பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் – 83ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 28.11.2021
Posted On:
28 NOV 2021 11:33AM by PIB Chennai
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாம் மீண்டும் ஒரு முறை மனதின் குரலுக்காக இணைந்திருக்கிறோம். இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றது, டிசம்பர் வந்து விட்டாலே மனோவியல்ரீதியாக, ஆண்டு நிறைவடைந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பிறந்து விடும். இது ஆண்டின் இறுதி மாதம், புதிய ஆண்டிற்குத் தயாராகும் நடவடிக்கைகளைத் தொடங்கி விடுவோம். இந்த மாதத்தில் தான் கடற்படை தினம் மற்றும் இராணுவப் படைகளின் கொடிநாளை தேசம் கொண்டாடுகிறது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற போரின் பொன்விழாவினை இந்த ஆண்டு தேசம் கொண்டாடுகிறது என்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் தேசத்தின் பாதுகாப்புப் படைகளை நினைவுகூருகிறேன், நம்முடைய வீரர்களை நினைவில் ஏந்துகிறேன். குறிப்பாக, இப்படிப்பட்ட வீரர்களைப் பெற்றெடுத்த அன்னையரை நினைவுகூருகிறேன். எப்போதும் போலவே இந்த முறையும் நமோ செயலியில், மைகவ் தளத்தில் நீங்கள் எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் என்னை உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக எண்ணி, உங்கள் வாழ்க்கையின் சுகதுக்கங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் இளைஞர்கள் பலருண்டு, மாணவமாணவியர் பலர் உண்டு. மனதின் குரல் என்ற நம்முடைய குடும்பம் தொடர்ந்து பெருகி வருகிறது, மனங்களாலும் இணைந்து வருகின்றார்கள், நோக்கத்தாலும் இணைந்து வருகின்றார்கள், நம்முடைய ஆழமான உறவுகள், நமக்குள்ளே, ஆக்கப்பூர்வமான பிரவாகத்தைத் தொடர்ந்து பெருக்கெடுக்கச் செய்து வருகிறது என்பது எனக்கு உள்ளபடியே மிகுந்த நிறைவினைக் கொடுக்கின்றது.
எனதருமை நாட்டுமக்களே, சீத்தாபூரைச் சேர்ந்த ஓஜஸ்வி, அமிர்த மஹோத்சவத்தோடு தொடர்புடைய விஷயங்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக எழுதியிருக்கிறார். இவர் தனது நண்பர்களோடு இணைந்து மனதின் குரலைக் கேட்டு வருகிறார், சுதந்திரப் போராட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்ளவும், கற்கவும், தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். நண்பர்களே, அமிர்த மஹோத்சவம், கற்றலோடு கூடவே, நல்ல விஷயம் ஒன்றைச் செய்யவும் கருத்தூக்கம் அளிக்கிறது. இப்போது நாடெங்கிலும், அது பொதுமக்களாக இருக்கட்டும், அரசுகளாகட்டும், பஞ்சாயத்துக்கள் தொடங்கி, பாராளுமன்றம் வரை, அமிர்த மஹோத்சவத்தின் எதிரொலி எங்கெங்கும் ஒலிக்கின்றது. இந்த மஹோத்சவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி கடந்த நாட்களில் தில்லியில் நடைபெற்றது. இதன் தலைப்பு குழந்தைகள் ஒலிக்கும் சுதந்திரத்தின் கதை. இதில் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய சம்பவங்களை உணர்ச்சிப் பெருக்கோடு அளித்தார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பாரத நாட்டோடு கூடவே, நேபாளம், மௌரிஷியஸ், டான்ஸானியா, ந்யூசீலாண்ட், ஃபீஜீ நாடுகளுடைய மாணவர்களும் இதில் பங்கெடுத்தார்கள் என்பது தான். நம்முடைய தேசத்தின் மஹாரத்தினம் ஓ.என்.ஜி.சி. இதுவும் சில நூதனமான முறைகளில் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடி வருகிறது. ஓ.என்.ஜி.சி இப்பொது, எண்ணைக் கிணறுகளைக் காண்பதற்கு, மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்தச் சுற்றுலாக்களில் ஓ.என்.ஜி.சியின் எண்ணை வயல்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, நம்முடைய வருங்கால பொறியாளர்கள், தேச நிர்மாண முயற்சிகளில் முழு உற்சாகத்தோடும், தீர்மானத்தோடும் பங்களிக்க வேண்டும் என்பது தான்.
நண்பர்களே, சுதந்திரத்தில் நம்முடைய பழங்குடியினத்தவரின் பங்களிப்பைப் பார்த்து, தேசம் பழங்குடியின கௌரவ வாரத்தையும் கொண்டாடியது. தேசத்தின் பல்வேறு பாகங்களில் இதோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அண்டமான் – நிகோபார் தீவுக்கூட்டங்களில் ஜார்வா மற்றும் ஓங்கி போன்ற பழங்குடியின மக்கள், தங்களுடைய கலாச்சாரம் பற்றிய உயிர்ப்புடைய வெளிப்பாட்டை அளித்தார்கள். ஒரு அருமையான பணியை ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனாவின் மினியேச்சர் ரைட்டரான ராம் குமார் ஜோஷி அவர்கள் செய்திருக்கிறார். இவர் தபால் தலைகளிலே, அதாவது சிறிய தபால் தலைகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் வித்தியாசமான வரிவடிவத்தை உருவாக்கி இருக்கிறார். ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட ராம் என்ற சொல்லின் மீது இவர் வரிவடிவத்தை உருவாக்கினார், இதிலே இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கையையும் சுருக்கமாகப் பொறித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் கட்னியிலும் சில நண்பர்கள் நினைவில் கொள்ளத்தக்க கதை சொல்லும் நிகழ்ச்சி பற்றிய தகவல்களை அளித்திருக்கிறார்கள். இதில் ராணி துர்க்காவதியின் அற்புதமான சாகஸம் மற்றும் உயிர்த்தியாகம் பற்றிய நினைவுகளை புதுப்பித்திருக்கிறார்கள். இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி காசியிலும் நடைபெற்றது. கோஸ்வாமி துளசிதாஸ், சந்த் கபீர், சந்த் ரவிதாஸர், பாரதேந்து ஹரிஷ்சந்திரர், முன்ஷீ பிரேம்சந்த், ஜய்ஷங்கர் பிரசாத் போன்ற பேராளுமைகளுக்கு கௌரவம் சேர்க்கும் வகையிலே மூன்று நாட்கள் வரையிலான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில், இவர்கள் அனைவரும், தேசத்தில் விழிப்புணர்வு ஏற்பட மிகப்பெரும் பங்களிப்பை நல்கியிருக்கின்றார்கள். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், மனதின் குரலின் கடந்த பகுதிகளில், நான் மூன்று போட்டிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதாவது ஒரு தேசபக்திப் பாடலை எழுத வேண்டும், தேசபக்தியோடு தொடர்புடைய, சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய சம்பவங்களைக் கொண்டு கோலம் போடுவது, மேலும் நமது குழந்தைகளின் மனதிலே மகோன்னதமான பாரதம் பற்றிய கனவுகளை விழிப்படையச் செய்யும் தாலாட்டுப் பாடல்களை எழுதுவது. இந்தப் போட்டிகளில் நீங்கள் கண்டிப்பாக உங்கள் நுழைவை அனுப்பி வைத்திருப்பீர்கள், அல்லது இதற்கான திட்டம் தீட்டியிருப்பீர்கள், உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடி இருப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. இந்தியாவின் ஒவ்வொரு இடத்திலும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டிப்பாக உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த விஷயத்திலிருந்து சற்று விலகி, உங்களை நான் இப்போது நேரடியாக விருந்தாவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். பகவானுடைய அன்பின் பிரத்யட்சமான சொரூபம் விருந்தாவனம் என்று கூறப்படுவது உண்டு. நம்முடைய புனிதர்களும் என்ன கூறியிருக்கிறார்கள் பாருங்கள் –
