பிரதமர் அலுவலகம்
பழங்குடியினர் கௌரவ தின மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
மத்தியப் பிரதேசத்தில் “ரேஷன் ஆப்கே கிராம்” திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை தடுப்பு திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்
நாடு முழுவதும் 50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
“சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக இத்தகைய பெரும் அளவிலான பழங்குடியின சமுதாயத்தின் முழுமையான கலை- கலாச்சாரம், விடுதலைப் போராட்டம் மற்றும் நாட்டு நிர்மாணத்தில் அவர்களது பங்கு நினைவுகூரப்பட்டு பெருமையுடன் கௌரவிக்கப்படுகிறது”
“விடுதலைப்போராட்டத்தில் பழங்குடியின தலைவர்கள் மற்றும் தலைவிகளின் ஊக்கமூட்டும் வரலாற்றை நாட்டுக்கு முன்பாகக் கொண்டு வந்து புதிய தலைமுறையினருக்கு அவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்”
“பாபா சாஹிப் புரந்தரே ஜீயை ஈர்த்த சத்ரபதி சிவாஜி மஹராஜின் லட்சியங்கள் நாட்டுக்கு முன்பாக எடுத்துவைக்கப்பட்டுள்ளது. இந்த லட்சியங்கள் நம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்தும்”
“நாட்டின் இதரப் பகுதிகளில் கிடைப்பது போல இன்று பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவச மின்சாரம், எரிவாயு இணைப்புகள்
Posted On:
15 NOV 2021 3:15PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பழங்குடியினர் கௌரவ தின மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் “ரேஷன் ஆப்கே கிராம்” திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை தடுப்பு திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மத்தியப்பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர் வீரேந்திர குமார், திரு நரேந்திர சிங் தோமர், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர்கள் திரு பிரகலாத் பட்டேல், திரு பக்கான் சிங் குலஸ்தே, டாக்டர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர், இந்தியா தனது முதலாவது பழங்குடியினர் கௌரவ தினத்தை கொண்டாடுவதாக கூறினார். “சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக இத்தகைய பெரும் அளவிலான பழங்குடியின சமுதாயத்தின் முழுமையான கலை- கலாச்சாரம், விடுதலைப்போராட்டம் மற்றும் நாட்டு நிர்மாணத்தில் அவர்களது பங்கு நினைவுகூரப்பட்டு பெருமையுடன் கௌரவிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார். பழங்குடியின சமாஜ் உடன் தமது நீண்ட காலத் தொடர்பு குறித்து விளக்கிய பிரதமர் அவர்களது ஆன்மீகச் செழுமை, கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றை புகழ்ந்துரைத்தார். பாடல்கள் நடனங்கள் உள்பட பழங்குடியின மக்களின் ஒவ்வொரு கலாச்சார அம்சமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தை பிரதிபலிக்கிறது என்றும், கற்பிப்பதற்கு அவர்களிடம் நிறைய அம்சங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின தலைவர்கள் மற்றும் தலைவிகளின் ஊக்கமூட்டும் வரலாற்றை நாட்டுக்கு முன்பாகக் கொண்டு வந்து புதிய தலைமுறையினருக்கு அவர்களை அறிமுகப்படுத்தவேண்டியது நமது கடமை என்று பிரதமர் வலியுறுத்தினார். அடிமைக் காலத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக, காசி கரோ இயக்கம், மிசோ இயக்கம், கோல் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. “கோந்த் மகாராணி வீர துர்காவதியின் துணிச்சலாகட்டும் அல்லது ராணி கமலாபதியின் தியாகமாகட்டும் நாடு அவர்களை மறவாது. வீர மகாரானா பிரதாப்பின் போராட்டத்தை அவருடன் தோளோடு தோள் நின்று போராடிய தைரியம் மிக்க பில் மக்களின் தியாகங்கள் இல்லாமல் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்று பிரதமர் கூறினார்.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் உடன் பின்னால் வந்த தலைமுறையினரை இணைப்பதில் ஷிவ்சாஹிர் பாபாசாஹிப் புரந்தரே ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். ஷிவ்சாஹிர் பாபாசாஹிப் புரந்தரே இன்று காலை காலமானார். அந்த பிரபலமான வரலாற்று ஆசிரியருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். “பாபாசாஹிப் புரந்தரேஜீ நாட்டுக்கு முன்பாக வைத்த சத்ரபதி சிவாஜி மஹராஜின் லட்சியங்கள் நம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்தும். பாபாசாஹிப் புரந்தரேஜீக்கு நான் எனது இதயபூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறினார்.
“இன்று தேசத்தை கட்டமைப்பதில் பழங்குடியின சமுதாயத்தின் பங்கு குறித்து நாம் தேசிய அரங்குகளில் விவாதிக்கும்போது, சிலர் வியப்படைகிறார்கள். அவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் பழங்குடியின சமுதாயம் எந்த அளவுக்கு பங்களித்துள்ளது என்பது தெரியாது” என்று பிரதமர் கூறினார். பழங்குடியின சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து நாட்டுக்கு சொல்லப்படாததும். அவ்வாறு சொன்னாலும் மிகக் குறைந்த அளவு தகவல்களை அளித்து வந்ததும்தான் இதற்கு காரணமாகும். “சுதந்திரத்திற்குப் பின்னர் பல பத்தாண்டுகளாக நாட்டின் ஆட்சியை நடத்தியவர்கள், தங்களது சுய நல அரசியலுக்கு முன்னுரிமை அளித்ததால்தான் இவ்வாறு நடந்தது” என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். நாட்டின் இதரப் பகுதிகளில் கிடைப்பது போல இன்று பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவச மின்சாரம், எரிவாயு இணைப்புகள், பள்ளி, சாலை மற்றும் இலவச சிகிச்சை போன்ற வசதிகள் அதே வேகத்தில் கிடைத்து வருகின்றன என்று பிரதமர் கூறினார்.
மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பின் தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் பழங்குடியினப் பகுதிகளில் மிக அதிகமான வளங்களும் ஆதாரங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், “முன்பு அரசில் இருந்தவர்கள் இந்தப் பகுதிகளை சுரண்டும் கொள்கையைப் பின்பற்றி வந்தார்கள். நாங்கள் இந்தப் பகுதிகளின் வளங்களை முறையாகப் பயன்படுத்தும் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார். வனச்சட்டங்களை மாற்றியமைத்ததன் மூலம் வன வளங்கள் பழங்குடியின சமுதாயத்துக்கு எவ்வாறு கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்கினார்.
அன்மையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த விருதாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை அடைந்த போது உலகம் அதிர்ச்சியடைந்தது. “பழங்குடியின மற்றும் கிராமப்புற சமுதாயத்தில் பணிபுரியும் மக்களின் பத்ம விருதாளர்கள் நாட்டின் உண்மையான ரத்தினங்கள்” என்று அவர் புகழ்ந்துரைத்தார். இன்று பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் பொருட்கள் நாடு முழுவதும், உலக அளவிலும் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன. 90-க்கும் மேற்பட்ட வன உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது. முன்பு 8 முதல் 10 பயிர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டு வந்தது.150-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2500-க்கும் மேற்பட்ட வன் தன் விகாஸ் மையங்கள், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுடன் இனைக்கப்பட்டுள்ளன. 7 லட்சம் வேலை வாய்ப்புகளுடன் 20 லட்சம் நிலப்பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியின இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 9 புதிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள தாய்மொழி பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
*****************
(Release ID: 1772008)
Visitor Counter : 362
Read this release in:
English
,
Assamese
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam