பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு

Posted On: 22 OCT 2021 11:49AM by PIB Chennai

வணக்கம், எனதருமை நாட்டு மக்களே!

நமது கடமைகளையும் செயல்களும் சரியாக இருந்தால் வெற்றி நிச்சயம்எனும் வேத சொற்றொடருடன் இன்று நான் தொடங்க விரும்புகிறேன்.

இந்தியாவின் கண்ணோட்டத்துடன் இதை நாம் பார்த்தோம் என்றால், நாடு தனது கடமையைச் சரியாக செய்ததால் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி கடினமான ஆனால் குறிப்பிடத்தக்கச் சாதனையை நேற்று, அக்டோபர் 21 அன்று, நாடு படைத்துளது. 130 கோடி இந்திய மக்களின் அர்ப்பணிப்பால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது. எனவே, இந்த வெற்றி இந்தியாவின் வெற்றி மற்றும் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வெற்றி. இதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, நாட்டின் வலிமையின் பிரதிபலிப்பு, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது. சிக்கலான இலக்குகளை நிர்ணயித்து அதனை எவ்வாறு அடைவது என்பதை உணர்ந்து கொள்வதற்கான விளக்கம் இது. தனது சபதங்களை நிறைவேற்ற கடுமையாக உழைக்கும் புதிய இந்தியாவுக்கான விளக்கம் இது.

நண்பர்களே,

இன்று பலரும் இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தை உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகின்றனர். இந்தியா ஒரு பில்லியனை தாண்டிய வேகமும் பாராட்டப்படுகிறது. இருப்பினும், இந்த பகுப்பாய்வில் ஒரு விஷயம் தவறவிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக் குறித்து பல தசாப்தங்களாக நிபுணத்துவம் இருந்தது. பெரும்பாலும் இந்த நாடுகளால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை சார்ந்து இந்தியா இருந்தது. நாம் அவற்றை இறக்குமதி செய்து பயன்படுத்தினோம். ஆகையால், 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோய் தாக்கிய போது இந்தியாவைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த உலகளாவிய பெருந்தொற்றை எதிர்த்துப் போராட இந்தியாவால் முடியுமா? மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கான பணம் இந்தியாவுக்கு எங்கிருந்து கிடைக்கும்? இந்தியாவுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்? இந்திய மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்குமா இல்லையா? தொற்றுநோய் பரவாமல் தடுக்க போதுமான அளவு தடுப்பூசிகளை இந்தியாவால் போட முடியுமா? இவ்வாறு பல்வேறு கேள்விகள் இருந்தன. ஆனால் இன்று இந்த 100 கோடி எண்ணிக்கை இதுபோன்ற ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கிறது. இந்தியா தனது குடிமக்களுக்கு 100 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது, அதுவும் இலவசமாக.

நண்பர்களே,

100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டதன் காரணமாக, விளைவுகளில் ஒன்று, இந்தியாவை மிகவும் பாதுகாப்பான இடமாக உலகம் தற்போது கருதும். ஒரு மருந்தக மையமாக இந்தியாவின் நிலை மேலும் வலுப்படுத்தப்படும். இன்று முழு உலகமும் இந்தியாவின் சக்தியை உணர்கிறது.

நண்பர்களே,

 

'அனைவருடன், அனைவரின் நன்மைக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சியுடன்என்பதன் நேரடி உதாரணமாக இந்தியாவின் தடுப்பூசி பிரச்சாரம் திகழ்கிறது. கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பக் கட்டங்களில், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினம் என்ற அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் இதற்குத் தேவையான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் குறித்து தெரியுமா என்று கேட்கப்பட்டது. ஆனால் எங்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்றால் அனைவரின் ஒத்துழைப்புடன்என்று பொருள். அனைவரையும் ஒன்றிணைத்த நாடு, 'அனைவருக்கும் தடுப்பூசி', 'இலவசத் தடுப்பூசி' பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், தொலைதூரத்தில் இருந்தாலும், நாட்டில் ஒரே ஒரு மந்திரம் மட்டுமே இருந்தது- நோய் பாகுபாடு காட்டவில்லை என்பதால் தடுப்பூசியிலும் எந்த பாகுபாடும் இருக்க முடியாது. எனவே, தடுப்பூசி நடவடிக்கையில் விஐபி கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவர் எவ்வளவு முக்கியமான பதவியில் இருந்தாலும், அவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், சாதாரண குடிமக்களைப் போலவே அவரும் தடுப்பூசிகளைப் பெறுவார்.

நண்பர்களே,

பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட வரமாட்டார்கள் என்று கூறப்பட்டது. உலகின் பல வளர்ந்த நாடுகளில் இன்றும் கூட தடுப்பூசித் தயக்கம் ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஆனால் இந்திய மக்கள் இத்தகைய விமர்சகர்களுக்கு 100 கோடி தடுப்பூசி மருந்துகளை எடுத்து பதில் அளித்துள்ளனர்.

நண்பர்களே,

அனைவரின் முயற்சியும் ஒரு இயக்கத்தில் இணையும் போது, ​​முடிவுகள் ஆச்சரியமாக இருக்கும். பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் எங்கள் முதல் சக்தியாக பொதுமக்கள் பங்கேற்பை நாங்கள் உறுதி செய்தோம், நாடு அதன் ஒற்றுமைக்கு ஆற்றலைக் கொடுக்க கைதட்டியது, தட்டுகளைத் தட்டியது மற்றும் விளக்குகளை ஏற்றியது. அப்போது சிலர் கேள்வி எழுப்பினார்கள்- இவை அனைத்தையும் செய்வதன் மூலம் இந்த நோய் ஓடிவிடுமா? ஆனால் நாம் அனைவரும் நாட்டின் ஒற்றுமையை, கூட்டு சக்தியின் விழிப்புணர்வைக் கண்டோம். இந்த கூட்டு சக்தி நாட்டை மிக குறுகிய காலத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற மைல்கல்லுக்கு இட்டு சென்றுள்ளது. பல முறை நம் நாடு ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகளை தாண்டியது. இது வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத மிகப்பெரிய சாத்தியம், மேலாண்மைத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு,

நண்பர்களே,

இந்தியாவின் முழு தடுப்பூசித் திட்டமும் அறிவியலின் கருவறையில் பிறந்து, அறிவியல் அடிப்படையில் வளர்ந்து, அறிவியல் முறைகள் மூலம் அனைத்து திசைகளையும் அடைந்துள்ளது. இந்தியாவின் முழுத் தடுப்பூசித் திட்டமும் அறிவியலால் பிறந்து, அறிவியலால் இயக்கப்பட்டு மற்றும் அறிவியல் அடிப்படையிலானது என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். தடுப்பூசிகளின் உருவாக்கம் முதல் வழங்கப்படுவது வரை எல்லா இடங்களிலும் அறிவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறை கையாளப்பட்டது. உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சவால் எங்கள் முன் இருந்தது. இவ்வளவு பெரிய நாடு மற்றும் இவ்வளவு பெரிய மக்கள் தொகை! அதன் பிறகு, பல்வேறு மாநிலங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கும் பணி! இதுவும் ஒரு பிரம்மாண்டமான பணி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த சவால்களுக்கு அறிவியல் முறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாடு தீர்வு காணப்பட்டது. வசதிகள் அசாதாரண வேகத்தில் அதிகரிக்கப்பட்டன. எந்த மாநிலத்தில் எத்தனை தடுப்பூசிகள், எப்போது, ​​எந்த பகுதியில் சென்றடைய வேண்டும் என்பதற்கு அறிவியல் சூத்திரம் பயன்படுத்தப்பட்டது. நம் நாட்டால் உருவாக்கப்பட்ட கோவின் தளமும் உலகின் ஈர்ப்பு மையமாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவின் இயங்குதளம் சாதாரண மக்களுக்கு வசதியை அளித்தது மட்டுமல்லாமல், நமது மருத்துவ ஊழியர்களின் பணியை எளிதாக்கியுள்ளது.

