பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிஎம் கேர்ஸ் குழந்தைகளுக்கான திட்டத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது


இந்தத் திட்டம் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்கானது

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகையும், 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சமும் வழங்க வகைசெய்கிறது

Posted On: 07 OCT 2021 1:47PM by PIB Chennai

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொவிட்-19  பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி 2021, மே 29 அன்று அறிவித்தார். இத்தகைய குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டது.

சுகாதாரக்காப்பீட்டின் மூலம் நல்வாழ்வையும், கல்வியின் மூலம் அதிகாரமளித்தலையும் 23 வயது அடையும்போது நிதியுதவி செய்வதன் மூலம் தற்சார்புக்கு அவர்களைத் தயார் செய்வதையும் இந்தத் திட்டம் கொண்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கு நிதி வசதியை உறுதிசெய்ய 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகையையும் 23 வயதை அடையும்போது மொத்தமாக ரூ.10 லட்சம் ரொக்கத் தொகையையும் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைய, பிரதமரால் திட்டம் அறிவிக்கப்பட்ட 29.05.2021லிருந்து 31.12.2021வரை தகுதியான குழந்தைகள் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.

இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான குழந்தைகளின் தகுதிகள் பின்வருமாறு:

  1. பெற்றோர்கள் இருவரும் (II) வாழும் ஒரு பெற்றோர் அல்லது (III) சட்டப்படியான காப்பாளர் / தத்தெடுத்த பெற்றோர்கள் / தத்தெடுத்த பெற்றோர்களில் ஒருவர், கொவிட் -19 என்பதைப் பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்த 11.03.2020லிருந்து 31.12.2021க்குள் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்திருந்தால் இந்தத் திட்டத்தில் பயனாளியாக இணையமுடியும் (IV) பெற்றோர்கள் இறந்த தேதியில் சம்பந்தபட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது

ஆறு வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களிலிருந்து ஊட்டச்சத்து, பள்ளிக்கல்விக்கு முந்தைய கல்வி, தடுப்பூசி, சுகாதார பரிசோதனை போன்றவற்றைப் பெறலாம்.

தினந்தோறும் பள்ளிக்கு வந்துசெல்லும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் /  கேந்திரிய வித்யாலயாக்கள் / தனியார் பள்ளிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும். அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்தக் குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி இலவச சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்களை வழங்கவேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் 12(1)(சி) பிரிவின் கீழ் கல்விக்கட்டணத்திலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கவேண்டும். சில சூழ்நிலைகளில் மேலே குறிப்பிட்ட சலுகைகளைப் பெறமுடியாவிட்டால் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படும். சீருடை, பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றிற்கான செலவும் வழங்கப்படும்.

11-18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட வகையான பள்ளிகளில் இடம் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிசெய்யவேண்டும். இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா / கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா / ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் / ராணுவப் பள்ளி/ நவோதயா வித்யாலயா அல்லது மற்ற பிற உறைவிடப் பள்ளியில் இந்தக் குழந்தைகள் மாவட்ட ஆட்சியரால் சேர்க்கப்படலாம்.

இந்தியாவில் தொழில்முறை பாட வகுப்புகள் / உயர்கல்விக்குக் கடன் பெற்றுத்தந்து உதவி செய்யப்படும். சில சூழல்களில் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்காவிட்டால் கல்விக்கடனுக்கான வட்டி குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும்.

அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.

பயனாளிக்கு வழங்கப்படும் மொத்தமான ரொக்கத்தொகை அவர்களால் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளியாக அடையாளம் காணப்படும் குழந்தைகள் 18 வயது அடையும்போது ரூ.10 லட்சம் இந்த கணக்கில் சேர்க்கப்படும். 18 வயதிலிருந்து இவர்கள் மாதந்தோறும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம். 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சத்தை அவர்கள் மொத்தமாக பெறுவார்கள்.

மேலும் விவரங்களை இந்த இணையதளத்தில் அறியலாம்  https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/oct/doc202110711.pdf

*****(Release ID: 1761796) Visitor Counter : 436