இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு தழுவிய தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் பிரயாக்ராஜில் தொடங்கி வைத்தார்

Posted On: 01 OCT 2021 6:48PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இருந்து நாடு தழுவிய தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைக்கும் இயக்கத்தில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று பங்கேற்றார்.

உத்தரப்பிரதேச துணை முதல்வர் திரு கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் உத்தரப் பிரதேச இளைஞர் நலம், பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் திரு உபேந்திர திவாரி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மத்திய இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை செயலாளர்  திருமதி உஷா சர்மா மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாக்கூர், தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்க இந்த சங்க நகரத்தை விட சிறந்த இடம் இருக்க முடியாது என்று கூறினார். இங்கிருந்து வெளிவரும் செய்தி முழு நாட்டையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாக பிரயாக்ராஜ் இருந்துள்ளது, உலகிலேயே மிகப்பெரிய தூய்மை இயக்கத்தை தொடங்குவதன் மூலம் மீண்டும் வரலாறு இங்கு உருவாக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2021 அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும் இந்த திட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு திரு தாக்கூர் வேண்டுகோள் விடுத்தார். "இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம், நமது சுதந்திர போராட்ட வீரர்கள் காலனித்துவவாதிகளிடமிருந்து நாட்டை விடுவித்தனர், இப்போது குப்பையில் இருந்து இளைஞர்கள் நாட்டை விடுவிப்பார்கள். சுதந்திரப் போராளிகள் உயிர் தியாகம் செய்தனர், நாங்கள் உங்களின் பங்களிப்பை தான் கேட்கிறோம்," என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் தன்னார்வலர்களை அமைச்சர் ஊக்கப்படுத்தினார்.

வெறும் கோஷங்கள் மட்டும் போதாது, களத்தில் நடவடிக்கை தேவை என்று திரு தாக்கூர் கூறினார். அதற்கு அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் குப்பைகள் நோயை உருவாக்குகிறது என்ற உணர்வு நமக்கு வரும் போது தான் அது நடக்கும் என்றும் அவர் கூறினார்.

சுதந்திர இயக்கமாக இருந்தாலும் சரி, தூய்மை இயக்கமாக இருந்தாலும் சரி, இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், மாற்றத்தின் முகவர்களாக இந்த முறையும் இளைஞர்கள் மாறுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760072

*****************


(Release ID: 1760143) Visitor Counter : 236