यह आसा धरि चित्त में, यह आसा धरि चित्त में,
कहत जथा मति मोर |
वृंदावन सुख रंग कौ, वृंदावन सुख रंग कौ,
काहु न पायौ और |
அதாவது விருந்தாவனத்தின் மகிமையை, நாமனைவரும், நம்முடைய திறன்களுக்கேற்ப உரைக்கிறோம், ஆனால் விருந்தாவனத்தின் சுகம் இருக்கிறதே, இங்கே இருக்கும் ஆனந்தம் இருக்கிறதே, இதற்கு முடிவே இல்லை, இதை யாராலும் முழுமையாகப் பெற முடியாது, இது எல்லையே இல்லாதது. ஆகையினால் தான் விருந்தாவனம், உலகெங்கிலும் உள்ள மக்களைத் தன்னை நோக்கி ஈர்க்கின்றது. இது பதிக்கக்கூடிய அடையாளம் உலகின் மூலைமுடுக்கெங்கிலும் காணக் கிடைக்கின்றது.
மேற்கு ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் ஒரு நகரம் பெர்த். இந்த இடம் பற்றித் தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது, ஏனென்றால் பெர்த் நகரில் எப்போதும் கிரிக்கெட் ஆட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கும். பெர்த் நகரிலே ஒரு Sacred India Gallery புனித இந்தியா கண்காட்சியகம் உண்டு, இது ஒரு கலைக்கூடம். இந்தக் கூடம் ஸ்வான் பள்ளத்தாக்கின் ஒரு அழகான இடத்திலே உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்ட்ரேலியாவில் வசிக்கும் ஜகத் தாரிணீ தாசி அவர்களின் முயற்சிகளின் பயனாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜகத் தாரிணீ அவர்கள் ஆஸ்ட்ரேலியா நாட்டைச் சேர்ந்தவர் தான், அங்கே தான் பிறந்தவர், அங்கேயே வளர்ந்தவர் என்றாலும், அவர் தன்னுடைய 13 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை விருந்தாவனத்திலே கழித்திருக்கிறார். அவர் ஆஸ்ட்ரேலியாவிற்குத் திரும்பிச் சென்றாலும், தன்னால் விருந்தாவனத்தை மறக்க முடியவில்லை என்று கூறுகிறார். ஆகையால் இவர் விருந்தாவனத்தோடும், அதன் ஆன்மீக உணர்வோடும் இணைந்திருக்க, ஆஸ்ட்ரேலியாவிலேயே விருந்தாவனத்தை உருவாக்கியிருக்கிறார். இதற்குத் தனது கலையையே ஊடகமாக்கி, ஒரு அற்புதமான விருந்தாவனத்தை உருவாக்கினார். இங்கே வருவோருக்குப் பலவகையான கலைப்படைப்புகள் விருந்தை அளிக்கின்றன. காண்போருக்கு பாரதத்தின் மிகவும் பிரபலமான புனிதத்தலங்களான விருந்தாவனம், நவாத்வீபம், ஜகன்னாதபுரியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் காட்சி கிடைக்கும். இங்கே பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதிலே ஒரு கலைப்படைப்பு எப்படி என்றால், இதிலே பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தனது சிறுவிரலில் உயர்த்தியபடி இருப்பது; இதனடியே விருந்தாவனத்தின் மக்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள். ஜகத் தாரிணீ அவர்களின் இந்த அற்புதமான முயல்வு, உண்மையிலேயே நமக்கு கிருஷ்ண பக்தியின் சக்தியின் காட்சியை அமைத்துக் கொடுக்கிறது. இந்த முயற்சிக்காக நான் அவருக்குப் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
என் மனதிற்கினிய நாட்டுமக்களே, ஆஸ்ட்ரேலியாவின் பெர்த்தில் உருவாக்கப்பட்டிருக்கும் விருந்தாவனம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் ஒரு சுவாரசியமான வரலாறு என்று பார்த்தால், ஆஸ்ட்ரேலியாவின் ஒரு உறவு நம்முடைய புந்தேல்கண்டின் ஜான்சியோடும் இருக்கின்றது. உள்ளபடியே ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக, சட்டபூர்வமாகப் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவருடைய வழக்குரைஞராக இருந்தவர் ஜான் லேங்க். இவர் ஆஸ்ட்ரேலிய நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் வசித்து, ராணி லக்ஷ்மிபாய் தரப்பில் வழக்காடிக் கொண்டிருந்தார். நம்முடைய சுதந்திரப் போராட்டத்திலே, ஜான்சியும், புந்தேல்கண்டும் அளித்திருக்கும் மகத்தான பங்களிப்பு என்ன என்பதை நாமனைவரும் நன்கறிவோம். இங்கே ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரீ பாய் போன்ற வீர மங்கையரும் தோன்றியிருக்கின்றார்கள், மேஜர் தியான்சந்த் போன்ற விளையாட்டுத் துறை ரத்தினங்களும் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
நண்பர்களே, வீரம் என்பது யுத்தகளத்திலே மட்டும் வெளிப்படுத்தப்படுவது அல்ல, அப்படி எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதிப்பாடு நிறைவடையும் போதும், அது விரிவடையும் போதும், அனைத்துத் துறைகளிலும் செயல்கள் வெற்றியடையத் தொடங்கும். இப்படிப்பட்ட ஒரு வீரம் பற்றி ஜோத்ஸனா அவர்கள் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். ஜாலௌனில் பாரம்பரியமாகவே பெருகியோடிய ஒரு நதி நூன் நதி. இங்கே இருக்கும் விவசாயிகளுக்கான ஒரு நீராதாரமாக இது இருந்து வந்துள்ளது, ஆனால் மெல்லமெல்ல நூன் நதி வறண்டு போகும் நிலை ஏற்பட்டு, கொஞ்சநஞ்சம் நதியே எஞ்சி இருந்த நிலையில், அது ஒரு ஓடையாக மாறி விட்ட வேளையில், இதிலிருந்து நீர்ப்பாசனம் செய்வது என்பது விவசாயிகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஜாலௌன்வாசிகள் இந்த நிலையை மாற்றும் சவாலை எதிர்கொண்டார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம், இதன் பொருட்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிராமவாசிகளும், அந்தப் பகுதி மக்களும் தாங்களாகவே ஊக்கம் பெற்று இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். இங்கே இருக்கும் பஞ்சாயத்துக்களும், கிராமவாசிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இன்று மிகவும் குறைவான காலத்திலே, மிகவும் குறைவான செலவிலே, இந்த நதி, மீண்டும் உயிர்த்திருக்கிறது. இதனால் எத்தனையோ விவசாயிகளுக்கு பயன் கிடைத்து வருகிறது. போர்க்களத்தை விட வேறுபட்ட வகை வீரத்தின் இந்த எடுத்துக்காட்டு, நமது நாட்டுமக்களின் உறுதிப்பாட்டுணர்வை வெளிப்படுத்துகிறது, மேலும் நாம் மனதிலே உறுதி மேற்கொண்டு விட்டால், சாத்தியமற்றது என்பது ஏதும் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆகையால் தான் நான் கூறுகிறேன் – அனைவருடைய முயற்சி.
என் அன்புநிறை நாட்டுமக்களே, நாம் இயற்கையைப் பாதுகாக்கும் போது, இதற்கு பதிலாக இயற்கையும் நம்மைப் பாதுகாத்தளிக்கிறது. இந்த விஷயத்தை நாம் நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவித்து உணர்ந்திருக்கலாம், இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டினை தமிழ்நாட்டின் மக்கள் பரந்துபட்ட அளவிலே வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தினுடையது. கரையோரப் பகுதிகள் பல வேளைகளில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதை நாம் அறிவோம். தூத்துக்குடியிலும் பல சிறிய தீவுகளும் திட்டுக்களும் இருக்கின்றன, இவை கடலில் மூழ்கும் அபாயம் வலுத்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் மற்றும் வல்லுநர்கள், இந்த இயற்கை அபாயத்திலிருந்து பாதுகாக்க இயற்கையை ஊடகமாகக் கொண்டார்கள். இவர்கள் இப்போது இந்த மணல் திட்டுக்களில் பனை மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல்கள் மற்றும் சூறாவளிகளிலும் நிமிர்ந்து நிற்பவை, நிலத்திற்குப் பாதுகாப்பளிப்பவை. இவற்றால் இந்தப் பகுதியைப் பாதுகாக்க ஒரு புதிய நம்பிக்கைக் கீற்று உதயமாகி இருக்கிறது.
நண்பர்களே, இயற்கை நமக்கெல்லாம் எப்போது அபாயத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால், நாம் அதன் சீர்தன்மையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் தூய்மைத் தன்மையை அழிக்கும் போது தான். இயற்கை, நம்மையெல்லாம் ஒரு அன்னையைப் போலப் பராமரிக்கிறாள், நமது உலகிலே புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்புகிறாள்.
இப்போது நான் சமூக ஊடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மேகாலயாவில் ஒரு பறக்கும் படகு பற்றிய படம் நன்கு பரவலாகி இருந்தது. முதல் பார்வையிலேயே நான் இதன்பால் கவரப்பட்டேன். உங்களில் பலர் இதை இணையத்தில் கண்டிருக்கலாம். காற்றில் மிதக்கும் இந்தப் படகினை நுணுகிப் பார்க்கும் போது, இது நதியில் பயணிப்பது நமக்குப் புரிய வரும். நதியின் நீர் எந்த அளவுக்குத் தூய்மையானதாக இருக்கிறது என்றால், அதன் அடிப்பகுதி வரை பளிங்கு போலத் தெரிகிறது, படகு ஏதோ காற்றிலே துடுப்பு போட்டுச் செல்வது போலத் தோன்றுகிறது. நம்முடைய நாட்டிலே பல மாநிலங்களில் இருக்கும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய இயற்கையின் பாரம்பரியங்களை, சிறப்பாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்தில் இயற்கையோடு இசைவான வாழ்க்கை முறை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. இவை நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கக் கூடியவை. நமக்கருகேயும் கூட இருக்கும் இயற்கை அழகுகளை நாம் பாதுகாக்க வேண்டும், அவற்றை முன்பிருந்த நிலைக்கே நாம் மீட்டுச் செல்ல வேண்டும். இதிலே தான் நம்மனைவரின் நலனும் அடங்கியிருக்கிறது, உலகின் நலனும் அடங்கியிருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, அரசு திட்டங்களைத் தீட்டும் போது, பணத்தைச் செலவு செய்யும் போது, காலத்திற்குள்ளாகத் திட்டங்களை நிறைவேற்றும் போது, அரசு வேலை செய்கிறது என்ற உணர்வு மக்கள் மனதிலே ஏற்படும். ஆனால் அரசு பல பணிகளின் வளர்ச்சிக்காக, பல திட்டங்களுக்கு இடையே செயலாற்றும் வேளையில், மனித உணர்வுகளின் புரிதலோடு தொடர்புடைய விஷயங்கள் எப்போதுமே ஒரு அலாதியான சுகத்தை அளிக்கின்றன. அரசின் முயற்சிகள் காரணமாக, அரசாங்கத்தின் திட்டங்களால் எப்படி ஒருவருடைய வாழ்க்கை மாறுகிறது, அந்த மாறிய வாழ்க்கையை அவர் எப்படி அனுபவிக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் நாம் கேள்விப்படும் போது, நம்முள்ளத்திலேயும் கருணை நிரம்பி விடுகிறது. இது மனதிற்கு நிறைவை அளிக்கிறது, அந்தத் திட்டத்தை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்க உத்வேகம் அளிக்கிறது. ஒரு வகையில், இது ஸ்வாந்த: சுகாய, அதாவது ஆன்மாவிற்குக் கிடைக்கும் ஆனந்தம் என்பது தான். அந்த வகையில் இன்று மனதின் குரலில் நம்மோடு இரண்டு நண்பர்கள் இணைய இருக்கின்றார்கள், இவர்கள் தங்களுடைய துணிவின் துணையால், ஒரு புதிய வாழ்க்கையை வென்றிருக்கிறார்கள். இவர்கள் ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின் உதவியால், சிகிச்சை பெற்றார்கள், ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். நமது முதல் நண்பரின் பெயர் ராஜேஷ் குமார் பிரஜாபதி, இவருக்கு இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது. வாருங்கள், நாம் ராஜேஷ் அவர்களோடு உரையாடுவோம்.
பிரதமர் – ராஜேஷ் அவர்களே வணக்கம்.
ராஜேஷ் பிரஜாபதி – வணக்கம்யா வணக்கம்.
