பிரதமர் அலுவலகம்
பிரதமர் இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு புதுமையான வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்முயற்சிகளின் தொடக்க விழாவில் உரையாடியதன் மொழிபெயர்ப்பு
Posted On:
12 NOV 2021 3:01PM by PIB Chennai
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்திகாந்த தாஸ், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற முக்கியஸ்தர்கள், மரியாதைக்குரிய ஆண்கள் மற்றும் பெண்களே! உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள். கொரோனாவின் இந்த சவாலான காலகட்டத்தில் நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மிகவும் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளன. இந்த அமிர்த மஹோத்சவ் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான தசாப்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில், ரிசர்வ் வங்கிக்கு முக்கியப் பங்கு உள்ளது. RBI குழு நாட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
கடந்த 6-7 ஆண்டுகளாக மத்திய அரசு சாமானிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ரிசர்வ் வங்கி, ஒரு கட்டுப்பாட்டாளராக, மற்ற நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்புக் கொண்டு, சாமானியர்களின் வசதியை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று அதன் தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட இரண்டு திட்டங்களும் நாட்டில் முதலீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு முதலீட்டாளர்களுக்கு மூலதனச் சந்தைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் அணுகும். அதேபோன்று, இன்று ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்துடன் வங்கித் துறையில் ஒரே நாடு, ஒரே குறைதீர்ப்பாளர் அமைப்பு வடிவம் பெற்றுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு புகார்களையும் பிரச்சனைகளையும் சரியான நேரத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தீர்க்க இது உதவும். ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம், குறை தீர்க்கும் முறை எவ்வளவு வலிமையாக செயலில் உள்ளது என்பதே.
நண்பர்களே,
நேரடி சில்லறை விற்பனைத் திட்டம் பொருளாதாரத்தில் அனைவரின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதுடன், புதிய உயரங்களைக் தொடப் போகிறது. நாட்டின் வளர்ச்சியில் அரசுப் பத்திரச் சந்தையின் முக்கியப் பங்கு பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள். நாடு தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் மும்முரமாக இருக்கும் நேரத்தில், சிறிய முதலீட்டாளர்களின் முயற்சிகள், ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பு பெரும் உதவியாக இருக்கும். இதுவரை, நமது நடுத்தர வர்க்கத்தினர், ஊழியர்கள், சிறு வியாபாரிகள், மூத்த குடிமக்கள், அதாவது சிறுசேமிப்பு வைத்திருப்பவர்கள், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வங்கிகள், காப்பீடு அல்லது பரஸ்பர நிதி போன்ற மறைமுக வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இப்போது பாதுகாப்பான முதலீட்டுக்கான மற்றொரு சிறந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள். இப்போது அனைத்து பிரிவினரும் அரசுப் பத்திரங்களிலும் நேரடியாக முதலீடு செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பத்திரங்களிலும் உத்தரவாதமான தீர்வுக்கான ஏற்பாடு உள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதனால், சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறுகின்றனர். மேலும் நாட்டின் சாதாரண மனிதர்களின் அபிலாஷைகளுக்கேற்ப புதிய இந்தியாவுக்கான உள்கட்டமைப்பு மற்றும் பிறவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களை அரசாங்கமும் பெறும். இது தன்னம்பிக்கை இந்தியாவை உருவாக்க குடிமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாகும்.
நண்பர்களே,
பொதுவாக, நிதிச் சிக்கல்கள் பற்றி சாமானியர்கள் அறியமாட்டார்கள். இவற்றைச் சாமானியர்களுக்குச் சிறந்த முறையில் விளக்குவது காலத்தின் தேவை என்று நினைக்கிறேன். நிதி உள்ளடக்கம் பற்றி பேசும்போது, இந்த நாட்டின் கடைசி நபரையும் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறோம். வல்லுனர்களாகிய உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும், ஆனால் நாட்டின் சாமானிய மக்களுக்கும் தெரியப்படுத்தினால் அது மிகவும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஃபண்ட் மேனேஜர்கள் தேவையில்லை என்பதையும், "நேரடி சில்லறை அரசாங்க பாண்டுகள் (RDG) கணக்கை" தாங்களாகவே திறக்க முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தக் கணக்கை ஆன்லைனில் திறக்கலாம் என்பதுடன், மக்கள் ஆன்லைன் மூலம் பத்திரங்களை வர்த்தகம் செய்யலாம். எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. இணைய இணைப்பு மூலம் உங்கள் மொபைல் போன்கள் மூலம் வர்த்தகம் செய்ய முடியும். இந்த RDG கணக்கு, முதலீட்டாளரின் சேமிப்புக் கணக்குகளுடன் இணைக்கப்படும், இதனால் விற்பனை மற்றும் கொள்முதல் தானாகவே சாத்தியமாகும். இதனால் மக்களுக்கு ஏற்படும் வசதியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.
