பிரதமர் அலுவலகம்

கான்பூர் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 28 DEC 2021 5:07PM by PIB Chennai

கான்பூர் மெட்ரோ ரெயில் இணைப்புக்காகவும், குழாய் திட்டத்திற்காகவும் கான்பூர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தீன் தயாள் உபாத்யாயா, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் சுந்தர் சிங் பண்டாரி போன்ற தலைவர்களை உருவாக்கியதில் இந்நகரத்தின் பங்கு அளப்பரியது.

இன்று உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியில் மற்றொரு பொன்னான அத்தியாயம் சேர்க்கப்படுவதற்கு பங்கி வாலே ஹனுமான் ஜியின் ஆசீர்வாதங்களை நான் கோருகிறேன். உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் கடந்த காலத்தில் ஏற்பட்ட நேர இழப்பை ஈடுசெய்ய முயற்சிக்கிறது. நாங்கள் இரட்டிப்பு வேகத்தில் வேலை செய்கிறோம்.

சட்ட விரோத ஆயுதங்கள் மற்றும் குழுக்களுக்கு பெயர் பெற்ற ஒரு மாநிலம், தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களித்து, பாதுகாப்பு வழித்தடத்தின் மையமாக உள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை முடிக்க இரட்டை எஞ்சின் அரசுகள் இரவு பகலாக உழைக்கின்றன. 

கான்பூர் மெட்ரோவுக்கு எங்கள் அரசு அடிக்கல் நாட்டியது, எங்கள் அரசே அதை அர்ப்பணிக்கிறது. பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு எங்கள் அரசு அடிக்கல் நாட்டியது, எங்கள் அரசே அதன் பணியை நிறைவு செய்தது.

2014-ம் ஆண்டுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மெட்ரோ ரயிலின் மொத்த நீளம் 9 கி.மீ ஆக இருந்தது. 2014 மற்றும் 2017-க்கு இடையில், மெட்ரோவின் நீளம் மொத்தம் 18 கி.மீ மட்டுமே அதிகரித்தது. இன்று கான்பூர் மெட்ரோவையும் சேர்த்தால், மாநிலத்தில் தற்போது மெட்ரோவின் நீளம் 90 கி.மீ.யை தாண்டியுள்ளது.

பல தசாப்தங்களாக, ஒரு பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு, மற்றொன்று பின்தங்கியது. மாநிலங்களின் மட்டத்தில், சமூகத்தில் உள்ள இந்த சமத்துவமின்மையை அகற்றுவது முக்கியமானது. அதனால்தான் அனைவருடன், அனைவரின் வளர்ச்சி என்ற தாரகமந்திரத்தோடு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தின் தேவைகளை புரிந்து கொண்டு இரட்டை எஞ்சின் அரசு உறுதியான பணியை செய்து வருகிறது. இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடையவில்லை. அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் திட்டம் மூலம் உ.பி.யின் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான தண்ணீரை வழங்குவதில் இன்று ஈடுபட்டுள்ளோம்.

இரட்டை எஞ்சின் அரசு, உத்தரப்பிரதேசத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருகிறது. இரட்டை எஞ்சின் அரசுக்கு பெரிய இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது, மற்றும் அவற்றை எவ்வாறு அடைவது என்பது தெரியும்.

2014-ம் ஆண்டில் மாநிலத்தில் இருந்த நகர்ப்புற ஏழைகளுக்கு வெறும் 2.5 லட்சம் வீடுகளே இருந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 17 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெருவோர வியாபாரிகள் முதன்முறையாக அரசின் கவனத்தைப் பெற்றனர், மற்றும் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 700 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளனர்.

2014-ல் நாட்டில் வெறும் 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தன. இப்போது 30 கோடிக்கு மேல் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1.60 கோடி குடும்பங்கள் புதிய சமையல் எரிவாயு இணைப்புக்களைப் பெற்றுள்ளன.

மாஃபியா கலாச்சாரத்தை ஒழித்துள்ள திரு .யோகி அரசால் உ.பி.யில் முதலீடு அதிகரிப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.  வணிகம் மற்றும் தொழில் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, கான்பூரில் ஒரு மெகா தோல் குழுமம் மற்றும் ஃபசல்கஞ்ச் ஆகியவற்றிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு வழித்தடம் மற்றும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு போன்ற திட்டங்கள் கான்பூரின் தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கும் 

குறிப்பு: பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785832

************



(Release ID: 1787479) Visitor Counter : 130