பிரதமர் – ராஜேஷ் அவர்களே உங்களுக்கு என்னங்கய்யா நோய் இருக்கு? நீங்க ஒரு மருத்துவர் கிட்ட போயிருப்பீங்க, பிறகு அந்தப் பகுதி மருத்துவர் உங்களை வேற இடத்துக்கு அனுப்பியிருப்பாரு, அந்த மருத்துவர்கிட்ட நீங்க போயிருப்பீங்க. உங்களால முடிவு எதுவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும், இல்லை முடிவு எடுத்திருந்தா என்ன நடந்திச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!
ராஜேஷ் பிரஜாபதி – எனக்கு இருதயத்தில பிரச்சனைங்கய்யா. என் நெஞ்சுல ஒரே எரிச்சலா இருந்திச்சு, பிறகு நான் ஒரு மருத்துவர் கிட்ட காட்டினேன். அவரு முன்னயே ஒருவேளை, தம்பி உனக்கு அமிலத்தன்மை அதிகமாயிருக்கும் அப்படீன்னதால, நான் ரொம்ப நாள் வரை அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தற மருந்தை எடுத்துக்கிட்டேன். இதனால எனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கலைங்கற போது, நான் டாக்டர் கபூர் கிட்ட காட்டினேன். அப்ப அவரு சொன்னாரு, தம்பி உன்னோட அறிகுறியை புரிஞ்சுக்கணும்னா அதுக்கு ஆஞ்சியோகிராஃபி தான் செய்யணும்னு சொல்லி என்னை ஸ்ரீ ராம மூர்த்தி மருத்துவமனைக்கு பரிந்துரை செஞ்சாரு. அங்க நான் அமரேஷ் அக்ரவால் அவங்களை சந்திச்சேன், அவங்க தான் எனக்கு ஆஞ்சியோகிராஃபியை செஞ்சாங்க. அவங்க தான் என்கிட்ட சொன்னாங்க, தம்பி உனக்கு இரத்தக்குழாய்ல அடைப்பு இருக்குன்னாரு. இதை சரி செய்ய எத்தனை ரூபாய் செலவாகும்னு நான் அவருகிட்ட கேட்டேன். அப்ப அவரு உன் கிட்ட பிரதமர் உருவாக்கிக் கொடுத்திருக்கற ஆயுஷ்மான் அட்டை இருக்கான்னு கேட்டாரு. நான் உடனே, ஆமாம் டாக்டர் இருக்குன்னேன். உடனே அவரு என்கிட்டேர்ந்து அந்த அட்டையை வாங்கிக்கிட்டாரு, என்னோட எல்லா செலவும் அந்த அட்டை மூலமே செய்யப்பட்டிச்சு. ஐயா, நீங்க உருவாக்கிக் கொடுத்திருக்கற இந்த அட்டை இருக்கே, இது எங்களை மாதிரி ஏழைபாழைங்களுக்கு ரொம்ப பெரிய வசதியா, வரப்பிரசாதமா இருக்குங்கய்யா. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியலைங்கய்யா.
பிரதமர் – நீங்க என்ன வேலை பார்க்கறீங்க ராஜேஷ் அவர்களே?
ராஜேஷ் பிரஜாபதி – ஐயா, நான் இப்ப தனியார் நிறுவனம் ஒண்ணுல வேலை பார்த்திட்டு இருக்கேன்யா.
பிரதமர் – உங்களுக்கு என்ன வயசாகுதுங்க?
ராஜேஷ் பிரஜாபதி – 39ங்கய்யா.
பிரதமர் – இத்தனை சின்ன வயசுல உங்களுக்கு இப்படி இருதயத்தில பிரச்சனை ஆகியிருச்சே!!
ராஜேஷ் பிரஜாபதி – ஆமாங்கய்யா, என்னத்தை சொல்ல?
பிரதமர் – உங்க குடும்பத்தில, உங்க அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, இந்த மாதிரி முன்னால ஆகியிருக்கா?
ராஜேஷ் பிரஜாபதி – இல்லைங்கய்யா, இப்படி யாருக்குமே ஆனதில்லை. என் விஷயத்தில தான் இப்படி முதமுறையா நடந்திருக்கு.
பிரதமர் – இந்த ஆயுஷ்மான் அட்டையை இந்திய அரசு செஞ்சு கொடுக்குது, ஏழைபாழைகளுக்கு பெரிய வகையில உதவக்கூடிய பெரிய திட்டம் இது. சரி, உங்களுக்கு இதுபத்தி எப்படி தெரிய வந்திச்சு?
ராஜேஷ் பிரஜாபதி – ஆமாங்கய்யா, ஏழைங்களுக்கு இத்தனை உதவக்கூடிய, இத்தனை ஆதாயமா இருக்கற இது மிகப்பெரிய திட்டம் தாங்கய்யா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்கய்யா. மருத்துவமனையிலேயே இது எத்தனை பேர்களுக்கு எத்தனை உதவிகரமா இருக்குங்கறதை நான் கண்கூடா பார்த்தேன்யா. மருத்துவர் கிட்ட என் கிட்ட அட்டை இருக்குன்னு சொன்னா போதும், உடனே அவங்க உங்க அட்டையை கொண்டு வாங்கன்னு சொல்லி, அந்த அட்டை வாயிலாவே சிகிச்சை அளிச்சுடறாங்கய்யா.
பிரதமர் – சரி, உங்க கிட்ட அட்டை இல்லாம போயிருந்தா, உங்களுக்கு எத்தனை செலவாகியிருக்கும்னு மருத்துவர் சொன்னாரு?
ராஜேஷ் பிரஜாபதி – ஏகப்பட்ட செலவாகும் தம்பின்னு மருத்துவர் சொன்னாருங்கய்யா. அட்டை இருக்கான்னு அவரு கேட்டப்ப, நான் உடனே என் கிட்ட இருக்குன்னு சொன்னவுடனே, காமிக்க சொன்னாரு, நானும் காமிச்சேன். இந்த அட்டை மூலமாவே எனக்கு சிகிச்சை அளிச்சாங்க, நான் ஒரு பைசா செலவே செய்யலைங்க. மருந்துகள் கூட இந்த அட்டை மூலமாவே கொடுத்தாங்க.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, இப்ப உங்களுக்கு மனசுக்குத் தெம்பா இருக்கா, உடம்பு நல்லாயிருச்சா?
ராஜேஷ் பிரஜாபதி – ரொம்பங்கய்யா. உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்யா. என்னென்னைக்கும் நீங்களே ஆட்சியதிகாரத்தில இருக்கற வகையில உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கணும்ங்கய்யா. எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க உங்க கிட்ட எத்தனை சந்தோஷப்படுறாங்கன்னு என்னால வார்த்தையில சொல்ல முடியாது.
பிரதமர் – ராஜேஷ் அவர்களே, தயவு செஞ்சு நான் ஆட்சியதிகாரத்தில இருக்கணுங்கற ஆசிகளை எனக்குக் கொடுக்காதீங்க. நான் இன்னைக்கும் ஆட்சியதிகாரத்தில இல்லை, எதிர்காலத்திலயும் ஆட்சியதிகாரத்தில இருக்க விரும்பலை. நான் சேவை மட்டுமே செய்ய விரும்பறேன். என்னைப் பொறுத்த மட்டிலும் இந்தப் பதவி, பிரதம மந்திரிங்கறது எல்லாம், ஆட்சியதிகாரம் பத்தின விஷயம் இல்லை சகோதரா, இதெல்லாம் சேவைக்கானது மட்டும் தான்.
ராஜேஷ் பிரஜாபதி – எங்க எல்லாருக்கும் இந்தச் சேவை தானேய்யா தேவை, வேற என்ன?
பிரதமர் – பார்த்தீங்களா, இந்த ஆயுஷ்மான் பாரதம் திட்டம் ஏழைகளுக்கு எந்த அளவுக்கு அற்புதமா உதவிகரமா இருக்குன்னு.
ராஜேஷ் பிரஜாபதி – சத்தியமான வார்த்தைங்கய்யா, இது வரப்பிரசாதமே தான்.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, நீங்க ஒரு வேலை செய்யணுமே, செய்வீங்களா?
ராஜேஷ் பிரஜாபதி – சொல்லுங்கய்யா, என்ன செய்யணும்?
பிரதமர் – அதாவது பலருக்கு இது பத்தி தெரியறதே இல்லை, நீங்க ஒரு பொறுப்பை எடுத்துக்கணும், என்னென்னா, உங்க அக்கம்பக்கத்தில எத்தனை ஏழை குடும்பங்கள் இருக்காங்களோ, அவங்க கிட்ட எல்லாம் உங்களுக்கு இதனால என்னவெல்லாம் ஆதாயம் கிடைச்சுதோ, இதைப் பத்தி சொல்ல முடியுமா?
ராஜேஷ் பிரஜாபதி – கரும்பு தின்னக் கூலியா? கண்டிப்பா சொல்றேன்யா.
பிரதமர் – மேலும் அவங்களுக்கு அட்டையை எப்படி அவங்க ஏற்படுத்திக்கணும்னும் சொல்லுங்க; ஏன்னா குடும்பத்தில எப்ப என்ன கஷ்டம் வரும்னு எப்படி சொல்ல முடியும்!! இன்னைக்கு ஏழைக்கு மருந்துகள் கிடைக்காம கஷ்டப்படுறாங்கன்னு சொன்னா அது சரி இல்லை. பணம் இல்லாமை காரணமா அவங்களால மருந்துகளை வாங்க முடியலை இல்லை சிகிச்சை செஞ்சுக்க முடியலைன்னா, இது கவலை தரக்கூடிய விஷயம். இதனால என்ன ஆகுது, இப்ப உங்களுக்கே இந்த இருதய பிரச்சனை காரணமா உங்களால மாசக்கணக்கா வேலைக்கே சரியா போயிருக்க முடிஞ்சிருக்காதில்லையா?
ராஜேஷ் பிரஜாபதி – என்னால தொடர்ந்து ஒரு பத்தடி எடுத்து வைக்க முடியாது, படியேற முடியாதுய்யா.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, எனக்கு ஒரு நல்ல நண்பரா நீங்க இருந்து, ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடர்பா ஏழைகளுக்கு புரிய வைக்கணும், நோய்வாய்ப்பட்டவங்களுக்கு உதவி செய்யணும், இது உங்களுக்கு பெரிய மன நிறைவைக் கொடுக்கும், எனக்கும் அது ரொம்ப சந்தோஷத்தை அளிக்கும். ஒரு ராஜேஷ் அவர்களோட உடல் நலமாச்சு ஆனா பலநூறு நபர்களோட உடல்நலத்துக்கும் உதவியிருக்காரு. இந்த ஆயுஷ்மான் பாரதம் திட்டம், ஏழைகளுக்கானது, மத்தியத்தட்டு மக்களுக்கானது, எளிய குடும்பங்களுக்கானது அப்படீங்கற போது இதை எல்லா வீட்டுகளுக்கும் நீங்க கொண்டு சேருங்க.
ராஜேஷ் பிரஜாபதி – கண்டிப்பா கொண்டு சேர்ப்பேன் ஐயா. நான் மருத்துவமனையில 3 நாள் தங்கியிருந்தேன்ல, அப்ப பல கஷ்டப்படுற மக்கள் அங்க வந்திருந்தாங்க, அவங்களுக்கு எல்லாம் இதில இருக்கற வசதிகளை விளக்கினேன், எல்லாம் இலவசம்னு சொன்னேன்.
பிரதமர் – சரி ராஜேஷ் அவர்களே, நல்ல ஆரோக்கியத்தோட இருங்க, உங்க உடம்பு மேல கொஞ்சம் அக்கறை செலுத்துங்க, குழந்தைங்க மேல கவனம் செலுத்துங்க, வாழ்க்கையில நிறைய முன்னேற்றம் அடையுங்க, உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, நாம் இப்பொழுது ராஜேஷ் அவர்கள் சொன்னதைக் கேட்டோம் இல்லையா, வாருங்கள், அடுத்து இப்போது நம்மோடு இணைந்திருக்கும் சுக்தேவி அவர்களைச் சந்திக்கலாம். இவருக்கு மூட்டுப் பிரச்சனை, இவர் பட்ட துயரம் பற்றியும், இவர் எப்படி குணமானார் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்!!
மோதி ஜி – சுக்தேவி அவர்களே வணக்கம்!! நீங்க எங்கிருந்து பேசிட்டு இருக்கீங்க?
சுக்தேவி ஜி – தான்தபராவிலேர்ந்து.
மோதி ஜி – இந்த இடம் எங்க இருக்கு?
சுக்தேவி ஜி – மதுராவிலங்க.
மோதி ஜி – மதுராவிலயா? அப்படீன்னா சுக்தேவி அவர்களே, உங்களுக்கு நான் வணக்கமும் சொல்லணும், கூடவே ராதே ராதேன்னும் சொல்லணும்.
சுக்தேவி ஜி – ஆமாம், ராதே ராதே.
மோதி ஜி – உங்களுக்குக் கொஞ்சம் பிரச்சனை இருந்திச்சு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டிச்சுன்னு நான் கேள்விப்பட்டேன். என்ன விஷயம்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
சுக்தேவி ஜி – அது வந்து, என் மூட்டு ரெண்டும் கெட்டுப் போச்சு, அறுவை சிகிச்சை செஞ்சாங்க. பிரயாக் மருத்துவமனையில.
மோதி ஜி – உங்களுக்கு என்ன வயசாகுது சுக்தேவி அவர்களே?
சுக்தேவி ஜி – 40 வயசுங்கய்யா.
மோதி ஜி – 40 வயசு, சுக்தேவ் பேரு, உங்களுக்கு நோய் வந்திருச்சே சுக்தேவி அவர்களே.
சுக்தேவி ஜி – நோய் என்னமோ எனக்கு 15-16 வயசுலயே வந்திருச்சுங்க.
