பிரதமர் அலுவலகம்

ஜெய்ப்பூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சிஐபிஇடி : திறப்பு விழாவில் பேசிய பிரதமர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு

Posted On: 30 SEP 2021 2:37PM by PIB Chennai

வணக்கம்!

ராஜஸ்தானின் மண்ணின் மகனும், இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாயத்து, மக்களவையின் பாதுகாவலருமான, எங்கள் மாண்புமிகு சபாநாயகர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதல்வர் திரு. அசோக் கெலாட், மத்திய சுகாதார அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, எனது மற்ற சக ஊழியர்கள் மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், திரு. பூபேந்திர யாதவ், திரு.அர்ஜுன் ராம் மேக்வால், திரு. கைலாஷ் சவுத்ரி, டாக்டர் பாரதி பவார் திரு. பகவந்த் குபா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் திரு. வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. குலாப் சந்த் கட்டாரியா, மற்ற அமைச்சர்கள் ராஜஸ்தான் அரசாங்கத்தின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் மற்றும் ராஜஸ்தானின் எனது அன்பு சகோதர சகோதரிகள் அனைவரையும் வரவேற்கிறேன்.

100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோய் உலகின் சுகாதாரத் துறைக்கு பல சவால்களை முன்வைத்துள்ளது, இது நமக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு நாடும் இந்த நெருக்கடியை அதன் சொந்த வழியில் கையாள்வதில் ஈடுபட்டுள்ளது. இந்த பேரிடரில் இந்தியா தனது திறனையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில் நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் மற்றும் ஜெய்ப்பூரில் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் துவக்கம் ஆகியவை இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும். ராஜஸ்தானின் அனைத்து குடிமக்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ராஜஸ்தானின் மகன்கள் மற்றும் மகள்களையும் வாழ்த்த விரும்புகிறேன். பிளாஸ்டிக் மற்றும் தொடர்புடைய கழிவு மேலாண்மை விதிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஜெய்ப்பூர் உட்பட நாட்டின் 10 சிபெட் மையங்களிலும் நடந்து வருகிறது. இந்த முயற்சிக்கு நாட்டின் அனைத்து பிரமுகர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

2014 முதல் ராஜஸ்தானில் 23 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இவற்றில் ஏழு மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இன்று பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தெளசாவில் புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் தொடங்கியுள்ளது. இங்கிருந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் எங்கள் கவுரவ எம்.பி.க்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் மருத்துவக் கல்லூரியின் நன்மைகளை பட்டியலிடுவார்கள். இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் மாநில அரசின் ஒத்துழைப்புடன் சரியான நேரத்தில் முடிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

சில தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டின் மருத்துவ முறைகளின் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2001ல், குஜராத் முதல்வராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தபோது, அங்கு சுகாதாரத் துறை சவால்கள் நிறைந்ததாக இருந்தது. மருத்துவ உள்கட்டமைப்பு, மருத்துவக் கல்வி அல்லது மருத்துவ வசதிகளாக இருந்தாலும், அனைத்திலும் வேலையை விரைவுப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. நாங்கள் சவாலை ஏற்றுக்கொண்டு விஷயங்களை ஒவ்வொன்றாக மாற்ற முயற்சித்தோம். முக்கியமந்திரி அம்ருதும் யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதி தொடங்கப்பட்டது. சிரஞ்சீவி யோஜனாவின் கீழ், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு வர ஊக்குவிக்கப்பட்டனர், இது தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் பெரும் வெற்றியைப் பெற்றது. மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் அயராத முயற்சியால் குஜராத் மருத்துவ இடங்களை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

முதலமைச்சராக பணியாற்றியபோது நான் சந்தித்த நமது சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகளை நீக்க கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்கள் அரசியலமைப்பின் கீழ் கூட்டாட்சி கட்டமைப்பின் கருத்து பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அதன் படி, ஆரோக்கியம் மாநில அரசின் பொறுப்பு. நான் மாநிலத்தின் முதல்வராக நீண்ட காலம் இருந்ததால், அதன் கஷ்டங்களை அறிந்திருந்தேன். எனவே, ஆரோக்கியம் என்பது மாநிலத்தின் பொறுப்பாக இருந்தாலும் இந்திய அரசு என்ற வகையில் அந்த திசையில் முயற்சிகளைத் தொடங்கினோம். மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், நாட்டின் சுகாதார அமைப்பு துண்டு துண்டாக இருந்தது. தனிப்பட்ட மாநிலங்களின் மருத்துவ முறைகளில் தேசிய அளவில் கூட்டு அணுகுமுறை இல்லை. இந்தியா போன்ற நாட்டில் சிறந்த சுகாதார வசதிகள் மாநில தலைநகரங்கள் அல்லது ஒரு சில மெட்ரோ நகரங்களில் இருந்தாலும், ஏழை குடும்பங்கள் வேலைக்காக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது, ​​மாநில எல்லைகளில் வரையறுக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்கள் பயனுள்ளதாக இல்லை. இதேபோல், ஆரம்ப சுகாதாரத்துக்கும் பெரிய மருத்துவமனைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. நமது பாரம்பரிய மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு குறைபாடு இருந்தது. நிர்வாகத்தில் உள்ள இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டின் சுகாதாரத் துறையை மாற்ற, நாங்கள் ஒரு தேசிய அணுகுமுறையாக, புதிய தேசிய சுகாதாரக் கொள்கையில் பணியாற்றினோம். ஸ்வச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் மற்றும் இப்போது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் போன்ற முயற்சிகள் இதன் ஒரு பகுதியாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் இதுவரை 3.5 லட்சம் மக்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் சுமார் 2,500 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் இன்று ராஜஸ்தானில் செயல்படத் தொடங்கியுள்ளன. தடுப்பு சுகாதாரத்திலும் அரசு கவனம் செலுத்துகிறது. நாங்கள் ஒரு புதிய ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் ஆயுர்வேதத்தையும் யோகாவையும் ஊக்குவிக்கிறோம்.

