இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

2-வது அல்டிமேட் லடாக் மிதிவண்டி சவால்: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கொடியசைத்துத் துவக்கம்

Posted On: 25 SEP 2021 11:13AM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மஹோத்சவம் மற்றும் ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, அல்டிமேட் லடாக் மிதிவண்டி சவாலின் 2-வது பதிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து லடாக் காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்திய மக்களிடையே உடற்தகுதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய உந்துசக்தி என்று கூறினார். கடல் மட்டத்திலிருந்து 11000 அடி மேலே, லடாக் இளைஞர்கள் மிதிவண்டி போட்டியில் கலந்து கொள்வதை மேன்மைமிக்கதாக தாம் கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மிதிவண்டி போட்டியை ஊக்குவித்து, ஃபிட் இந்தியா பிரச்சாரத்தில் பங்கேற்கும் இளைஞர்களை அவர் பாராட்டினார். அதேபோல லடாக் காவல்துறைக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஃபிட் இந்தியா பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்துகையில், “மிதிவண்டியை ஓட்டுவோம், ஆரோக்கியமாக இருப்போம், இந்தியாவையும் ஆரோக்கியமானதாக்குவோம். இளைஞர்கள் உடல் தகுதியுடன் இருந்தால், இந்தியாவும் ஆரோக்கியமாக இருக்கும்’, என்று திரு தாக்கூர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜம்யாங் செரிங் நம்கியால் உடன் அமைச்சரும் மிதிவண்டிப் போட்டியில் கலந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757953

*****************



(Release ID: 1758059) Visitor Counter : 224