மோதி ஜி – அம்மாடியோவ்! இத்தனை சின்ன வயசிலயா உங்க மூட்டுகள்ல கோளாறாயிருச்சு?
சுக்தேவி ஜி – மூட்டுவாதம்யா. மூட்டுக்கள் இணைஞ்சிருக்கற இடத்தில வலி காரணமா மூட்டுக்கள் மோசமாயிருச்சுன்னாங்க.
மோதி ஜி – அப்படீன்னா 16 வயசிலேர்ந்து 40 வயசு வரைக்கும் நீங்க இதுக்கு எந்த சிகிச்சையுமே எடுத்துக்கலையா?
சுக்தேவி ஜி – செஞ்சுக்கலைங்கய்யா. வலிக்கு மாத்திரை எடுத்துக்குவேன், ஏதோ மருத்துவரகளை பார்ப்பேன், அவங்களும் நாட்டுமருந்துகள் மாதிரி ஏதோ தருவாங்க. போலி மருத்துவர்கள் காரணமா, ஏதோ கொஞ்ச நஞ்சம் நடந்திட்டு இருந்தும் அதுவும் நடக்க முடியாம போச்சு. 1-2 கிலோமீட்டர் நடந்திட்டு இருந்த என்னோட மூட்டு ரொம்ப மோசமா போயிருச்சு.
மோதி ஜி – அப்படீன்னா சுக்தேவீ அவர்களே, அறுவை சிகிச்சை செஞ்சுக்கற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டிச்சு? இதுக்கு பணத்துக்கு என்ன செஞ்சீங்க? இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சு?
சுக்தேவி ஜி - நான் ஆயுஷ்மான் அட்டை மூலமா சிகிச்சை செஞ்சுக்கிட்டேன்.
மோதி ஜி – உங்களுக்கு ஆயுஷ்மான் அட்டை கிடைச்சிருக்கா?
சுக்தேவி ஜி – ஆமாங்கய்யா.
மோதி ஜி – ஆயுஷ்மான் அட்டை மூலமா ஏழைகளுக்கு இலவசமா சிகிச்சை அளிக்கப்படுதுங்கற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
சுக்தேவீ ஜி – பள்ளிக்கூட த்தில கூட்டம் நடந்திட்டு இருந்திச்சு. அங்கிருந்து தான் என் கணவருக்கு தெரிய வந்து, அவரு தான் என் பேர்ல அட்டை எடுத்தாரு.
மோதி ஜி – ஓஹோ.
சுக்தேவீ ஜி – பிறகு அட்டை மூலமா சிகிச்சை அளிச்சாங்க, நான் ஒரு பைசா கூட செலவு செய்யலை. எல்லாம் அட்டையை வச்சுத் தான் நடந்திச்சு. ரொம்ப அருமையா சிகிச்சை செஞ்சாங்க.
மோதி ஜி – சரி, அட்டை இல்லைன்னா எத்தனை செலவாகும்னு மருத்துவர்கள் சொன்னாங்களா?
சுக்தேவீ ஜி – இரண்டரை இலட்சம் ரூபாய்லேர்ந்து மூணு இலட்சம் ரூபாய் ஆகும்னாங்க. 6-7 வருஷமா நான் கட்டில்லயே படுத்துக் கிடக்கேன். நான் கடவுள் கிட்ட வேண்டினதெல்லாம் ஒண்ணே ஒண்ணு மட்டும் தான், கடவுளே எனக்கு சுத்தமா வாழ பிடிக்கலை, என்னைக் கூட்டிக்கோங்கறது தான்.
மோதி ஜி – 6-7 ஆண்டுகளா படுத்த படுக்கையா இருந்தீங்களா? அடக் கடவுளே!!
சுக்தேவீ ஜி – ஆமாங்கய்யா.
மோதி ஜி – கடவுளே!!
சுக்தேவீ ஜி – கொஞ்சம் கூட எழுந்திருக்கவோ உட்காரவோ முடியாது.
மோதி ஜி – இப்ப உங்க மூட்டு முன்னை விட நல்லா ஆயிடுச்சா?
சுக்தேவீ ஜி – நான் நல்லா சுத்தி வர்றேன், சமையலறையில வேலை பார்க்கறேன், வீட்டுவேலை எல்லாம் செய்யறேன், பசங்களுக்கு உணவு சமைச்சுக் கொடுக்கறேன்.
மோதி ஜி – அப்படீன்னா ஆயுஷ்மான் பாரதம் அட்டை உங்களுக்கு நிறைஞ்ச ஆயுளைக் குடுத்திருக்குன்னு சொல்லுங்க!!
சுக்தேவீ ஜி – கண்டிப்பா. உங்களுக்குத் தான் நாங்க கோடானுகோடி நன்றிகளைச் சொல்லணும். உங்களோட இந்தத் திட்டத்தால தான் நான் குணமாகியிருக்கேன், என் கால்கள்ல என்னால நிக்க முடியுது.
மோதி ஜி – இப்ப பசங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குமே!!
சுக்தேவீ ஜி – ஆமாங்க. பசங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அம்மாவுக்குக் கஷ்டம்னா பசங்களுக்கும் தானே கஷ்டம்!!
மோதி ஜி – பாருங்க, நம்ம வாழ்க்கையில ரொம்ப பெரிய சுகம்னா அது நம்மோட ஆரோக்கியம் தான். இந்த சந்தோஷமான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணுங்கறது தான் ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தில இருக்கற உணர்வு. சரி சுக்தேவீ அவர்களே, உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள், மீண்டும் உங்களுக்கு ராதே ராதே.
சுக்தேவீ ஜி – ராதே ராதே, வணக்கம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இளைஞர்கள் நிறைந்த ஒவ்வொரு நாடும் மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அப்போது தான் இளைஞர்களை சரியான வகையில் அடையாளப்படுத்த முடியும். முதல் விஷயம் – Ideas and Innovation, அதாவது கருத்துக்கள் மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்பு. இரண்டாவதாக, இடர்களை எதிர்கொள்ளும் துணிச்சல், மூன்றாவதாக, Can Do Spirit, அதாவது என்னால் முடியும் என்ற உறுதியான உணர்வு, சூழ்நிலைகள் ஏதாக இருந்தாலும் சரி. இந்த மூன்று விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு விட்டால், வியக்கத்தக்க விளைவுகள் பிறக்கும். அற்புதம், அதிசயம் நிகழும். இன்றைய காலத்தில், நாலாபுறத்திலும் நாம் கேள்விப்படும் சொல் ஸ்டார்ட் அப் என்பது தான். சரியான விஷயம் தான், இது ஸ்டார்ட் அப் யுகம், இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் பாரதம் இன்று ஒருவகையில் உலகிற்கே தலைமையேற்றுக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஸ்டார்ட் அப்களின் சாதனை படைக்கும் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் துறை மிகுந்த விரைவோடு முன்னேற்றம் கண்டு வருகிறது. எந்த அளவுக்கு என்றால், தேசத்தின் சின்னச்சின்ன நகரங்களிலும் கூட இப்போது ஸ்டார்ட் அப்களின் எல்லை விரிந்திருக்கிறது. இப்போது யூனிகார்ன் என்ற சொல்லும் புழக்கத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யூனிகார்ன் என்பதன் மதிப்பு குறைந்தபட்சம் ஒரு பில்லியன் டாலர் பெறுமானம் உள்ளது, அதாவது கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்.
