சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான முன்னெச்சரிக்கை டோஸ்கள் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு.

Posted On: 28 DEC 2021 4:27PM by PIB Chennai

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய்த்தன்மை உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மூன்றாவது டோஸ் வழங்குவது குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் காணொலி மூலமாக இன்று தலைமை வகித்தார்.

15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி 2022 ஜனவரி 3 திங்கட்கிழமை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான முன்னெச்சரிக்கை மூன்றவது டோஸ் ஜனவரி 10, 2022 திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது என்றும் டிசம்பர் 25, 2021 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை டிசம்பர் 27, 2021 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது.

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் போது, இந்த பிரிவினருக்கு 'கோவாக்சின்' மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும், கூடுதல் அளவு 'கோவாக்சின்' அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்குத் தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ‘கோவாக்ஸின்’ விநியோக அட்டவணையைப் மத்திய அரசு அடுத்த சில நாட்களில் பகிர்ந்து கொள்ளும். ஜனவரி 1, 2022 முதல் கோ-வின் தளத்தில் பயனாளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஜனவரி 3-ம் தேதி தடுப்பூசி செலுத்துதல் தொடங்கும் போது நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். 2007 அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்த பிரிவின் கீழ் தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785824

                                                                *******************************



(Release ID: 1785918) Visitor Counter : 273