நண்பர்களே,

இன்று எல்லா இடங்களிலும் நம்பிக்கை, உற்சாகம் மற்றும் வைராக்கியம் உள்ளது. சமூகம் முதல் பொருளாதாரம் வரை ஒவ்வொரு பிரிவிலும் நேர்மறை எண்ணம் உள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் மற்றும் பல முகமைகள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் சாதகமாக உள்ளனர். இன்று, இந்திய நிறுவனங்கள் சாதனை அளவிலான முதலீட்டை மட்டும் ஈர்க்கவில்லை, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. சாதனை முதலீடுகளுடன், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யூனிகார்ன்களாக வளர்கின்றன. வீட்டு வசதித் துறையிலும் புதிய உற்சாகம் தென்படுகிறது. கதிசக்தி முதல் புதிய ட்ரோன் கொள்கை வரை கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகள் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும். கொரோனா காலத்தில் நமது பொருளாதாரத்தை வேளாண்துறை உறுதியாக வைத்திருந்தது. இன்று, உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்வது சாதனை அளவில் நடக்கிறது மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் போகிறது. தடுப்பூசிகளின் அதிகரித்த பாதுகாப்புடன், பொருளாதார-சமூக நடவடிக்கைகள், விளையாட்டு, சுற்றுலா அல்லது பொழுதுபோக்கு என நேர்மறையான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரவிருக்கும் பண்டிகை காலம் அதற்கு அதிக வேகத்தையும் வலிமையையும் கொடுக்கும்.

நண்பர்களே,

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீது மோகம் இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று 'மேட் இன் இந்தியா'வின் சக்தி மிகப்பெரியது என்பதை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து வருகின்றனர். எனவே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு சிறிய பொருளையும் வாங்க நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அதன் தயாரிப்பின் பின்னால் ஒரு இந்தியனின் வியர்வை உள்ளது. தூய்மை இந்தியா ஒரு வெகுஜன இயக்கமாக இருப்பது போல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் வாங்க வேண்டும், மேலும் உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவரின் முயற்சியாலும் இதை நம்மால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். கடந்த தீபாவளியை நினைத்துப் பார்த்தால், அனைவரின் மனதிலும் பதற்றம் இருந்தது. ஆனால் இந்த தீபாவளியின் போது, 100 கோடி தடுப்பூசிகளால் நம்பிக்கை உணர்வு உள்ளது. எனது நாட்டின் தடுப்பூசிகள் எனக்கு பாதுகாப்பை அளிப்பது போல, எனது நாட்டின் தயாரிப்புகள் எனது தீபாவளியை வண்ணமயமாக்கும். 100 கோடி தடுப்பூசி எனும் எண்ணிக்கை நமது சிறிய கடைக்காரர்கள், தொழில்முனைவோர் மற்றும் தெரு விற்பனையாளர்கள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கையின் கதிராக வந்துள்ளது.

நண்பர்களே,

 

அம்ரித் மகோத்ஸவின் தீர்மானங்கள் இன்று நம் முன் உள்ளன. இந்த வெற்றி நமக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் அவற்றை அடைவதற்கும் நாட்டுக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் இன்று சொல்லலாம். ஆனால் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கவசம் எவ்வளவு நவீனமாக இருந்தாலும், கவசம் பாதுகாப்பிற்கு முழுமையான உத்தரவாதத்தைக் கொடுத்தாலும், போர் நடக்கும் போது ஆயுதங்கள் கைவிடப்படுவதில்லை. நமது பண்டிகைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். முக கவசங்களை பொருத்தவரை, இப்போது பிரத்யேகமான முககவசங்களும் உள்ள காரணத்தால், நாம் வெளியே செல்லும் போது காலணிகளை அணிவது போலவே முக கவசங்களையும் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்தால்,  நம்மால் விரைவில் கொரோனாவை தோற்கடிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வரவிருக்கும் பண்டிகைகளுக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் மிக்க நன்றி!

*****************


(Release ID: 1765835) Visitor Counter : 347