நண்பர்களே, 2015ஆம் ஆண்டு வரை தேசத்தில் தேடிப் பார்த்தாலும், 9 அல்லது 10 யூனிகார்ன்களே இருந்தன. இப்போதோ யூனிகார்களின் உலகத்திலேயும் பாரதம் விரைவாகச் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது என்ற செய்தி உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கலாம். ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வெறும் 10 மாதங்களில் மட்டும் பாரதத்திலே, பத்து நாட்களில் ஒரு யூனிகார்ன் என்ற வீதம் உருவாகியிருக்கிறது. இது ஏன் பெரிய விஷயம் என்பதற்கு மேலும் ஒரு காரணம் என்னவென்றால், நமது இளைஞர்கள், இந்த வெற்றியை கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே ஈட்டியிருக்கிறார்கள் என்பது தான். இன்று பாரதத்திலே 70க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உருவாகி விட்டன. அதாவது 70க்கும் அதிக ஸ்டார்ட் அப்களில் ஒரு பில்லியனுக்கும் அதிக மதிப்பீடு என்ற அளவைத் தாண்டியிருக்கின்றன. நண்பர்களே, ஸ்டார்ட் அப்பின் வெற்றியின் காரணமாக அனைவருடைய கவனமும் இவற்றின்பால் சென்றிருக்கிறது, நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளில் இருந்தும், முதலீடுகள் வாயிலாக, முதலீட்டாளர்களின் ஆதரவு இவற்றுக்குக் கிடைத்து வருகிறது. சில ஆண்டுகள் முன்பாக இதைப் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
நண்பர்களே, ஸ்டார் அப்புகள் மூலமாக இந்திய இளைஞர்கள் உலகாயத சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண்பதில் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இன்று நாம், ஒரு இளைஞரான மயூர் பாடில் அவர்களோடு உரையாட இருக்கிறோம். இவர் தனது நண்பர்களோடு இணைந்து, மாசு பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியை புரிந்திருக்கிறார்.
மோதி ஜி – மயூர் ஜி வணக்கம்.
மயூர் பாடில் – வணக்கம் ஐயா.
மோதி ஜி – மயூர் ஜி, எப்படி இருக்கீங்க?
மயூர் பாடில் – ரொம்ப அருமையா இருக்கேன்ங்கய்யா. நீங்க எப்படி இருக்கீங்க?
மோதி ஜி – நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சரி நீங்க சொல்லுங்க, இன்னைக்கு நீங்க ஸ்டார்ட் அப் உலகத்தில இருக்கீங்க, கழிவுகளை செல்வமா மாத்தற முயற்சியில ஈடுபட்டிருக்கீங்க, சுற்றுச்சூழல் விஷயத்திலயும் பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க, உங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன். உங்க வேலை பத்தி, இந்த வேலையை செய்யணுங்கற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டிச்சு??
மயூர் பாடில் – ஐயா, நான் கல்லூரியில படிச்சுக்கிட்டு இருந்தப்ப, என் கிட்ட ஒரு மோட்டார்சைக்கிள் இருந்திச்சு. இதோட மைலேஜ் ரொம்பவே குறைவானதா இருந்திச்சு, புகை அதிகமா வந்திச்சு. அது ஒரு 2 ஸ்ட்ரோக் பைக். இதிலேர்ந்து வர்ற புகையைக் குறைக்கவும், இதோட மைலேஜை கொஞ்சம் அதிகரிக்கவும் நான் முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். ஒரு 2011-12 வாக்கில, என் பைக்கோட மைலேஜை நான் 62 கிலோமீட்டர் வரை குடுக்கற வகையில அதிகரிச்சேன். அப்பத்தான் எனக்குள்ள ஒரு உத்வேகம் பிறந்திச்சு, ஏன் இதை பெரிய அளவுல தயாரிக்க கூடாது, அப்ப பல பேர்களுக்கு இதனால ஆதாயம் கிடைக்குமேன்னு தோணிச்சு. அதனால 2017-18இல நாங்க இதோட தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில ஒரு பத்து பேருந்துகள்ல இதைப் பயன்படுத்தினோம். இதோட விளைவை சோதிச்சுப் பார்த்த போது தான் இதனால கிட்டத்தட்ட 40 சதவீத புகை வெளியேற்றம் பேருந்துகள்ல கட்டுப்படுத்தப்பட்டிருக்குன்னு தெரிய வந்திச்சு.
மோதி ஜி – அம்மாடியோவ். இப்ப இந்தத் தொழில்நுட்பத்தை நீங்க உருவாக்கி இருக்கீங்களே, இதுக்கான உரிமைக்காப்பு எல்லாம் செஞ்சுட்டீங்களா?
மயூர் பாட்டில் – செஞ்சாச்சுய்யா. உரிமைக்காப்பும் செஞ்சு, இந்த வருஷம் அதுக்கான பட்டயமும் கைக்கு வந்தாச்சு.
மோதி ஜி – சரி, அடுத்ததா இதை அடுத்த கட்டம் கொண்டு போக, உங்க திட்டம் என்ன? எப்படி செய்யப் போறீங்க? இப்ப பேருந்து விஷயத்தில பலன் தெரிஞ்சு போச்சு. இது பத்தின விஷயம் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அடுத்து என்ன செய்ய இருக்கீங்க?
மயூர் பாடில் – ஐயா, ஸ்டார்ட் அப் இண்டியாவில, நிதி ஆணையம் மூலமா Atal New India Challenge, அதாவது, அடல் புதிய இந்தியா சவால் இருக்கில்லையா, அங்கிருந்து எனக்கு மானியம் கிடைச்சிருக்கு. இந்த மானிய உதவியோட நாங்க இப்ப ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சிருக்கோம். இதில எங்களால air filters, அதாவது காற்று வடிகட்டிகளை உற்பத்தி செய்ய முடியும்.
மோதி ஜி – சரி பாரத அரசு தரப்பிலேர்ந்து உங்களுக்கு எவ்வளவு மானியம் கிடைச்சுது?
மயூர் பாடில் – 90 இலட்சம்.
மோதி ஜி – 90 இலட்சம்.
மயூர் பாட்டில் – ஆமாங்கய்யா.
மோதி ஜி – இதை வச்சு நீங்க வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா.
மயூர் பாட்டில் – ஆமாங்கய்யா, இப்ப ஆரம்பிச்சாச்சு, செயல்முறைகள் இன்னும் நடந்திட்டு இருக்கு.
மோதி ஜி – சரி நீங்க எத்தனை நண்பர்கள் சேர்ந்து இதை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.
மயூர் பாட்டில் – நாங்க நாலு பேர் ஐயா.
மோதி ஜி – நீங்க நாலு பேரும் ஒண்ணாவே படிச்சீங்க, அதில ஒருத்தருக்கு இதை மேல கொண்டு போகணும்னு எண்ணம் வந்திச்சு.
மயூர் பாடில் – ஆமாங்கய்யா. நாங்க எல்லாரும் கல்லூரியில ஒண்ணா படிச்சோம். கல்லூரியில தான் இதையெல்லாம் நாங்க யோசிச்சோம், என்னோட எண்ணம் என்னென்னா, குறைஞ்சபட்சம் என்னோட பைக்கோட மாசு கொஞ்சம் குறையணும், கொஞ்சம் கூடுதலா மைலேஜ் கொடுக்கணும்ங்கறது தான்.
மோதி ஜி – சரி மாசைக் குறைச்சு, மைலேஜை அதிகப்படுத்தின பிறகு சராசரியா சேமிப்பு எவ்வளவு ஆகும்?
மயூர் பாடில் – ஐயா, பைக்ல நாங்க பரிசோதனை செஞ்ச போது, லிட்டருக்கு 25 கிலோமீட்டர் கொடுத்த அதோட மைலேஜ், லிட்டருக்கு 39 கிலோமீட்டரா அதிகரிச்சது, சுமாரா 14 கிலோமீட்டர் ஆதாயம் கிடைச்சுது. மேலும் இதில 40 சதவீத கரியமில வெளியேற்றம் குறைஞ்சிருந்திச்சு. பேருந்துகள்ல செஞ்ச போது, பிராந்திய போக்குவரத்துக் கழகத்துக்கு 10 சதவீத எரிபொருள் திறன் அதிகரிப்பு கிடைச்சுது, இதிலயும் 35லேர்ந்து 40 சதவீதம் வரை வெளியேற்றம் குறைஞ்சிருந்திச்சு.
மோதி ஜி – மயூர், உங்களோட பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு, உங்க நண்பர்களுக்கும் என் தரப்பிலேர்ந்து வாழ்த்துக்களைச் சொல்லுங்க. கல்லூரி வாழ்க்கையில உங்களுக்கு இருந்த பிரச்சனைக்குத் தீர்வையும் நீங்க கண்டிருக்கீங்க, இப்ப அந்தத் தீர்வு காட்டின பாதையில பயணிச்சு, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்ற சவாலையும் நீங்க கையில எடுத்திருக்கீங்க. நம்ம நாட்டு இளைஞர்கள் பெரிய திறமைசாலிகள், அவங்க எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமை வாய்ஞ்சவங்க, வழி கண்டுபிடிக்கறவங்கன்னு தெரிவிக்குது. உங்களுக்கு என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
மயூர் பாடில் – தேங்க்யூ சார்!! தேங்க்யூ!!!
நண்பர்களே, சில ஆண்டுகள் முன்பாக, தாம் வியாபாரம் செய்ய விரும்புவதாகவோ, ஒரு கம்பெனியைத் தொடக்க விரும்புவதாகவோ கூறினால், குடும்பத்தில் இருக்கும் பெரியோரின் பதில் என்னவாக இருந்தது – நீ ஏன் வேலை பார்க்க விரும்ப மாட்டேன் என்கிறாய், எங்காவது சேர்ந்து வேலை பார், வேலை பார்ப்பதிலே தான் பாதுகாப்பு இருக்கிறது, ஊதியம் கிடைக்கும், சிக்கலைக் குறைத்துக் கொள், என்பார்கள். ஆனால், இன்றோ யாராவது ஒருவர் கம்பெனி தொடங்க விரும்பினால், அவருக்கு அருகே இருப்போர் எல்லாம் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள், அவருக்கு முழு ஆதரவையும் அளிக்கிறார்கள். நண்பர்களே, பாரதத்தின் வளர்ச்சிக் கதையின் திருப்புமுனை இது, இப்போது இங்கே வேலை தேடுபவர்கள் என்ற கனவை காண்பதைத் துறந்து, வேலையை உருவாக்குபவர்களாகவும் மாறி வருகிறார்கள். இதனால் உலக அரங்கிலே பாரத நாட்டின் நிலை மேலும் பலமடைந்து வருகிறது.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, இன்றைய மனதின் குரலில் நாம் அமிர்த மஹோத்சவம் குறித்துப் பேசினோம். அமிர்தகாலத்தில் நம்முடைய நாட்டுமக்கள் எவ்வாறு புதியபுதிய உறுதிப்பாடுகளை நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது பற்றிக் கலந்தோம், கூடவே, டிசம்பர் மாதம் வருகின்ற, இராணுவத்தின் வீரத்தோடு தொடர்புடைய நாட்கள் குறித்தும் பேசினோம். டிசம்பர் மாதம் என்றதும், மேலும் ஒரு மிகப்பெரிய நாள் நம் கண் முன்னே வரும், இதிலிருந்து நாம் உத்வேகம் அடைகிறோம். அந்த நாள் தான் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி, பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்கள் மறைந்த நாள். பாபா சாஹேப், தனது வாழ்நாள் முழுவதையும் தேசம் மற்றும் சமூகத்திற்காக, தனது கடமைகளை நிறைவேற்ற அர்ப்பணித்தார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு, நாட்டுமக்களான நாம் அனைவரும், அவரவர் கடமைகளை செம்மையாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அமிர்த மஹோத்சவ காலத்திலே, நாம் நமது கடமைகளை முழுமையான நேர்மையோடு நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்வோம், வாருங்கள்!! இதுவே பாபா சாஹேப் அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய மெய்யான நினைவாஞ்சலியாகும்.
நண்பர்களே, இப்போது நாம் டிசம்பர் மாதத்தில் காலெடுத்து வைக்க இருக்கிறோம். இயல்பாகவே, அடுத்த மனதின் குரல் 2021ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரலாக ஒலிக்கும். 2022ஆம் ஆண்டில் நாம் மீண்டும் நம் பயணத்தைத் தொடருவோம், உங்களிடமிருந்து நிறைய ஆலோசனைகளை எதிர்பார்த்திருக்கிறேன், தொடர்ந்து காத்திருப்பேன். நீங்கள் இந்த ஆண்டிற்கு எப்படி விடையளிக்க இருக்கிறீர்கள், புதிய ஆண்டிலே என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள், இதைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள். அப்புறம்….. மறந்து விடாதீர்கள், கொரோனா இன்னும் முற்றிலுமாகச் அகன்று விடவில்லை. எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது நம்மனைவரின் கடமையாகும். பலப்பல நன்றிகள்.
*****
(Release ID: 1775809)
Visitor Counter : 454
Read this release in:
Gujarati
,
Telugu
,
Assamese
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Kannada
,
Malayalam