நண்பர்களே,
வலுவான பொருளாதாரத்திற்கு வலுவான வங்கி அமைப்பு மிகவும் முக்கியமானது. 2014 க்கு முந்தைய ஆண்டுகளில் நாட்டின் வங்கி அமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைவருக்கும் தெரியும். அப்போது என்ன நிலைமை இருந்தது? கடந்த ஏழு ஆண்டுகளில், NPAகள் வெளிப்படைத்தன்மையுடன் அங்கீகரிக்கப்பட்டன, பொதுத்துறை வங்கிகள் மறு-மூலதனமாக்கப்பட்டதுடன், நிதி அமைப்பு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்பு இந்த முறையைப் பயன்படுத்திக் கொண்டு வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், இனி சந்தையில் இருந்து நிதி திரட்ட முடியாது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தில் முன்னேற்றம், முடிவெடுப்பது, இடமாற்றம் மற்றும் இடுகைகள் தொடர்பான சுதந்திரம், சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் பெரிய வங்கிகளை உருவாக்குவது அல்லது தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் லிமிடெட் அமைத்தல் என எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வங்கித் துறையில் ஒரு புதிய நம்பிக்கையும் ஆற்றலும் திரும்பியுள்ளது.
நண்பர்களே,
வங்கித் துறையை மேலும் வலுப்படுத்த கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்த வங்கிகளின் நிர்வாகத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் வலுப்பெற்று வருகிறது. சமீப காலமாக, டெபாசிட் செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே குறைதீர்ப்பு அமைப்பு, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வங்கிகள், NBFC கள் மற்றும் ப்ரீ-பெய்டு கருவிகளில் 44 கோடி கடன் கணக்குகள் மற்றும் 220 கோடி டெபாசிட் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு நேரடி நிவாரணம் அளிக்கும். உதாரணமாக, இதற்கு முன்பு ஒருவருக்கு லக்னோவில் வங்கிக் கணக்கு இருந்தால், அவர் டெல்லியில் பணிபுரிந்தால், அவர் லக்னோவின் ஒம்புட்ஸ்மேனிடம் மட்டுமே புகார் செய்ய முடியும். ஆனால் தற்போது இந்தியாவில் எங்கிருந்தும் தனது புகாரை பதிவு செய்யும் வசதி கிடைத்துள்ளது. ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகள் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதற்கு இந்தத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை விரிவாகப் பயன்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே குறுகிய காலத்தில் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மோசடி செய்யப்பட்ட தொகை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தகைய நடவடிக்கைகளால், டிஜிட்டல் ஊடுருவல் மற்றும் வாடிக்கையாளர்களை உள்ளடக்கியதன் நோக்கம் அதிகரிக்கும், மேலும் வாடிக்கையாளரின் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில், கோவிட்-ன் கடினமான நேரத்திலும் கூட, நாட்டின் வங்கி மற்றும் நிதித் துறைகளில் சேர்ப்பதில் இருந்து தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பிற சீர்திருத்தங்கள் வரை பலம் கண்டுள்ளோம். இது சாமானியர்களுக்கு சேவை செய்வதில் திருப்தியையும் உறுதி செய்கிறது. இந்த நெருக்கடியின் போது எடுத்த துணிச்சலான முடிவுகளுக்காக ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் அவரது முழு குழுவினரையும் பகிரங்கமாக வாழ்த்துகிறேன். அரசு அறிவித்த கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 2.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.25 கோடிக்கும் அதிகமான பயனாளிகள், பெரும்பாலும் மைக்ரோ, சிறு & குறு நிறுவனங்கள் (MSMEகள்) மற்றும் நடுத்தர வர்க்க சிறு தொழில் முனைவோர், தங்கள் நிறுவனங்களை மேலும் வலுப்படுத்த இது உதவியுள்ளது.
