பிரதமர் அலுவலகம்
‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் பிரதமரின் காணொளி உரை
நாம் ஒற்றுமையுடன் இருக்கும்போது மேலும் வலிமையானவர்களாகவும், சிறந்தவர்களாகவும் உள்ளோம் என்பதை கோவிட் நமக்குக் கற்றுக் கொடுத்தது: பிரதமர்
"எல்லாவற்றையும் விட, மனிதர்களிடையே நெகிழ்தன்மை நிலவியது என்பதை இனிவரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும்"
ஏழைகள் மேலும் மேலும் அரசாங்கங்களைச் சார்ந்து வாழச்செய்வதன் மூலம் வறுமையை எதிர்த்துப் போராட முடியாது. ஏழைகள் அரசாங்கங்களை நம்பகமான கூட்டாளிகளாகப் பார்க்கத் தொடங்கும் போது வறுமையை எதிர்த்துப் போராட முடியும் "
"ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அவர்கள் வறுமையை எதிர்த்துப் போராடும் வலிமை பெறுகிறார்கள்"
"இயற்கையுடன் ஒத்துப்போகும் வாழ்க்கை முறையை மேற்கொள்வதே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எளிய, மிகவும் வெற்றிகரமான வழியாகும்"
"மகாத்மா காந்தி உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவர். அவர் கார்பன் தடமற்ற ஒரு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தார். அவர் தாம் எதைச் செய்தாலும், அவை அனைத்திலும், நமது கோளின் நலனை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்தார் &
Posted On:
25 SEP 2021 10:46PM by PIB Chennai
செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் 24 மணி நேர நிகழ்ச்சியான 'குளோபல் சிட்டிசன் லைவ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி உரையாற்றினார். மும்பை, நியூயார்க், பாரிஸ், ரியோ டி ஜெனிரோ, சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாகோஸ், சியோல் ஆகிய பெரு நகரங்களில் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நாம் ஒற்றுமையுடன் இருக்கும்போது மேலும் வலிமையானவர்களாகவும், சிறந்தவர்களாகவும் உள்ளோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, பெருந்தொற்றுநோயின் சவால்கள் பற்றி பிரதமர் பேசினார்.
"நமது கோவிட்-19 வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தங்களால் முடிந்ததைச் சிறந்த வகையில் செய்தபோது, இந்தக் கூட்டுணர்வின் சில அம்சங்களை நாம் கண்டோம். சாதனையளவிலான நேரத்தில் புதிய தடுப்பூசிகளை உருவாக்கிய நமது விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடமும் இந்த உணர்வை நாம் கண்டோம். எல்லாவற்றையும் விட, மனிதர்களிடையே நெகிழ்தன்மை நிலவியது என்பதை இனிவரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும்”என்று பிரதமர் கூறினார்
நாம் எதிர்கொள்ளும் சவால்களில், கோவிட் மட்டுமல்லாமல், வறுமை மிகவும் கடுமையான சவாலாக உள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழைகள் மேலும் மேலும் அரசாங்கங்களைச் சார்ந்து வாழச்செய்வதன் மூலம் வறுமையை எதிர்த்துப் போராட முடியாது. ஏழைகள் அரசாங்கங்களை நம்பகமான கூட்டாளிகளாகப் பார்க்கத் தொடங்கும் போது வறுமையை எதிர்த்துப் போராட முடியும் "வறுமை என்னும் தீய வட்டத்தை ஒரேயடியாக உடைத்தெறிய உதவும் உள்கட்டமைப்பை வழங்கும் நம்பகமான கூட்டாளிகள், அரசாங்கங்கள்" என்று பிரதமர் கூறினார்.
ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் போது, வறுமையை எதிர்த்து போராடும் வலிமை அவர்களுக்குக் கிடைக்கிறது என்று பிரதமர் விளக்கினார். வங்கியற்றவர்களுக்கு வங்கிச்சேவை, மில்லியன் கணக்கானவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குதல், 500 மில்லியன் இந்தியர்களுக்கு இலவச மற்றும் தரமான சுகாதார சேவையை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அவர் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான உதாரணங்களாக எடுத்துரைத்தார்.
நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடற்றவர்களுக்காக கட்டப்பட்ட 30 மில்லியன் வீடுகளைப் பற்றி பேசிய திரு.மோடி, ஒரு வீடு என்பது தங்குமிடம் மட்டுமல்ல என்று வலியுறுத்தினார். 'தலைக்கு மேல் ஒரு கூரை, மக்களுக்கு கௌரவத்தை அளிக்கிறது.', என்றார். இத்திட்டமும், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான 'வெகுஜன இயக்கம்'; அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பிற்காக ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு மேல் செலவழிப்பது; 800 மில்லியன் குடிமக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுவது மற்றும் பல முயற்சிகளும் வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் என்று பிரதமர் கூறினார்.
பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் குறித்தும் பிரதமர் விவாதித்தார். "இயற்கையுடன் ஒத்துப்போகும் வாழ்க்கை முறையை மேற்கொள்வதே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எளிய, மிகவும் வெற்றிகரமான வழியாகும்" என்றார். மகாத்மா காந்தி “உலகின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவர் "என்று கூறிய பிரதமர், கார்பன் தடமற்ற வாழ்க்கை முறையை காந்தியடிகள் எவ்வாறு மேற்கொண்டார் என்பதை விவரித்தார்.தாம் என்ன செய்தாலும், காந்தியடிகள் நமது கோளின் நலனை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்தார். மகாத்மாவால் முன்வைக்கப்பட்ட அறக்கட்டளை கோட்பாட்டை பிரதமர் எடுத்துரைத்தார். “இக்கோளைப் பராமரிக்கும் கடமையுடன், நாம் அனைவரும் இங்கு அறங்காவலர்களாக இருக்கிறோம்” என்று அவர் கூறினார். பாரிஸ் உறுதிமொழிகளைத் தொடர்ந்து பின்பற்றி அதன்வழி நடக்கும் ஒரே ஜி -20 நாடு, இந்தியா மட்டுமே. சர்வதேச சூரிய கூட்டணி மற்றும் பேரிடர் நெகிழ்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பின் கீழ் உலகை ஒருங்கிணைத்ததில் இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் கூறினார்.
***
(Release ID: 1758576)
Visitor Counter : 236
Read this release in:
Bengali
,
Assamese
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam