பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தின் உம்ரஹா கிராமத்தில் உள்ள ஸ்வர்வேத் மகாமந்திர் தாமில் சத்குரு சடாஃபல்தேவ் விஹாங்கம் யோக் சன்ஸ்தானின் 98-வது ஆண்டுக் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்
“பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் பணிகின்றபோது கீதை ஜெயந்தி தினத்தில் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்”
“சத்குரு சடாஃபல்தேவ் அவர்களின் ஆன்மீக முன்னிலைக்கு நான் தலைவணங்குகிறேன்”
“காலம் சாதகமாக இல்லாத போது, காலத்தின் ஓட்டத்தை மாற்றுவதற்கு நமது நாட்டில் சில துறவிகள் உருவாகிறார்கள். சுதந்திரத்தின் மாபெரும் நாயகர் உலகத்தால் மகாத்மா என்று அழைக்கப்படுவது இந்தியாவில்தான்”
“பனாரசின் மேம்பாடு பற்றி நாம் பேசும்போது அது ஒட்டுமொத்த இந்தியாவின் மேம்பாட்டுக்கான வரைபட வடிவமாகவும் இருக்கிறது”
“பழமையை நிலைநிறுத்திக் கொண்டே புதுமையைத் தழுவுகின்ற பனாரஸ், நாட்டிற்கு புதிய திசையைக் காட்டுகிறது”
“இன்று நாட்டின் உள்ளூர் வணிகங்கள், வேலைவாய்ப்பு, உற்பத்திப் பொருட்கள் புதிய பலத்தைப் பெற்றுள்ளன, உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக மாறுகின்றன”
Posted On:
14 DEC 2021 4:50PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் உம்ரஹா கிராமத்தில் உள்ள ஸ்வர்வேத் மகாமந்திர் தாமில் சத்குரு சடாஃபல்தேவ் விஹாங்கம் யோக் சன்ஸ்தானின் 98-வது ஆண்டு கொண்டாட்டத்தின் பொது நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
பொதுமக்களிடையே, உரையாற்றிய பிரதமர், காசியில் நேற்று மகாதேவின் பாதங்களில் மகத்தான ‘விஸ்வநாதர் ஆலயம்’ அர்ப்பணிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். “காசியின் சக்தி நிலையானது மட்டுமல்ல தொடர்ச்சியாக புதிய பரிமாணங்களுக்கும் கொண்டு செல்வதாகும்” என்று அவர் கூறினார். புனிதமான கீதை ஜெயந்தி, விழா நாளில் பகவான் கிருஷ்ணரின் பாதங்களிலும் அவர் தலைவணங்கினார். “இந்நாளில் குருஷேத்திர போர்க்களத்தில் படைகள் நேருக்கு நேர் மோதின. இறுதியில், மனிதகுலம் யோகா, ஆன்மீகம், பரமார்த்தம் ஆகிய ஞானத்தைப் பெற்றன. பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் பணிகின்றபோது, கீதை ஜெயந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் நாட்டு மக்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறினார்.
சத்குரு சடாஃபல்தேவ் அவர்களுக்குப் பிரதமர் புகழாரம் சூட்டினார். “அவரது ஆன்மீக முன்னிலைக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த மரபை உயிரோட்டமாக, புதிய விரிவாக்கத்தை வழங்குகின்ற ஸ்ரீ ஸ்வதந்த்ர தேவ் மகராஜ் அவர்களுக்கும், ஸ்ரீ விக்ஞான் தேவ் மகராஜ் அவர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறினார். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் பங்களிப்பையும், சிக்கலான தருணங்களில் துறவிகளைத் தருகின்ற இந்தியாவின் பாரம்பரிய வியப்பையும், பிரதமர் நினைவுகூர்ந்தார். “நமது நாடு மிகவும் சிறப்புமிக்கது. காலம் சாதகமாக இல்லாத போது, காலத்தின் ஓட்டத்தை மாற்றுவதற்கு நமது நாட்டில் சில துறவிகள் உருவாகிறார்கள். சுதந்திரத்தின் மாபெரும் நாயகர் உலகத்தால் மகாத்மா என்று அழைக்கப்படுவது இந்தியாவில்தான்” என்று அவர் மேலும் கூறினார்.
காசியின் புகழையும், முக்கியத்துவத்தையும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். பனாரஸ் போன்ற நகரங்கள், கடுமையான காலங்களில்கூட இந்தியாவின் அடையாளம், கலை, தொழில்முனைவு போன்ற வித்துக்களைப் பாதுகாத்துள்ளன. “ஒரு வித்து எங்கே இருக்கிறதோ அங்கே மரம் உருவாகத் தொடங்குகிறது. எனவே, பனாரசின் மேம்பாடு பற்றி நாம் பேசும்போது அது ஒட்டுமொத்த இந்தியாவின் மேம்பாட்டுக்கான வரைபட வடிவமாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
காசிக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர், இந்த நகரின் முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை நேற்றுப் பின்னிரவில் ஆய்வு செய்தார். பனாரசில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணியில், தொடர்ச்சியான தமது ஈடுபாட்டை அவர் வலியுறுத்தினார். “நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின், நான் வாய்ப்பைப் பெற்ற உடனே, எனது காசியில் நடைபெறும் பணியைக் காண நான் மீண்டும் வெளியே சென்றேன்” என்று அவர் கூறினார். கடோலியாவில் மேற்கொள்ளப்படும் அழகுப்படுத்தும் பணி கண்களைக் கவர்வதாக இருக்கும் என்று அவர் கூறினார். “பலருடன் நான் கலந்துரையாடினேன். மந்துவாரியில் பனாரஸ் ரயில் நிலையத்தையும் நான் பார்வையிட்டேன். இந்த நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழமையை நிலைநிறுத்திக் கொண்டே புதுமையைத் தழுவுகின்ற பனாரஸ் நாட்டிற்கு புதிய திசையைக் காட்டுகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்ட காலத்தில் சத்குரு அளித்த சுதேசி மந்திரத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று அதே உணர்வில், “தற்சார்பு இந்தியா இயக்கத்தை” நாடு தொடங்கியிருக்கிறது. “இன்று நாட்டின் உள்ளூர் வணிகங்கள், வேலைவாய்ப்பு, உற்பத்திப் பொருட்கள் புதிய பலத்தைப் பெற்றுள்ளன, உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக மாறுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வுடன் தமது உரையைத் தொடர்ந்த பிரதமர், ஒவ்வொருவரும், சில சபதங்களை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த சபதங்கள், நிறைவேற்றப்பட்ட சத்குருவின் சபதங்கள் போல இருக்க வேண்டும் என்றும் இவற்றின் நாட்டின் பெருவிருப்பங்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சபதங்களுக்கு உத்வேகம் வழங்கப்பட வேண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டும். முதல் சபதமாக மகள்களைப் படிக்க வைப்பது பற்றியதாகவும், அவர்களுக்குத் திறன் மேம்பாடு அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். “அவர்களின் குடும்பங்களோடு, சமூகத்தில் பொறுப்பெடுத்துக் கொள்ள முடிகின்றவர்களும், ஒன்று அல்லது இரண்டு ஏழைப் பெண் குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் வற்புறுத்தினார். மற்றொரு சபதம் தண்ணீரை சேமிப்பது பற்றி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். “நமது ஆறுகளையும், கங்காதேவியையும் மற்றும் நீராதாரங்கள் அனைத்தையும் நாம் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் “என்பதுடன் பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781373
-----
(Release ID: 1781552)
Visitor Counter : 218
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam