பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

புனித குரு அவர்களின் பிறந்தநாள் மற்றும் கர்தார்பூர் சாஹேப் சாலை மீண்டும் திறக்கப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

“மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம் என்பதை உங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன். இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை நாங்கள் நிறைவு செய்வோம்”

“இந்த நாட்டிற்குப் பிரதமராக சேவை செய்ய 2014ல் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உயர்ந்த பட்ச முன்னுரிமையை நாங்கள் வழங்கினோம் ”

“எம்எஸ்பி-யை உயர்த்தியது மட்டுமின்றி சாதனை எண்ணிக்கையில் அரசு கொள்முதல் மையங்களையும் நாங்கள் உருவாக்கினோம். எங்கள் அரசால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் கடந்த பல பத்தாண்டுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது”

“இந்த மூன்று வேளாண் சட்டங்களின் நோக்கம் நாட்டில் உள்ள விவசாயிகளை குறிப்பாக சிறு விவசாயிகளை வலுப்படுத்தவேண்டும், அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு சரி

Posted On: 19 NOV 2021 9:55AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். நாட்டு மக்களுக்கான உரையில் குருநானக் பிறந்தநாளையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப்பின் கர்த்தார் சாஹேப் சாலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“எனது ஐம்பதாண்டு கால பொது வாழ்க்கையில் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை மிகவும் நெருக்கமாக இருந்து நான் பார்த்திருக்கிறேன். எனவே, இந்த நாட்டிற்குப் பிரதமராக சேவை செய்ய 2014ல் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உயர்ந்தபட்ச முன்னுரிமையை நாங்கள் வழங்கினோம்.விவசாயிகளின் நிலைமையை சீர்படுத்த விதைகள், காப்பீடு, சந்தை, சேமிப்பு ஆகிய நான்குமுனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிரதமர் கூறினார். நல்ல தரமான விதைகளோடு வேம்பு கலக்கப்பட்ட யூரியா, மண்வள அட்டை, நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கியது என்று அவர் கூறினார்.

விவசாயிகளின் கடின உழைப்பிற்குப் பயனாக அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க பல முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு தனது ஊரக சந்தைக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. “எம்எஸ்பி-யை உயர்த்தியது மட்டுமின்றி சாதனை எண்ணிக்கையில் அரசு கொள்முதல் மையங்களையும் நாங்கள் உருவாக்கினோம். எங்கள் அரசால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் கடந்த பல பத்தாண்டுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது.” என்று அவர் கூறினார்.

விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கான மகத்தான இயக்கத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டில் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறினார். நாட்டில் உள்ள விவசாயிகளை, குறிப்பாக சிறு விவசாயிகளை வலுப்படுத்தவேண்டும், அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு சரியான விலையை அவர்கள் பெறவேண்டும், அவர்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பது இதன் நோக்கமாக இருந்தது. பல ஆண்டுகளாக நாட்டின் விவசாயிகளும், நாட்டின் வேளாண் நிபுணர்களும், நாட்டின் விவசாயிகள் அமைப்புகளும் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வைத்திருந்ததாக பிரதமர் கூறினார். இதற்கு முன்பும் இது குறித்து பல அரசுகள் சிந்தித்துள்ளன. இந்த முறையும் கூட நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு பல தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பல விவசாய அமைப்புகள் இதனை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த செயலுக்கு ஆதரவளித்த அமைப்புகளுக்கும், விவசாயிகளுக்கும், தனி நபர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனுக்காக குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக வேளாண் துறையின் நலனுக்காக கிராமப்புற ஏழை மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முழுமையான நேர்மயுடன் தெளிவான உணர்வுடன் விவசாயிகள் குறித்த அர்ப்பணிப்புடன் இந்த சட்டங்களை அரசு கொண்டுவந்ததாக பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “முழுக்க முழுக்க தூய்மையான, விவசாயிகளின் நலன் சார்ந்த இத்தகைய புனிதமான ஒரு விஷயத்தை எங்களின் முயற்சிகளுக்கு அப்பால் சில விவசாயிகளுக்கு எங்களால் விவரிக்க முடியவில்லை. வேளாண் பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், முற்போக்கு சிந்தனை கொண்ட விவசாயிகள் ஆகியோரும் வேளாண் சட்டத்தின் முக்கியத்தை அவர்களுக்குப் புரியவைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்தனர்” என்றார்.

“மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பப்பெற நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம் என்பதை உங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன். இம்மாத பிற்பகுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை நாங்கள் நிறைவு செய்வோம்” என்று பிரதமர் கூறினார்.

புனித குருதேவின் பிறந்தநாள் உணர்வுகொண்ட இந்நாள் ஒருவரையும் குறைகூறுவதற்கான நாள் அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவதற்கு தம்மைத்தாமே மறு அர்ப்பணிப்பு செய்துகொள்வதாக கூறினார். வேளாண் துறைக்கு முக்கியமான திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார். ஜீரோ பட்ஜெட் அடிப்படையில் வேளாண்மையை மேம்படுத்த, நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப, சாகுபடி முறையில் மாற்றம் செய்ய, எம்எஸ்பி-யை அதிக பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மை உள்ளதாகவும் மாற்ற குழு ஒன்று அமைப்பது பற்றி அவர் அறிவித்தார். இந்தக் குழு மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டிருக்கும்.

****



(Release ID: 1773201) Visitor Counter : 287