நண்பர்களே,
கோவிட் காலத்திலேயே சிறு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தால் ஒரு சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 2.5 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் KCC கார்டுகளைப் பெற்றுள்ளனர், மேலும் அவர்கள் சுமார் 2.75 லட்சம் கோடி விவசாயக் கடன்களையும் பெற்றுள்ளனர். கை வண்டிகள் மற்றும் காய்கறிகளில் பொருட்களை விற்கும் சுமார் 26 லட்சம் தெருவோர வியாபாரிகள், பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் அவர்களை வங்கி அமைப்பிலும் இணைத்துள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதில் இதுபோன்ற பல தலையீடுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நண்பர்களே,
இந்தியாவில் ஆறு-ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கி, ஓய்வூதியம், காப்பீடு போன்றவை சாதாரண குடிமக்கள், ஏழைக் குடும்பங்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெண்கள், தலித்துகள் - பிற்படுத்தப்பட்டோர் - ஆகியோருக்கு கைக்கெட்டாத தொலைவில் இருந்தன. ஏழைகளுக்கு இந்த வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர்களும் அதில் கவனம் செலுத்தவில்லை. ஓய்வூதியம் மற்றும் காப்பீடு ஆகியவை வளமான குடும்பங்களுக்கு மட்டுமே என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. இன்று, நிதி உள்ளடக்கம் மட்டுமல்ல, அணுகல் எளிமையும் வங்கி மற்றும் நிதித்துறையில் இந்தியாவின் அடையாளமாக மாறி வருகிறது. இன்று, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் சுமார் 38 கோடி மக்களுக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 5 கிமீ சுற்றளவில் வங்கிக் கிளை அல்லது வங்கி நிருபர் வசதி உள்ளது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், 42 கோடிக்கும் அதிகமான ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் காரணமாக பெண்கள், தலித்-பிற்படுத்தப்பட்ட-பழங்குடியினர் மத்தியில் இருந்து ஒரு புதிய தலைமுறை வணிகர்கள் உருவாகியுள்ளனர் மற்றும் தெரு வியாபாரிகளும் SVANidhi திட்டத்தின் மூலம் நிறுவன கடன்களில் சேர முடிந்தது.
நண்பர்களே,
டிஜிட்டல் அதிகாரமளித்தல் நீட்டிப்பு நாட்டு மக்களுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது. 31 கோடிக்கும் அதிகமான RuPay கார்டுகள் மற்றும் சுமார் 50 லட்சம் PoS / m-PoS இயந்திரங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கியுள்ளன. UPI ஆனது மிகக் குறுகிய காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா 19 மடங்கு உயர்ந்துள்ளது. இன்று, நமது வங்கி அமைப்பு எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் நாட்டில் எங்கும் செயல்படும். கொரோனா காலத்தில் அதன் பலன்களையும் பார்த்தோம்.
நண்பர்களே,
ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான ஒழுங்குமுறை அமைப்பாக இருந்து, மாறிவரும் சூழ்நிலைகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது நாட்டின் பெரும் பலமாகும். ஃபிண்டெக்கில் நமது இந்திய ஸ்டார்ட் அப்கள் எப்படி உலகளாவிய சாம்பியனாகி வருகின்றன என்பதை இப்போதெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தத் துறையில் தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. நமது நாட்டின் இளைஞர்கள் இந்தியாவை உலகளாவிய புதுமைகளின் சக்தி மையமாக மாற்றியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், நமது ஒழுங்குமுறை அமைப்புகள் இந்த மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது மற்றும் நமது நிதி அமைப்புகளை உலகத் தரத்தில் வைத்திருக்க பொருத்தமான மற்றும் அதிகாரமளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது அவசியம்.
நண்பர்களே,
நாட்டின் குடிமக்களின் தேவைகளை மையமாக வைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் புதிய அடையாளத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, இந்த மிகப்பெரிய சீர்திருத்தங்களுக்கான முன்முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
********
(Release ID: 1771479)
Visitor Counter : 427
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada