குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி, யானைகள் – மனித மோதலைத் தடுக்க அஸ்ஸாமில் ரீ-ஹேப் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய கதர் கிராமத் தொழில் வாரியம்
Posted On:
04 DEC 2021 2:09PM by PIB Chennai
சிறிய அளவிலான தேனீக்களைப் பயன்படுத்தி, யானைகள்-மனிதர்கள் இடையிலான மோதலைத் தடுக்கும் புதுமைத் திட்டமான RE-HAB (Reducing Elephant-Human Attacks using Bees) கர்நாடகாவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அஸ்ஸாமிலும் இத்திட்டத்தை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. யானைகள்-மனிதர்கள் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட, அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோர்னோய் கிராமத்தில், கதர் கிராமத் தொழில் வாரியத் தலைவர் திரு.வினய் குமார் சக்ஸேனா, வெள்ளிக்கிழமையன்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். உள்ளூர் வனத்துறையினரின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
RE-HAB திட்டத்தின்கீழ், யானைகள் செல்லும் வழித்தடத்தில், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்து, “தேனீ -வேலிகள்“ அமைக்கப்பட்டு, இந்தப் பெட்டிகளை இழுத்தால் பெட்டிகளில் உள்ள தேனீக்கள் யானைகளை சுற்றிவளைத்து விரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, செலவு குறைவானது என்பதுடன், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், யானைகள்-மனிதர்கள் இடையிலான மோதலைத் தடுக்கிறது.
அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்ட அஸ்ஸாமின் பெரும்பகுதியில் யானைகள் உள்ள நிலையில், யானைகளின் தாக்குதலால் 2014 முதல் 2019 வரை 332 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
*********
(Release ID: 1778089)
Visitor Counter : 271