தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா புதிய தொழில்நுட்பத்தை தழுவியுள்ளது, இளம் திறமையாளர்களுக்கு தளத்தை அளித்துள்ளது; திரைப்பட விழா நிறைவு விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர்

Posted On: 28 NOV 2021 7:19PM by PIB Chennai

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவை எட்டிய நிலையில், திரைப்படம் என்னும் வலிமையான ஊடகத்தின் மூலம், படைப்பாற்றல் கருத்தின் அருமையான வடிவங்களை வளர்த்து, மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் கூறியுள்ளார்.

கோவாவில் உள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி உள்ளரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர், நல்ல திரைப்படங்களை திரையிட்டு, அவற்றுக்கு மரியாதை செலுத்திய விதம் பாராட்டுக்குரியது என்று கூறி, இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

‘’திரைப்படத்தை  உருவாக்குவதில் நமது உயரிய பாரம்பரியம், கதை சொல்லும் கலை ஆகியவற்றை திரைப்படம் மூலம் வெளிப்படுத்துவதைக் கொண்டாட நாம் ஒன்றாக சேர்ந்தோம். திரைப்படத்துறையின் பழம்பெரும் மேதைகள், பிரபலங்கள் மத்தியில் இளம் திறமையாளர்களையும் அடையாளம் கண்டோம்’’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  

உலகில் இந்தியாவில்தான், அதிக அளவு திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இன்னும் அதிக படங்கள் தயாரிக்கப்படுவதுடன், பிராந்திய திரைப்பட விழாக்களை கொண்டாட வேண்டியது அவசியம் என்று கூறினார். ‘ இளம் தொழில்நுட்பத் திறமைகளைப் பயன்படுத்தி, இந்தியாவை தயாரிப்புக்கு பிந்தைய தொழில்நுட்பங்களின் மையமாக உருவாக்க நாம் விரும்புகிறோம். திரைப்படங்கள், விழாக்களின் முனையமாக இந்தியாவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.உலக சினிமாவின் மையமாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். கதை சொல்லிகளின் மிகவும் விருப்பமான இடமாக மாற்ற விரும்புகிறோம்’’ என்று அவர் கூறினார்.

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா பல விதத்தில் முதலாவதாக அமைந்தது என்று கூறிய அமைச்சர், ‘’ முதன்முறையாக ஓடிடி தளங்களை உற்சாகத்துடன் கலந்து கொள்ள வைத்துள்ளோம். ஐஎப்எப்ஐ புதிய தொழில்நுட்பங்களைத் தழுவியுள்ளதுடன், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, பார்வையாளர்களுக்கு தளத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது. பிரிக்ஸ் நாடுகளின் மிகச்சிறந்த படங்களை திரையிட்டு, நமது நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தி மலரச் செய்துள்ளோம்’’ என்றார்.

ஐஎப்எப்ஐ ஆண்டுக்கு ஆண்டு பெரிதாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்த தகவல் ஒலிபரப்பு அமைச்சர், ‘’ இந்த திரைப்பட விழாவில், திரைப்பட இயக்குநர்கள், மாணவர்கள், திரைப்பட ரசிகர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து, 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், கலந்து கொண்டனர். சுமார் 450 மணி நேரத்து திரைப்படங்கள்  234 காட்சிகளாக திரையிடப்பட்டன. ஆன்லைனில் பார்க்கப்பட்ட மொத்த நேரம் 30,000 மணியைத் தாண்டும்’’ என்ற தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு திரைப்பட விழா, ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கியதாக கூறிய அமைச்சர், 73 நாடுகளைச் சேர்ந்த 148 வெளிநாட்டு படங்கள் திரையிடப்பட்டதாக கூறினார். இந்த விழா, 12 உலக பிரிமியர், 7 சர்வதேச பிரிமியர்,24 ஆசிய பிரிமியர், 74 இந்திய பிரிமியர் காட்சிகளைக் கண்டது. 75 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் 17 இந்தியா @ 75 பிரிவில் சிறப்பாக தேர்வு செய்யப்பட்டவை.

அடுத்த திரைப்பட விழா, இதே காலத்தில், அதாவது, நவம்பர் 20 முதல் 28 வரை இதே இடத்தில் ( கோவாவில்) நடைபெறும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1775901

******



(Release ID: 1775938) Visitor Counter : 186