பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் டிசம்பர் 27-ம் தேதி மண்டிக்கு பயணம் மேற்கொண்டு, ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் புனல் மின்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்

கூட்டுறவு கூட்டாட்சி என்னும் பிரதமரின் தொலைநோக்கின் கீழ், ஆறு மாநிலங்களை ஒருங்கிணைத்து சாத்தியமாக்கியுள்ள ரேணுகாஜி அணைத் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
தில்லியின் குடிநீர் விநியோகத்திற்கு பெரிதும் உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
லூக்ரி 1ம் கட்டம் மற்றும் தவுலாசித் புனல் மின்திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
சாவ்ரா-குட்டு புனல் மின்திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
இமாச்சலப் பிரதேசத்தின் உலக முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது பூமி பூஜைக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
இம்மாநாடு ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்குவதன் மூலம் பிராந்தியத்தில் முதலீட்டுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 26 DEC 2021 9:50AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 27-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் மண்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். அன்று 12 மணியளவில், ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் புனல் மின்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சுமார் 11.30 மணியளவில், இமாச்சலப் பிரதேசத்தின் உலக முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது அடிக்கல் பூமி பூஜைக்கு  பிரதமர் தலைமை தாங்குகிறார்.

நாட்டில் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆதாரங்களை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இமயமலை பிராந்தியத்தில் புனல் மின்திட்ட ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது அதில் ஒன்றாகும். இந்தப் பயணத்தின் போது அடிக்கல் நாட்டப்படவுள்ள திட்டங்கள் இந்த இத்திசையில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாகும்.

பிரதமர் ரேணுகாஜி அணை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். முப்பது ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த திட்டத்தை, கூட்டுறவு கூட்டாட்சி என்னும் பிரதமரின் தொலைநோக்கின் கீழ், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், தில்லி ஆகிய ஆறு மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசு சாத்தியமாக்கியுள்ளது. 40 மெகாவாட் திறனுள்ள இத்திட்டம் ரூ.7,000 கோடியில் உருவாக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் கன மீட்டர் குடிநீர் விநியோகத்திற்கு வகை செய்யும் இத்திட்டம் தில்லிக்கு பெரிதும் உதவும்.

லுக்ரி முதல் கட்ட நீர் மின்திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த 210 மெகாவாட் திட்டம் ரூ.1800 கோடி செலவில் உருவாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நவீன மின் தொகுப்பு காரணமாக, இத்திட்டத்தால் அண்டை மாநிலங்கள் பயனடையும்.

தவுலாசித் நீர் மின்திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது ஹமிர்பூர் மாவட்டத்தின் முதலாவது நீர் மின்திட்டமாக இருக்கும்.இந்த 66 மெகாவாட் திட்டத்திற்கு ரூ.680 கோடி செலவாகும். ஆண்டுக்கு 300 மில்லியன் யூனிட்டுகளுக்கும் மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

சாவ்ரா-குட்டு நீர்மின் திட்டத்தை பிரதமர் நாளை தொடங்கி வைப்பார். 111 மெகாவாட் திறன் கொண்ட இத்திட்டம் ரூ.2800 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 380 மில்லியன் யூனிட்டுகளுக்கும் மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் மாநிலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டும்.

இமாச்சலப் பிரதேசத்தின் உலக முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது அடிக்கல் பூமி பூஜைக்கு  பிரதமர் தலைமை தாங்குகிறார். ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்குவதன் மூலம் பிராந்தியத்தில் முதலீட்டுக்கு இம்மாநாடு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

*****


(Release ID: 1785278) Visitor Counter : 225