பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்


ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவதை விரிவாக்கி புத்தாண்டை புதுப்பிக்கப்பட தன்னம்பிக்கையுடன் அணுக உறுதி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்

“தற்போது நாம் ‘வீடு தோறும் தடுப்பூசி’ என்னும் இயக்கத்தை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, ஒவ்வொரு குடும்பமும் இரண்டு தவணை தடுப்பூசி என்னும் பாதுகாப்பு வளையத்தை எட்டுவதை உறுதி செய்வோம்”

“நுண் உத்திகளை உருவாக்கி, அனுபவத்தின் வாயிலாக உள்ளூர் மட்டத்தில் உள்ள இடைவெளிகளை போக்கி அதிகபட்ச தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வோம்”

“தேசிய சராசரியை நெருங்க உங்கள் மாவட்டங்களில் சிறந்த செயல்பாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்”

“உள்ளூர் மதத் தலைவர்களின் கூடுதல் உதவியை நீங்கள் கோரலாம். அனைத்து மதங்களின் தலைவர்களும் தடுப்பூசிக்கு எப்போதும் ஆதரவாக உள்ளனர்”

“குறிப்பிட்ட காலம் கடந்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை முன்ன

Posted On: 03 NOV 2021 2:26PM by PIB Chennai

கிளாஸ்கோவிலிருந்து தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு.நரேந்திர மோடி உடனடியாக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார். முதல் தவணை தடுப்பூசி 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படும் மாவட்டங்கள் இதில் அடங்கும். குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

மாவட்டங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை விளக்கிய மாவட்ட ஆட்சியர்கள், அதுவே குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்தனர். வதந்திகள் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் தயக்கம், போக்குவரத்துக்கு கடினமான மலைப்பகுதி, கடந்த சில மாதங்களாக நிலவும் தட்பவெப்ப நிலையால் ஏற்பட்டுள்ள சவால்கள் போன்ற விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். இத்தகைய சவால்களை எதிர்கொள்ள தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர்கள் விளக்கினர். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க தாங்கள் மேற்கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது பிரதமர் தடுப்பூசி செலுத்துவதில் காணப்படும் தயக்கம், உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவை குறித்து விவாதித்தார். இந்த மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் பற்றி அவர் விளக்கினார். மத மற்றும் சமுதாய தலைவர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பரப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை விரிவாக்கி, வரும் புத்தாண்டை புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி விவரங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் விளக்கினார். மாநிலங்களில் தற்போது உள்ள தடுப்பூசி நிலையை விளக்கிய அவர், தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்க சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாநிலங்கள் மேற்கொண்டு வருவது குறித்தும் தெரிவித்தார்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர், கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்களது கவனம் மாவட்டங்களை மேலும் உறுதியுடன் செயல்பட ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார். இது இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய பெருந்தொற்று என்று குறிப்பிட்ட திரு.மோடி, நாடு பல சவால்களை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம், நாம் புதிய தீர்வுகளைக் கண்டுபிடித்து புதிய முறைகளை முயற்சி செய்ததுதான் என்று அவர் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை கையாள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் நன்கு செயல்பட்டு வரும் மாவட்டங்களும் இதே போன்ற சவால்களை சந்தித்ததாகவும், உறுதிபாட்டுடனும், புதிய முறைகள் மூலமும் அவர்கள் இதை எதிர்நோக்கியதாக அவர் தெரிவித்தார். நுண் உத்திகளை உருவாக்கி அனுபவங்களை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்ய வேண்டுமென அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். மாவட்ட அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில், தேவைப்பட்டால் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் வேறுபட்ட உத்திகளை கடைபிடிக்க வேண்டுமென்று அவர் யோசனை தெரிவித்தார். மண்டலத்தை பொறுத்து 20 முதல் 25 பேரை கொண்ட குழுக்களை உருவாக்கி இதை செயல்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறினார். அமைக்கப்படும் குழுக்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவும் முயற்சிக்கலாம் என அவர் தெரிவித்தார். உள்ளூர் இலக்குகளுக்கான மண்டல வாரியாக கால அட்டவணை தயார் செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்ட பிரதமர், தேசிய சராசரியை எட்டும் வகையில் உங்கள் மாவட்டங்களில் நீங்கள் சிறந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

தடுப்பூசிகள் குறித்த வதந்திகள் மற்றும் புரிதல் இல்லாமை விஷயங்கள் பற்றியும் பிரதமர் பேசினார். இதற்கு விழிப்புணர்வு ஒன்றே ஒரே தீர்வு என்று கூறிய அவர், மதத் தலைவர்களின் உதவியை இதில் மாநில அதிகாரிகள் நாடலாம் என தெரிவித்தார். மதத் தலைவர்கள் தடுப்பூசி பிரச்சாரம் குறித்து மிகுந்த உற்சாகத்துடன் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் திரு.மோடி, வாடிகனில் போப் பிரான்சிஸ்வுடனான தமது சந்திப்பை நினைவு கூர்ந்தார். தடுப்பூசிகள் குறித்த மதத் தலைவர்களின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பான தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துதல் போன்றவை மூலம் பொது மக்களை தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வர செய்யப்படும் ஏற்பாடுகளில் மாறுதல்களை மேற்கொள்ளலாம் என பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஒவ்வொரு வீட்டையும் சுகாதாரப் பணியாளர்கள் கருணையுடன் அணுகி தடுப்பூசி செலுத்த முனைய வேண்டுமென அவர் வலியுறுத்தினார். முழுமையான தடுப்பூசி செலுத்துவதை வீடு தோறும் சென்று உறுதிபடுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். “நாம் தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தடுப்பூசி இயக்கத்தை எடுத்துச் செல்ல தயாராகி வருகிறோம் என்றும். வீடு தோறும் தடுப்பூசி என்ற மந்திரத்துடன் இரண்டு தவணை தடுப்பூசி என்ற பாதுகாப்பு வளையத்தை ஒவ்வொரு குடும்பமும் எட்டும் வகையில் இதை அணுகுகிறோம்” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டும் போது, முதல் தவணை தடுப்பூசியுடன் இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் கவனம் செலுத்த வேண்டுமென்று பிரதமர் அறிவுறுத்தினார். ஏனெனில் பெருந்தொற்று குறையும் போதெல்லாம் அவசர உணர்வும் குறையக் கூடும். மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான அவசரம் குறைந்துள்ளது” “குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்களை நீங்கள் தொடர்பு கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். இதை புறக்கணித்தால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் எச்சரித்தார்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் கீழ் இந்தியா 2.5 கோடி தடுப்பூசி டோஸ்களை ஒரே நாளில் செலுத்தி சாதனைப்படைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் திறமைக்கு இந்த சாதனை சான்றாக விளங்குகிறது என்றார். சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் சக பணியாளர்கள் மேற்கொள்ள சிறந்த நடைமுறைகளை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு உள்ளூர் தேவைகள் மற்றும் சூழலுக்கு ஏற்ப தங்களது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று மாவட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். 

•••••••(Release ID: 1769233) Visitor Counter : 160