பிரதமர் அலுவலகம்

பழங்குடியினர் கௌரவ தினத்தன்று ராஞ்சியில், பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

ஜார்க்கண்ட் மாநிலமாக மாறுவதற்கு உறுதியான எண்ணம் கொண்டிருந்ததற்காக திரு.அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் புகழாரம் சூட்டியுள்ளார்

“சுதந்திரத்தின் 75-வது ஆண்டு காலத்தில், இந்தியாவின் பழங்குடியினர் பாரம்பரியத்திற்கும் அதன் வீரம் செறிந்த வரலாறுகளுக்கும் மேலும் மகத்தான அடையாளத்தை, கூடுதல் அர்த்தத்தை வழங்க நாடு முடிவு செய்துள்ளது”

“நமது பழங்குடியினர் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையையும், விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின வீரர்கள், வீராங்கனைகளின் பங்களிப்பைச் சித்தரிப்பதாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்கும்”

“பகவான் பிர்சா இந்த சமூகத்திற்காக வாழ்ந்தார், தமது கலாச்சாரத்திற்காகவும், தமது நாட்டிற்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்தார். எனவே நமது சமயத்தில், நமது உணர்வில், நமது கடவுளாக இப்போதும் அவர் திகழ்கிறார்”

Posted On: 15 NOV 2021 10:46AM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுனர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டு காலத்தில், இந்தியாவின் பழங்குடியினர் பாரம்பரியத்திற்கும் அதன் வீரம் செறிந்த வரலாறுகளுக்கும் மேலும் மகத்தான அடையாளத்தை, கூடுதல் அர்த்தத்தை வழங்க நாடு முடிவு செய்துள்ளது என்றார். “இதற்காக இன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 அன்று அதாவது பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் ‘பழங்குடியினர் கௌரவ தினமாக’ நாடு கொண்டாடும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் போது பிரதமர் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலமாக மாறுவதற்கு உறுதியான எண்ணம் கொண்டிருந்ததற்காக திரு.அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். “மத்திய அரசில் பழங்குடியினர் நலனுக்கு முதன் முறையாக தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய அடல் அவர்கள், நாட்டின் கொள்கைகளுடன் பழங்குடியினர் நலன்களை இணைத்தவர்” என்று திரு.மோடி மேலும் கூறினார்.

பகவான் பிர்சா முண்டாவின் நினைவுத் தோட்டம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகத்திற்காக நாட்டின் பழங்குடி சமூகத்திற்கும், இந்தியாவில் அனைத்துக் குடிமக்களுக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். “நமது பழங்குடியினர் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையையும், விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின வீரர்கள், வீராங்கனைகளின் பங்களிப்பையும் சித்தரிப்பதற்கு இந்த அருங்காட்சியகம் உயிர்ப்பான களமாக மாறும்” என்று அவர் கூறினார்.

பகவான் பிர்சாவின் தொலைநோக்குப் பார்வைப் பற்றி பேசிய பிரதமர், நவீனம் என்ற பெயரில் பன்முகத்தன்மையை, தொன்மை அடையாளத்தை, இயற்கையைப் பாழ்படுத்துவது சமூகத்தின் நலனுக்கான பாதையாக இருக்காது என்பதை பகவான் பிர்சா முண்டா அறிந்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டினார். அதே சமயம் நவீன கல்விக்கு ஆதரவளித்த அவர், தமது சொந்த சமூகத்தின் குறைபாடுகள் மற்றும் போதாமைகளுக்கு எதிராகப் பேசும் துணிவையும் கொண்டிருந்தார். இந்தியாவின் அதிகாரத்தை மாற்றம் செய்வது, இந்தியாவுக்கான முடிவுகள் எடுப்பதற்குரிய அதிகாரம் இந்தியர்கள் கையில் இருப்பது என்பவை விடுதலைப் போராட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று பிரதமர் கூறினார். அதே சமயம், இந்தியப் பழங்குடி சமூகத்தின் அடையாளத்தை அழிக்க விரும்பியவர்களின் எண்ணத்திற்கு எதிராக – ‘பூமித் தந்தை’ –க்காகவும் போராடினார்.  “பகவான் பிர்சா இந்த சமூகத்திற்காக வாழ்ந்தார், தமது கலாச்சாரத்திற்காகவும், தமது நாட்டிற்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்தார். எனவே நமது சமயத்தில், நமது உணர்வில், நமது கடவுளாக இப்போதும் அவர் திகழ்கிறார்” என்று பிரதமர் குறிப்பிட்டார். ‘பூமித் தந்தை என்பது வெகு காலத்திற்கு இந்த பூமியில் நிலைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த வரலாற்றையும் வாழ்க்கையின் குறுகிய காலத்தில் எழுதிய அவர், இந்தியாவின் பிந்தைய தலைமுறைகளுக்கு வழிகாட்டுதலைத் தந்தார்’ என்று பிரதமர் மேலும் கூறினார்.

 

***



 



(Release ID: 1771868) Visitor Counter : 199