பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்’ (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்

Posted On: 08 DEC 2021 12:19PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல் (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  திரு கிரிராஜ் சிங் 07.12.2021 அன்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதன் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் தகவல் பலகை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான பயிற்சி நிர்வாக இணைய பக்கம் ஆகிய இரண்டு டிஜிட்டல் தகவல் பலகைகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.  பயிற்சி நிர்வாக இணைய பக்கம் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது. 

எஸ்டிஜியை அடைவதை நோக்கிய செயல்திட்டத்திற்கு உதவும் தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கையை வெளிக்கொண்டு வருவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முயற்சிகளை திரு கிரிராஜ் சிங் பாராட்டினார். 2030-க்குள் எஸ்டிஜியை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  எஸ்டிஜியை அடைவது ஒரு சவால் என கருதி அடித்தள நிலையில்  கவனத்தோடும், ஒருங்கிணைந்த முறையிலும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 32 லட்சம் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார். 

முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய ஊட்டச்சத்து குறைபாட்டின் அனைத்து வடிவிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, வாழ்க்கையை எளிதாக்குதல், வாழ்வாதார வாய்ப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.   ஊரகப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடியிருப்போருக்கு துப்புரவு ஆகியவற்றை உறுதி செய்ய பஞ்சாயத்துகள் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு சுனில் குமார், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779137

******************


(Release ID: 1779271) Visitor Counter : 449