பிரதமர் அலுவலகம்

ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 27 SEP 2021 2:19PM by PIB Chennai

வணக்கம்!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சக அமைச்சர்களே, சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா அவர்களே, இதர அமைச்சரவை சகாக்களே, மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்களே, சுகாதார மேலாண்மையுடன் தொடர்புள்ளவர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு இன்று ஓர் மிக முக்கியமான நாள்‌. நாட்டின் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் இன்று புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. இது சாதாரணமானது அல்ல, விசித்திரமான கட்டம்.

நண்பர்களே!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் பிறந்தநாள். அன்று நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இன்று முதல் ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கமும் அமல்படுத்தப்படவிருப்பதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் இந்த இயக்கம் மிக முக்கியமான பங்கு வகிக்கும். தொழில்நுட்பம் வாயிலாக நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளுடன் நோயாளிகளை இணைத்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம், வலுவான தொழில்நுட்பத் தளத்துடன் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே!

சாமானிய மக்களை மின்னணு தொழில்நுட்பத்துடன் இணைத்து, மின்னணு இந்தியா பிரச்சாரம் நாட்டை பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. 130 கோடி ஆதார் எண்கள், 118 கோடி செல்பேசி சந்தாதாரர்கள், சுமார் 80 கோடி இணையப் பயனர்கள் மற்றும் ஏறத்தாழ 43 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் முதலியவற்றுடன் நம் நாடு பெருமை கொள்ளலாம். இது போன்ற மிகப்பெரிய உள்கட்டமைப்பு இணைப்புகள் உலகில் வேறு எங்கும் இல்லை. ரேஷன் பொருள்கள் முதல் நிர்வாகச் சேவை வரை அனைத்தையும் விரைவாகவும், வெளிப்படைத்தன்மை வாயிலாகவும் சாமானிய இந்தியருக்கு இந்த மின்னணு உள்கட்டமைப்பு வழங்குகிறது. ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் வசதியின் வாயிலாக மின்னணுப் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகளவில் குறிப்பிடத்தக்க இடத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட -ருபி ரசீதும் மிகப்பெரிய முன்முயற்சியாகும்‌.

நண்பர்களே!

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தியாவின் மின்னணுத் தீர்வுகள் உதவிகரமாக இருந்துள்ளன. உதாரணத்திற்கு ஆரோக்கிய சேது செயலி, கொரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியாக உள்ளது. அதே போல அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 90கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கான சான்றிதழை வழங்குவதில் கோ-வின் தளம் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறது. முன்பதிவு முதல் சான்றிதழைப் பெறுவது வரையிலான இத்தகைய மாபெரும் மின்னணு தளம் வளர்ந்த நாடுகளிடம் கூட இல்லை.

நண்பர்களே!

முன்னெப்போதும் இல்லாத வகையில், கொரோனா காலகட்டத்தில், தொலை மருத்துவச்சேவையும் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. -சஞ்சீவனி மூலம் இதுவரை சுமார் 1.25 கோடி தொலைதூர ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பெருநகரங்களில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களுடன் இந்தச் சேவை இணைக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தடுப்பூசியாகட்டும், அல்லது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதிலாகட்டும், பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்திற்கு அவர்களது முயற்சி மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.

நண்பர்களே!

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், ஏழை மக்களின் பிரச்சினைகளைப் பெருமளவு களைந்துள்ளது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைகளைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களுள் அரை சதவீதம் பேர் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகள்.

நண்பர்களே!

கொரோனாவுக்கு முன்னால், நான் செல்லும் மாநிலங்களில் இருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களது வலியையும் அனுபவத்தையும் உணர்ந்து, அவர்களது கருத்துக்களையும் நான் கேட்பேன். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் பயனடைந்துள்ள நூற்றுக்கணக்கானவர்களை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்களுக்கு தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டம் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு செலவு செய்த ஆயிரம் கோடி ரூபாய், வறுமையில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான குடும்பங்களைக்  காப்பாற்றியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட அரசு அறிமுகப்படுத்தும் சுகாதாரத்தீர்வுகள், தற்போதைய மற்றும் எதிர்கால நாட்டிற்கான மிகப்பெரும் முதலீடாகும்.

சகோதர, சகோதரிகளே!

ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம், சுமுகமான வாழ்விற்கு வழிவகை செய்வதுடன் மருத்துவமனைகளில் உள்ள நடைமுறைகளையும் எளிதானதாக மாற்றும். தற்போது மருத்துவமனைகளின் தொழில்நுட்பம் ஒரே ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவமனைகளின் குழு ஒன்றில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நோயாளி புதிய மருத்துவமனைக்கோ அல்லது புதிய நகருக்கோ செல்லும் போது, அந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டியது இருக்கும். மின்னணு மருத்துவ ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் கடந்த பல ஆண்டுகால கோப்புகள் அனைத்தையும் அவர் எடுத்துச் செல்ல வேண்டும். அவசர காலங்களின் போது இதற்கான வாய்ப்பில்லை. இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் மருத்துவரின் நேரம் வீணாவதுடன் சிகிச்சையின் செலவும் அதிகரிக்கிறது. சிறந்த மருத்துவர் குறித்த தகவல்களை மற்றவர்களிடமிருந்து வாய்மொழியாகவே மக்கள் கேட்டிருக்கின்றனர். மருத்துவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும், அவர்களை எங்கு சந்திப்பது உள்ளிட்ட விவரங்களையும் இனி எளிதில் பெறலாம். இதுபோன்ற பிரச்சினைகளை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!