சகோதர சகோதரிகளே,

எய்ம்ஸ் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் வலையமைப்பை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பரப்புவது மிகவும் முக்கியம். ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மாறாக இந்தியா இன்று 22க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் என்ற இடத்தை நோக்கி நகர்கிறது என்பதை இன்று நாம் திருப்தியுடன் கூறலாம். இந்த 6-7 ஆண்டுகளில், 170 க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் மொத்த மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை இடங்கள் 2014 வரை 82,000 க்கு அருகில் இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 1.40 லட்சம் இடங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதாவது, இன்று அதிகமான இளைஞர்கள் மருத்துவராகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் ராஜஸ்தானில் மருத்துவ இடங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது. யுஜி இடங்கள் 2,000 லிருந்து 4,000 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பிஜி இடங்கள் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தன, இது விரைவில் 2100 ஆக மாறும்.

சகோதர சகோதரிகளே,

இன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அல்லது குறைந்தப்பட்சம் முதுகலை மருத்துவக் கல்வியை வழங்கும் ஒரு நிறுவனமாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம். கடந்த சில ஆண்டுகளில், மருத்துவக் கல்வி தொடர்பான நிர்வாகத்திலிருந்து மற்ற கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் வரை பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முந்தைய மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியா-எம்சிஐ-யின் முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, பாராளுமன்றம் அதை மணிக்கணக்கில் விவாதித்தது என்பதை கடந்த காலத்தில் பார்த்தோம். பல ஆண்டுகளாக, அரசாங்கங்கள் இது சம்பந்தமாக ஏதாவது செய்ய நினைத்திருந்தாலும், அது செய்யப்படவில்லை. நானும் பல சவால்களை எதிர்கொண்டேன். பல குழுக்கள் பல தடைகளை ஏற்படுத்தின. அதை சரிசெய்ய நாங்களும் நிறைய சகிக்க வேண்டியிருந்தது. இப்போது இந்த ஏற்பாடுகளின் பொறுப்பு தேசிய மருத்துவ ஆணையத்திடம் உள்ளது. அதன் மகத்தான தாக்கம் இப்போது நாட்டின் சுகாதாரம், மனித வளம் மற்றும் சுகாதார சேவைகளில் தெரியும்.

நண்பர்களே,

இன்றைய தேவைகளுக்கு ஏற்ப சுகாதார அமைப்பில் மாற்றங்கள் அவசியம். மருத்துவ கல்விக்கும் சுகாதார சேவை வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், மூன்று-நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது, நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சுகாதார சேவைகளை வழங்குவதில் அது நீண்ட தூரம் செல்லும். நல்ல மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவர்களுடனான நியமனங்கள் ஒரே கிளிக்கில் செய்யப்படும்.

சகோதர சகோதரிகளே,

சுகாதாரத்துறையில் திறமையான மனிதவளம் சுகாதார சேவைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கொரோனா காலத்தில் இதை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். மத்திய அரசின் ‘இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி’ பிரச்சாரத்தின் வெற்றி இதன் பிரதிபலிப்பாகும். இன்று, இந்தியாவில் 88 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ராஜஸ்தானிலும் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆயிரக்கணக்கான மையங்களில் தொடர்ந்து தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவத் துறையில் இந்தத் திறனை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆங்கில மொழியில் மட்டுமே மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் படிப்பது மற்றொரு தடையாக உள்ளது. இப்போது புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பும் உள்ளது. ஆங்கில ஊடகப் பள்ளிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்காத ஏழைகளின் மகன்கள் மற்றும் மகள்கள் இப்போது மருத்துவர்களாக மாறுவதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய முடியும். மருத்துவக் கல்வி தொடர்பான வாய்ப்புகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதும் அவசியம்.

