ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியை ஊரக வளர்ச்சி அமைச்சகம் தொடங்க உள்ளது

Posted On: 17 DEC 2021 12:15PM by PIB Chennai

விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சரிபார்க்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ 5,000 மதிப்பிலான ஓவர்டிராஃப்ட் வசதியை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா ​​டிசம்பர் 18, 2021 அன்று தொடங்கி வைக்கிறார்.

வங்கிகள் மற்றும் மாநில திட்டங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் கிராமப்புற நிதி உள்ளடக்கம் குறித்த சொற்பொழிவுஇடம்பெறும். தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டிற்கான வங்கிகளின் செயல்திறனுக்கான வருடாந்திர விருதுகளும் அறிவிக்கப்படும்.

காணொலி முறையில் நடைபெறும் துவக்க நிகழ்ச்சியில் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டங்களின் நிர்வாக இயக்குநர்கள், தலைமை செயல் அதிகாரிகள், தலைமைப் பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சரிபார்க்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அவசர தேவைகளை எதிர்கொள்வதற்காக ரூ 5,000 மதிப்பிலான ஓவர்டிராஃப்ட் எனப்படும் அதிகப்பற்று வசதி வழங்கப்படுகிறது. சுமார் 5 கோடி பெண்கள் இந்த வசதிக்கு தகுதி பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782557

********



(Release ID: 1782658) Visitor Counter : 236