மின்னணு மருத்துவத் தீர்வுகளின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை ஆயுஷ்மான் பாரத் - மின்னணு இயக்கம் இணைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுமக்களுக்கு மின்னணு சுகாதார அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு நபரின் மருத்துவ ஆவணமும் மின்னணு வாயிலாகப் பாதுகாக்கப்படும்மின்னணு சுகாதார அட்டையின் மூலம் நோயாளியும், மருத்துவரும் தேவை ஏற்படும் போது பழைய ஆவணங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெறும். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் ஆகியவை பதிவு செய்யப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மருத்துவத் துறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு பங்குதாரரும் ஒற்றை தளத்தின் கீழ் இந்த மின்னணு இயக்கத்தால் இணைக்கப்படுவார்கள்.

நண்பர்களே!

நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான் இந்த இயக்கத்தின் மிகப்பெரிய பயனாளிகள். நோயாளிக்குப் பரிச்சயமான மொழியை அறிந்த மருத்துவரை, அவர் கூறுவதைப் புரிந்துகொள்ளக்கூடிய மருத்துவரை, குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரை நோயாளி எளிதில் கண்டறிவது இதன் சிறப்பம்சங்களுள் ஒன்று. மருத்துவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்களையும் எளிதில் கண்டறியலாம்.

சகோதர, சகோதரிகளே!

சுகாதாரச் சேவைகளை எளிதாக அணுகக்கூடிய வகையிலும், வழங்கும் வகையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம், கடந்த 6 - 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். மருத்துவம் தொடர்பான பல தசாப்தங்கள் பழமை வாய்ந்த அணுகுமுறையை கடந்த காலங்களில் இந்தியா மாற்றியுள்ளது. முழுமையான மற்றும் உள்ளடக்கிய மருத்துவ மாதிரியின் வளர்ச்சிப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. யோகா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய அமைப்பு முறையை வலியுறுத்தி, நோயிலிருந்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைப் பாதுகாப்பதற்காக அனைத்துத் திட்டங்களும் தொடங்கப்பட்டன. மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நாட்டில் சிகிச்சைக்கான வசதிகளை அதிகரிக்கவும் புதிய மருத்துவக் கொள்கை வடிவமைக்கப்பட்டது. தற்போது, எய்ம்ஸ் போன்ற மிகப்பெரிய மற்றும் நவீன மருத்துவ நிறுவனங்களும் நம்நாட்டில் நிறுவப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கட்டமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நண்பர்களே!

இந்தியாவில் உள்ள மருத்துவ வசதிகளை அதிகரிப்பதற்கு, கிராமப்புறங்களின் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியம். ஆரம்ப சுகாதார இணைப்பு தற்போது வலுப்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 80,000 மையங்கள் இயங்கி வருகின்றன. தீவிர நோய்களை உரிய நேரத்தில் கண்டறிவதற்கு வசதியாக இதுபோன்ற மையங்களின் வாயிலாக விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே!

சர்வதேசப் பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ உள்கட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாவட்ட மருத்துவமனைகளில் அவசரகாலப் பிரிவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதுடன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் பிராணவாயு உற்பத்தி அமைப்புகளும் நிறுவப்படுகின்றன.

நண்பர்களே!

இந்தியாவின் மருத்துவத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மருத்துவக்கல்வியில் முன்னெப்போதுமில்லாத சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 7-8 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவம், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மருந்துகளில் தற்சார்பு மற்றும் உபகரணம் சம்பந்தமான நவீன தொழில்நுட்பப்பணிகள் இயக்ககதியில் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் மூலப்பொருள்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படுவது தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது.

நண்பர்களே!

மேம்பட்ட மருத்துவ அமைப்புமுறையுடன்ஏழைகளும் நடுத்தரக் குடும்பத்தினரும் மருந்துகளுக்கு குறைந்த அளவில் செலவு செய்வதும் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்ற சேவைகள் மற்றும் பொருள்களின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இது போன்ற மக்களுக்கு 8,000க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளன.

நண்பர்களே!

உலக சுற்றுலா தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுற்றுலாவுடன்  மருத்துவத்துறைக்கு மிக வலுவான உறவு முறை உள்ளது. சுகாதாரக் கட்டமைப்பு ஒருங்கிணைந்தும், வலுவுடனும் இருந்தால் சுற்றுலாத்துறையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் கொரோனாவிற்குப் பிறகு மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நண்பர்களே!

இந்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அமைப்புமுறை மீதான உலகின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நம்நாட்டின் மருத்துவர்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதுடன், இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தும் வருகின்றனர். நமது தடுப்பூசித் திட்டம், கோ-வின் தளம் மற்றும் மருந்தகத்துறை ஆகியவை இந்தியாவின் தோற்றத்தை மேம்படுத்தியுள்ளன. மிகப்பெரிய கனவுகளை நனவாக்கவும், உறுதிமொழிகளை நிறைவேற்றவும் சுதந்திரயுகத்தில் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பாதை மிகவும் முக்கியம். ஆயுஷ்மான் பாரத் - மின்னணு இயக்கத்திற்காக மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

                                                                                                                                         ----



(Release ID: 1758975) Visitor Counter : 313