நண்பர்களே,

வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றான பெட்ரோ-ரசாயனத் தொழிலுக்கு திறமையான மனிதவளம் இன்றைய காலத்தின் தேவை. ராஜஸ்தானின் புதிய பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பெட்ரோ கெமிக்கல்ஸின் பயன்பாடு இப்போதெல்லாம் விவசாயம், சுகாதாரம் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் என பல துறைகளில் அதிகரித்து வருகிறது. எனவே, திறமையான இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

நண்பர்களே,

இன்று நாங்கள் இந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை துவக்கி வைக்கும்போது, 13-14 ஆண்டுகளுக்கு முன்பு நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் யோசனையில் நாங்கள் செயல்படத் தொடங்கிய நேரம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த நேரத்தில், சிலர் இந்த யோசனையை பார்த்து சிரித்தனர் மற்றும் இந்த பல்கலைக்கழகத்தின் தேவையை கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த யோசனையை நாங்கள் கைவிடவில்லை. தலைநகரான காந்திநகரில் நிலம் ஒதுக்கப்பட்டு பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம்- PDPU தொடங்கப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள் அங்கு படிக்க போட்டியிடுகின்றனர்.

நண்பர்களே,

ராஜஸ்தான் சுத்திகரிப்பு திட்டம் பார்மரில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தத் திட்டத்தில் 70,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டம் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெறும் நிபுணர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும். ராஜஸ்தானில் நடந்து வரும் நகர எரிவாயு விநியோகப் பணியும் இளைஞர்களுக்கு நிறைய சாத்தியங்களைக் கொண்டுள்ளது. 2014 வரை, ராஜஸ்தானில் ஒரு நகரத்தில் மட்டுமே எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி இருந்தது. இன்று ராஜஸ்தானின் 17 மாவட்டங்கள் நகர எரிவாயு விநியோக நெட்வொர்க்கிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டமும் குழாய் வாயு நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும்.

சகோதர சகோதரிகளே,

ராஜஸ்தானின் பெரும் பகுதி பாலைவனம் என்பதுடன் இந்திய எல்லைப்பகுதியாகும்.கடினமான புவியியல் நிலைமைகள் காரணமாக, நமது தாய்மார்களும், சகோதரிகளும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். நான் பல ஆண்டுகளாக ராஜஸ்தானின் தொலைதூர பகுதிகளுக்கு பயணம் செய்து வருகிறேன். கழிப்பறை, மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகள் இல்லாத நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு கழிப்பறை, மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகள் கிடைப்பதால் இன்று வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது ராஜஸ்தானின் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் நீரைப் பெறத் தொடங்கியுள்ளன.

நண்பர்களே,

ராஜஸ்தானின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது. ராஜஸ்தானின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு வசதியும் வாழ்க்கை வசதியும் அதிகரிக்கும் போது அது எனக்கு திருப்தியை அளிக்கிறது. கடந்த 6-7 ஆண்டுகளில், மத்திய அரசின் வீட்டுத் திட்டங்கள் மூலம் ராஜஸ்தானில் ஏழைகளுக்காக 13 லட்சத்துக்கும் அதிகமான நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ், ராஜஸ்தானின் 74 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 11,000 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ், மாநில விவசாயிகளின் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

எல்லைப் பகுதி வளர்ச்சியைப் பொறுத்தவரை ராஜஸ்தானிற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அமைத்தல், புதிய ரயில் பாதைகள், நகர எரிவாயு விநியோகம் உட்பட டஜன் கணக்கான திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. நாட்டின் ரயில்வேயை மாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலிருந்து வருகிறது. இது பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

சகோதர சகோதரிகளே,

ராஜஸ்தானின் திறனை அதிகரிக்க வேண்டும் அதேநேரத்தில் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நம் அனைவரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். சப்கா பிராயா என்ற மந்திரத்துடன் (அனைவரின் முயற்சிகளுடனும்) இந்த சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் நாம் புது எழுச்சியுடன் முன்னேற வேண்டும். சுதந்திரத்தின் இந்த நல்ல சகாப்தம் ராஜஸ்தானின் வளர்ச்சியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் ராஜஸ்தான் முதல்வரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவர் பணிகளின் நீண்ட பட்டியலைப் படித்தார். என்னை மிகவும் நம்பிய ராஜஸ்தான் முதல்வருக்கு நன்றி. இது ஜனநாயகத்தில் ஒரு பெரிய பலம். அவரது அரசியல் சித்தாந்தம் என்னிலிருந்து வேறுபட்டது, ஆனால் அசோக் ஜி என்னை நம்புகிறார், எனவே, அவர் பல விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டார். இந்த நட்பும் நம்பிக்கையும் ஜனநாயகத்தின் பெரும் பலம். ராஜஸ்தான் மக்களுக்கு மீண்டும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

******



(Release ID: 1760600) Visitor Counter : 163