பிரதமர் அலுவலகம்

21-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு

Posted On: 06 DEC 2021 10:28PM by PIB Chennai

1. பிரதமர் திரு நரேந்திர மோடியுடனான 21-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர், மேன்மைமிகு திரு விளாடிமிர் புடின், 06 டிசம்பர் 2021 அன்று புது தில்லிக்கு வருகை தந்தார்.

 

2. அதிபர் புடினுடன் உயர்மட்டக் குழுவும் வந்தது. பிரதமர் திரு மோடி மற்றும் அதிபர் திரு புதின் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நட்பு ரீதியில் நடைபெற்றது. கொவிட் தொற்றுநோய் சவால்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான யுக்தி சார்ந்த கூட்டுறவில் நீடித்த முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 6 டிசம்பர் 2021 அன்று புதுதில்லியில் நடைபெற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் 2+2 உரையாடல் மற்றும் ராணுவம் மற்றும் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் முதல் கூட்டத்தை அவர்கள் வரவேற்றனர்.

 

3. அதிகளவிலான பொருளாதார ஒத்துழைப்பின் அவசியத்தை தலைவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினார்கள், இந்தச் சூழலில், நீடித்த பொருளாதார ஒத்துழைப்பிற்கான வளர்ச்சியின் புதிய இயக்கிகள் குறித்து வலியுறுத்தினார்கள். பரஸ்பர முதலீடுகளின் வெற்றியை அவர்கள் பாராட்டினர். சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சென்னை - விளாடிவோஸ்டோக் கிழக்கு கடல்வழி பாதை ஆகியவற்றின் மூலம் ஏற்படவுள்ள இணைப்பின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. ரஷ்யாவின் பல்வேறு பிராந்தியங்கள், குறிப்பாக ரஷ்ய தூர-கிழக்கு பகுதிகள் மற்றும் இந்திய மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை இரு தலைவர்களும் எதிர்பார்த்தனர். கொவிட் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை அவர்கள் பாராட்டினர், முக்கியமான காலகட்டங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளன.

 

4. பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்சி மற்றும் ஆப்கானிஸ்தானின் நிலைமை உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். பல சர்வதேச விவகாரங்களில் இரு தரப்பினரும் பொதுவான நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டதாகவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

5. இந்தியா-ரஷ்யா: அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான கூட்டு என்ற தலைப்பிலான கூட்டறிக்கை, இருதரப்பு உறவுகளின் நிலை மற்றும் வாய்ப்புகளை பொருத்தமாக உள்ளடக்கியுள்ளது. இந்த பயணத்தின் போது, வர்த்தகம், எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, விண்வெளி, புவியியல், ஆய்வு, கலாச்சார பரிமாற்றம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் அரசுகளுக்குகு இடையேயும் இரு நாடுகளின் வர்த்தக மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையேயும் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது நமது இருதரப்பு கூட்டுறவின் பன்முகத்தன்மையின் பிரதிபலிப்பாகும்.

 

6. 2022-ல் 22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு ரஷ்யாவுக்கு வருகை தருமாறு பிரதமர் திரு மோடிக்கு அதிபர் திரு புடின் அழைப்பு விடுத்தார்.



(Release ID: 1778953) Visitor Counter : 354