என்றாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும்’’ என அவர் கூறினார்.  இந்த பண்டிகை காலத்தில், மக்கள் மற்றும் நிர்வாகத்தினரின் எச்சரிக்கை எங்கேயும் குறையவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் பின்பற்றிய முன்கூட்டிய, செயல்திறனுடன் கூடிய மற்றும் கூட்டு அணுகுமுறை வழிதான், இந்த முறையும் வெற்றிக்கான மந்திரம்.  எவ்வளவு அதிகம் நாம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துகிறோமா, அந்தளவுக்கு சிக்கல்கள் குறைவாக இருக்கும் என பிரதமர் கூறினார்.

 

பல வகை கொரோனா தொற்று ஏற்பட்டாலும், பெருந்தொற்றை சமாளிக்கும் ஒரே வழி தடுப்பூசிதான் என பிரதமர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகம் முழுவதும் தனது சிறப்பான தன்மையை நிருபித்து வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.  இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இந்தியா இன்று  வயதுக்கு வந்த 92 சதவீதம் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது. நாட்டில் 70 சதவீதம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.   10 நாட்களுக்குள் வளர் இளம் பருவத்தினர் 30 மில்லியன் பேருக்கு இந்தியா தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.  முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்துகிறோமா, அந்த அளவுக்கு நமது சுகாதார அமைப்பின் திறன் அதிகரிக்கும்.  ‘‘ வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தை 100 சதவீதம் மேற்கொள்வதை நாம் தீவிரப்படுத்த வேண்டும்’’ என அவர் கூறினார்.  தடுப்பூசி அல்லது முக கவசம் அணிவது பற்றி தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

யுக்தியை உருவாக்கும்போது, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்துக்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பு ஏற்படுதை மனதில்வைப்பது மிக முக்கியம் எனவும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தின் வேகம் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.  ஆகையால, உள்ளூர் அளவிலான கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது.  வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு அதிகபட்ச சிகிச்சை அளிக்கும் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதையும், அதற்கான விதிமுறைகள்  தொடர்ந்து மேம்படுத்தப்படுவதையும், அவை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தினார்.  சிகிச்சை அளிப்பதில் தொலை தூர மருந்து வசதிகளை பயன்படுத்துவது மிகப் பெரிய அளவில் உதவும் என அவர் கூறனார்.

 

சுகாதார கட்டமைப்பை பொருத்தவரை, அவற்றை புதுப்பிக்க ரூ.23,000 கோடி நிதியுதவியை பயன்படுத்தியதற்காக மாநிலங்களை பிரதமர் பாராட்டினார்.  இந்த நிதியுதவியின் கீழ், நாடு முழுவதும் 800 குழந்தைகள் சிகிச்சை பிரிவுகள், 1.5 லட்சம் புதிய தீவிர சிகிச்சை பிரிவு  மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ஆம்புலன்ஸ்கள், 950க்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்குகள் மருத்துவ கட்டமைப்பில் சேர்க்கப்பட்டன.  மருத்துவ கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.  ‘‘கொரோனாவை முறியடிக்க, ஒவ்வொரு மாறுபட்ட கொரோனா வகைக்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒமிக்ரானை சமாளிப்பதோடு, எதிர்காலத்தில் புதிய வகை தொற்று ஏற்பட்டாலும், அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்’’ என பிரதமர் கூறினார்.

 

கொவிட்-19 தொடர்ச்சியான அலைகளில், பிரதமரின் தலைமைக்கு முதல்வர்கள் நன்றி தெரிவித்தனர்.  பிரதமர் அளித்த ஆதரவுக்கும், மத்திய அரசு வழங்கிய நிதிக்கும் அவர்கள் குறிப்பாக நன்றி தெரிவித்தனர். இது மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது.  படுக்கைகளை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யவும் எடுத்த நடவடிக்கைகள் மூலம் அதிகரிக்கும் தொற்றை சமாளிப்பதற்கான தயார்நிலை குறித்தும் முதல்வர்கள் பேசினர். பெங்களூரில் தொற்று பரவல் குறித்தும், அடுக்குமாடி குடியிருப்புகளில் அவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கர்நாடக முதல்வர் பேசினார். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மாநிலத்தில் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியங்களையும், அதை சமாளிக்க நிர்வாகத்தின் தயார் நிலை குறித்தும் மேற்கு வங்க முதல்வர் பேசினார். கொரோனாவுக்கு எதிரான 3வது அலைக்கு எதிராக போராட மத்திய அரசுடன், மாநில அரசு துணை நிற்கிறது என தமிழக முதல்வர் கூறினார்.  ஊரக பகுதிகள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் நிலவும் தவறான கருத்தக்களால் தடுப்பூசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜார்கண்ட் முதல்வர் பேசினார்.  தடுப்பூசி நடவடிக்கையில் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி  உத்தரப் பிரதேச முதல்வர் பேசினார். நிதியுதவி மற்றும் உள்கட்டமைப்பு குறிப்பாக ஆக்ஸிஜன் தேவையை நிறைவேற்றுவதில் செய்யப்பட்ட உதவிக்கு பஞ்சாப் முதல்வர் நன்றி தெரிவித்தார். முன்னெச்சரிக்கை தடுப்பூசி நடவடிக்கைகள், தீவிர நம்பிக்கை ஏற்படுத்தும் பூஸ்டராக உள்ளது என அசாம் முதல்வர் கூறினார். தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகரிக்க மாநில அரசு எடுக்கும் முயற்சிகளை மணிப்பூர் முதல்வர் கூறினார்.

                                ***************


(Release ID: 1789792) Visitor Counter : 342