ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களில் டிஏபி, யூரியா இருப்பு நிலைமை குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வுசெய்தார்; போதுமான உற்பத்தி உள்ளதாகவும் நாட்டில் உரப்பற்றாக்குறை இருக்காது என்றும் உறுதியளித்தார்

Posted On: 23 NOV 2021 3:20PM by PIB Chennai

“போதுமான உற்பத்தி உள்ளதாகவும் நாட்டில் உரப்பற்றாக்குறை இருக்காது’’ என்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள்  துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உறுதியளித்துள்ளார். நாடு முழுவதும் உரங்கள் இருப்பு பற்றி காணொலி காட்சி மூலம்  மாநில வேளாண் அமைச்சர்களுடன் இன்று அவர் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் 18 மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மற்றும்  வேளாண்துறையின் உரத்தேவைகளை நிர்வாகம் செய்வது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பாகும் என்று அவர் கூறினார். டிஏபி உரங்களுக்கு விவசாயிகளிடம் இருந்த விரிவான தேவையை சரிசெய்வதற்குக் கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட கூட்டான முயற்சிகளுக்காக மாநிலங்களுக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா நன்றி தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் பல மாநிலங்களில் ஏற்பட்ட டிஏபி உரத்தேவையை பூர்த்தி செய்ததற்காக மத்திய அமைச்சருக்கு மாநில வேளாண் அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆக்கப்பூர்வமான கூடுதல் பயனுள்ள உர நிர்வாகத்திற்குத் தேவை மற்றும் விநியோகம் பற்றி தினசரி கண்காணிக்குமாறு மாநிலங்களை அவர் வலியுறுத்தினார். மாவட்ட வாரியான தேவைகளை வாரத்திற்கு ஒருமுறை மதிப்பீடு செய்து முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

நானோ யூரியா, இயற்கை உரம் போன்றவற்றைப் பயன்படுத்துவது மண்வளத்தைப் பாதுகாக்கும் என்றும் கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்திய உரங்கள் தயாரிப்பு நிறுவனம் நானோ யூரியா உற்பத்தியைத் தொடங்கி உள்ளது என்றும் நானோ டிஏபி உற்பத்திக்கான பணி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774227

••••



(Release ID: 1774359) Visitor Counter : 235