பிரதமர் அலுவலகம்
நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
விஞ்ஞான் பவனில் உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள அரசியல் சாசன தின கொண்டாட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
24 NOV 2021 5:08PM by PIB Chennai
இந்திய அரசியல் சாசனத்தை, 1949 ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக, நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தினத்தை நாடு கொண்டாடவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தினத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில், அரசியல் சாசன தின கொண்டாட்டம் 2015-ல் தொடங்கியது. 2010-ல் திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட “அரசியலமைப்பு சட்ட கவுரவ யாத்திரை”-யிலிருந்து இந்த தொலைநோக்கு பார்வைக்கான அடிப்படை தொடங்கியது.
இந்த ஆண்டு அரசியல் சாசன தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 26 நவம்பர் 2021 அன்று நாடாளுமன்றத்திலும், விஞ்ஞான் பவனிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவைத் தலைவர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். குடியரசுத் தலைவர் உரையாற்றி முடித்த பிறகு, அரசியல் சாசன முகப்புரையை வாசிப்பதில், நாடுமுழுவதும் உள்ள மக்கள் நேரலையில் பங்கேற்பார்கள். அத்துடன் அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதங்களின் டிஜிட்டல் வடிவம், இந்திய அரசியல் சட்டத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி மற்றும் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தையும் குடியரசுத் தலைவர் வெளியிடவுள்ளார். மேலும் ‘அரசியல் சாசன ஜனநாயகம் குறித்த ஆன்லைன் வினாடி-வினா’ போட்டியையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
புதுதில்லி விஞ்ஞான் பவன் நிறைவு விழா அரங்கில், மாலை 5.30 மணியளவில் உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள 2 நாள் அரசியல் சாசன தின கொண்டாட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள், அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள், இந்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் மற்றும் சட்டத்துறை சார்ந்த பிற அமைப்பினரும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். விழாவில் பங்கேற்பவர்களிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார்.
********
(Release ID: 1774689)
Visitor Counter : 436
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam