பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
உஜ்ஜைன் மற்றும் இந்தோர் இடையே இரண்டு புதிய ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அகலப்படுத்தப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்பட்ட உஜ்ஜைன்-ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச் அகலப்பாதை பிரிவு, போபால்-பர்கேரா பிரிவில் மூன்றாவது பாதை, விரிவாக்கப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்பட்ட மதேலா-நிமர் கெரி அகலப்பாதை பிரிவு மற்றும் மின்மயமாக்கப்பட்ட குணா-குவாலியர் பிரிவை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
"புகழ்பெற்ற வரலாறு மற்றும் வளமான நவீன எதிர்காலத்தின் சங்கமத்தை இன்றைய நிகழ்வு குறிக்கிறது"
"நாடு தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற உண்மையாக அணிதிரளும் போது, முன்னேற்றம் வரும் மற்றும் மாற்றம் ஏற்படும், கடந்த சில ஆண்டுகளில் இதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்"
"ஒரு காலத்தில் விமான நிலையத்தில் மட்டும் இருந்த வசதிகள் இப்போது ரயில் நிலையத்திலும் உள்ளன"
"திட்டங்கள் தாமதமாகவில்லை, எந்த தடையும் இல்லை என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர
Posted On:
15 NOV 2021 5:02PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். மத்தியப் பிரதேசத்தில் அகலப்படுத்தப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்பட்ட உஜ்ஜைன்-ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச் அகலப்பாதை பிரிவு, போபால்-பர்கேரா பிரிவில் மூன்றாவது பாதை, விரிவாக்கப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்பட்ட மதேலா-நிமர் கெரி அகலப்பாதை பிரிவு மற்றும் மின்மயமாக்கப்பட்ட குணா-குவாலியர் பிரிவு உள்ளிட்ட ரயில்வேயின் பல முன்முயற்சிகளையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். உஜ்ஜைன்-இந்தோர் மற்றும் இந்தோர்-உஜ்ஜைன் இடையே இரண்டு புதிய மெமு ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர், முதல்வர், மத்திய ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், போபாலின் வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையம் புத்துயிர் பெற்றது மட்டுமல்லாமல், ராணி கமலாபதி அவர்களின் பெயரைச் சேர்த்ததன் மூலம் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது என்றார். இன்று இந்திய இரயில்வேயின் பெருமையும் கோண்ட்வானாவின் பெருமையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. நவீன ரயில்வே திட்டங்களின் அர்ப்பணிப்பு புகழ்பெற்ற வரலாறு மற்றும் வளமான நவீன எதிர்காலத்தின் சங்கமம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜன்ஜாதிய கவுரவ் தினம் அன்று மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த திட்டங்களால் மத்தியப் பிரதேச மக்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
இந்தியா எப்படி மாறி வருகிறது, கனவுகள் எப்படி நனவாகும் என்பதற்கு இந்திய ரயில்வே ஒரு உதாரணம் என்று பிரதமர் கூறினார். “6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய ரயில்வே சேவையை பயன்படுத்தியவர்கள், இந்திய ரயில்வேயை சபித்தார்கள். நிலைமை மாறும் என்ற நம்பிக்கையை மக்கள் கைவிட்டனர். ஆனால், நாடு தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு உண்மையாக அணிதிரளும்போது, முன்னேற்றம் வரும், மாற்றம் நிகழும், இதை கடந்த சில ஆண்டுகளில் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் முதல் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற, முதல் அரசு-தனியார் கூட்டு முறை அடிப்படையிலான ரயில் நிலையம், அதாவது ராணி கமலாபதி ரயில் நிலையம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ஒரு காலத்தில் விமான நிலையத்தில் இருந்த வசதிகள் இப்போது ரயில் நிலையத்திலும் கிடைக்கின்றன.
இன்றைய இந்தியா, நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சாதனை அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், திட்டங்கள் தாமதமாகாமல் இருப்பதையும், எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதிசெய்கிறது என்றார் பிரதமர். சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கதிசக்தி தேசிய மாஸ்டர் திட்டம், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நாட்டிற்கு உதவும் என்று அவர் கூறினார். ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் கூட திட்டமிடல் கட்டத்தில் இருந்து களத்தில் உருவெடுப்பதற்கு பல ஆண்டுகள் எடுத்த காலம் இருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று இந்திய புதிய திட்டங்களைத் திட்டமிடுவதில் ரயில்வே அவசரம் காட்டுகிறது, அதைவிட முக்கியமாக, அவற்றை சரியான நேரத்தில் முடிக்கிறது.
இந்திய ரயில்வே துறை தொலைதூரங்களை இணைக்கும் ஒரு தொடர்பு மட்டுமல்ல, நாட்டின் கலாச்சாரம், நாட்டின் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தொடர்பாகவும் மாறி வருகிறது என்று பிரதமர் கூறினார். சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக, இந்திய ரயில்வேயின் இந்த திறன் இவ்வளவு பெரிய அளவில் ஆராயப்படுகிறது. முன்பெல்லாம், ரயில்வே சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்டாலும், அது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற அளவில் இருந்தது. முதன்முறையாக, சாமானியர்களுக்கு நியாயமான விலையில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரையின் ஆன்மீக அனுபவம் வழங்கப்படுகிறது. ராமாயண சர்க்யூட் ரயில் அத்தகைய ஒரு புதுமையான முயற்சியாகும்.
மாற்றத்தின் சவாலை ஏற்று செயல்படுத்தும் ரயில்வேக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
************
(Release ID: 1772062)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam